Monday, December 2, 2013

வேத சப்த மஹிமை

வேத சப்த மஹிமை
-----------------------------
பரமாசார்யாளின் எளிமையான விளக்கம்

நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒரு சமயம் இருந்தபோது நடந்த சம்பவம். பெரியவாள் தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் கூறிக்கொண்டிருந்தார்கள்.அந்த இடத்திற்கு ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணன் வந்திருந்தான். அவனுக்கு வேதம் தெரியாது. ’என்னவோ அர்த்தமில்லாமல் முணமுணக்கிறதே இந்த கோஷ்டி. இதனால் உலகத்திற்கு என்ன ப்ரயோஜனம்? ஏழை எளியவர்களுக்கு ஏதாவது திட்டமிட்டு செலவழித்தாலும் புண்யமாவது கிடைக்குமே’ என்று கூறினானாம். இது எப்படியோ பெரியவாள் காதுகளையும் எட்டிவிட்டது....

அன்று மாலை பூஜாகாலத்திற்குப் பிறகு பெரியவாள் அருள்வாக்கு கூற அமர்ந்தார். காலையில் கம்ப்ளெய்ன்ட் செய்த ஆசாமியும் அங்கு, மாலை, கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவனருகில் சென்று மடத்து சமையல்காரனைக் கூப்பிட்டார். ’இந்த ப்ராம்மணனுக்குப் பகல் சாப்பாடு நன்றாக இல்லையாம். ராத்திரி கொஞ்சம் ஸ்பெஷலாக கவனித்துக்கொள்" என்று கூறினார். அந்த சமையல்காரன் இந்த ப்ராம்மணனைப் பார்த்து முணமுணத்துக் கொண்டே போனான். இந்த பிராம்மணனுக்கு படுகோபம் வந்து விட்டது. "ஸ்வாமி! பார்த்தேளா! என்னமோ முணமுணத்துக் கொண்டே போகிறானே பார்த்தேளா?" என்றான் அந்த பிராம்மணன்.

நம் தெய்வம் புன்முறுவலுடன் கேட்கிறார். "அவன் என்ன முணமுணத்தான் என்று தெரியுமா?" என்று. "அது காதில் விழவில்லை. ஆனால் முணமுணத்ததுகாதில் நன்றாக விழுந்தது" என்றான் பிராம்மணன்.

"அவன் என்ன சொன்னான் என்று புரியாத முணமுணப்புக்கு, அது என்ன வார்த்தை, யாரைப்பற்றி என்று தெரியாமல் இருக்கும்போது, அந்த முணமுணப்பு சப்தம் உன்னிடம் ஒரு ரியாக்ஷன் ஏற்படுத்துமானால், வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணமுணப்பு, அந்த அட்மாஸ்ஃபியரில் எத்தகய உயர்ந்த ரியாக்ஷன் ஏற்படுத்தும் என்பது உனக்குக் காலையில் ஞாபகமில்லை போலிருக்கு" என்று சொன்னார்.

சப்தத்திற்கு, வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை, ஆசார்யாள் சொல்லுகிறமாதிரி யார் நமக்கு மனதில் பதியும்படி சொல்லமுடியப்போகிறது!

அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?

No comments:

Post a Comment