Wednesday, April 9, 2014

மீரா

மீரா
கண்ணுக்குத் தெரியாத கடவுள் மீது பக்தி வைக்கலாம். காதல் கொள்ளலாமா?
பூ நாயகன் & சந்திரமுகி தம்பதியர்க்கு இந்த சந்தேகத்தை ஊட்டியவள் மீராபாய். சிறு வயது முதலே கிருஷ்ணனிடம் பிரேமை கொண்டிருந்தாள் அவள். சிறு அளவு கிருஷ்ணர் விக்ரகம் ஒன்றை எப்போதும் தன்னுடனேயே வைத்திருப்பாள். அதனுடன் விளையாடுவாள். அதனைக் கொஞ்சுவாள். அதனுடன் பாடுவாள். ஆடுவாள். பேசி மகிழ்வாள். இரவில் தூங்கும்போதும் அதனை அரவணைத்தபடிதான் படுத்திருப்பாள்.
அது சிறுபிள்ளை விளையாட்டு என்றுதான் பெற்றோர்கள் நினைத்திருந்தார்கள். பொம்மையுடன் எந்தக் குழந்தைதான் விளையாடாது? அந்த பொம்மைக்கு உயிர் இருப்பதாகவே பாவித்து, அதனுடன் பேசுவதும் அது பதில் சொல்வதாக பாவித்து கிளுகிளுவென சிரிப்பதும் அது பேசாமலிருப்பதுபோல பாவித்துக் கொண்டு, அதனை கோபிப்பதும்... எல்லா சின்னக் குழந்தைகளுக்கும் உரித்தான விளையாட்டுத்தானே?
ஆனால் மீரா வித்தியாசமான குழந்தையாக இருந்தாள். கிருஷ்ணன் சிலையை உயிரோட்டமுள்ள நபராகவே பாவித்தாள். அந்த நபரும் தனக்கு உற்ற தோழனாக மட்டும் இல்லாமல், நெருங்கின உறவினனாக, மனதுக்குள் நிரந்தர வாசம் செய்பவனாகவே தோன்றினான். அந்தச் சிறு வயதிலேயே கிருஷ்ணனை (அந்த பொம்மையை) தன் கணவனாகவே கருதிவிட்ட அப்பாவியாக இருந்தாள் மீரா.
‘‘கிருஷ்ணன் என்னுடன் பேசுகிறான். எனக்காகப் பாடுகிறான். என் பாடலுக்கு ஆடுகிறான். என்னுடன் கை கோர்த்து விளையாடுகிறான். என்னோடு இரண்டறக் கலக்கிறான். எனக்குத் தெரிகிறது. எனக்குப் புரிகிறது. நான் உள் மனதில் ஒவ்வொரு அணுவிலும் இதை உணர்கிறேன். என் சொந்த அனுபவம் இது. உங்களுக்கு இது புரியவில்லை என்றால் அது என் தவறல்ல. என் அனுபவத்தைப் பொறுத்தவரை உண்மை” என்பாள் மீரா.
‘‘இது சாத்தியமா?” சிலைக்கு வழிபாடு செய்கிறோம். மலர் தூவுகிறோம். துதி பாடுகிறோம். நிவேதனம் செய்கிறோம். இதையெல்லாம் அந்த தெய்வம் ஏற்றுக் கொண்டு விட்டதாக மனசுக்குள் நினைத்துக் கொள்கிறோம். நிவேதனப் பொருட்களையெல்லாம் அப்புறம் நாமே சாப்பிட்டு விடுகிறோம். ஒரு கற்பனை உணர்வாகத்தான் இந்த பக்தியில் நாம் ஈடுபடுகிறோமே தவிர, அப்படியே உடல் ரீதியாக ஆக்ரமிக்கப்படுகிறோமா என்ன? சில சமயங்களில் உள்ளம் சிலிர்ப்பது வாஸ்தவம்தான். அது நம் பக்தி ஈடுபாட்டின் விளைவு. ஆனால் நிஜ வாழ்க்கையில் பங்கேற்க வேண்டுமென்று எப்படி எதிர்பார்ப்பது?” என்று குழம்புவார்கள் அவளுடைய பெற்றோர்.
இவளுடைய இந்தப் பித்துப் பிடித்த நிலை ஊராரின் பரிகாசத்துக்கும் ஆளாகியது. அதனாலேயே அவளுடைய பெற்றோரும் மிகுந்த வேதனைக்கு உள்ளானார்கள்.
வட இந்தியாவில் மேவார் ஒரு சிற்றரசு. அதன் மன்னரான கும்பராணா, மீராவைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவளுடைய பக்தியை பெரிதும் போற்றினார். அவளைத் தான் மணக்க விரும்புவதாகவும் சொல்லி அனுப்பினார். இத்தனைக்கும் மன்னருக்கு ஏற்கனவே இரண்டு மனைவியர் இருந்தனர். அவ்விருவரும் லௌகீக வாழ்க்கையில்தான் ஆர்வம் கொண்டிருந்தார்களே தவிர, இறைவழிபாட்டில் ஈடுபாடு கொள்ளவில்லை. அடிப்படையில் ஆன்மிகரான ராணா, தன் ஞானத் தேடலுக்கு மீரா சிறந்த வழிகாட்டியாகத் திகழ்வாள் என்றே கருதினார்.
மீராவின் பெற்றோரும் மீராவால் தமக்கு ஏற்பட்டிருந்த அபவாதம் நீங்க, அவள் கும்பராணாவை மணப்பதே சரியானது என்று நினைத்தார்கள்.
தன்னுடன் அவள் மேற்கொள்ளவிருக்கும் குடும்ப வாழ்க்கையால், அவளுடைய ஆன்மிக செயல்பாடுகளுக்குத் தான் தடையாக இருக்கப்போவதில்லை என்று ராணா உத்தரவாதம் அளித்தார்.
அத்தோடு மீராவின் கனவில் ஒரு குரல் ஒலித்தது. ‘‘கும்பராணா உன் தெய்வீக உணர்வுகளை மதிப்பவர். ஏனென்றால் அவரும் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக கிருஷ்ணனிடத்தில் தூய அன்பு பூண்டிருப்பவர். நீ குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதால் உன் கிருஷ்ண பூஜைக்கு எந்த பங்கமும் ஏற்படாது. கோபியர்களைச் சற்று சிந்தித்துப் பார். அவர்கள் அனைவரும் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டவர்கள். கணவன், பிள்ளைகள், வீட்டுப் பராமரிப்பு, சமையல் என்று குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டவர்கள்தான். ஆனாலும் அவர்கள் கிருஷ்ண சேவையையும் மறக்கவில்லை. கைவிடவில்லை. நீயும் அவர்களைப் போலவே வாழலாம். உன்னுடைய இந்த கிருஷ்ண பக்தி மேலும் வளர கும்பராணா உதவிகள் செய்வார். ஆகவே, அவரை மணப்பதால் உனக்கு மகிழ்ச்சி பெருகத்தான் செய்யுமே தவிர, அதற்கு எந்த பங்கமும் வந்துவிடாது.”
மீரா தெளிவடைந்தாள். கிருஷ்ணனே கனவில் வந்து சொன்னமாதிரி இருந்தது அவளுக்கு. கும்பராணாவும் ஒரு தீவிர பக்தர் என்பதால், தன்னைப் போலவே அவரும் இறைத்துதி இயற்றுபவர் என்பதால் அவரை மணக்க சம்மதித்தாள், மீரா.
நாடே போற்றும் வண்ணம் மீரா&கும்பராணா திருமணம் சிறப்பாக நடந்தேறியது. தனக்கு அப்படி ஒரு துணை கிடைத்ததில் கும்பராணாவின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவளுக்காக பிரத்யேகமாக ஒரு கிருஷ்ணர் கோயிலையே நிர்மாணித்தார். கோயிலைச் சுற்றி, பக்தர்களும் பஜனை செய்பவர்களும் தங்குவதற்காகத் தனியே இருப்பிடங்களும் அமைத்தார். அன்ன சத்திரங்களும் கட்டினார். வரும் பக்தர்களுக்கெல்லாம் எந்தக் குறையும் தோன்றாத அளவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தார்.
மீரா வெகு சுதந்திரமாக எந்தவித இடையூறுமில்லாமல், கிருஷ்ணன் மீது புதிது புதிதாகப் பாடல்கள் இயற்றி, அவற்றிற்கு இசையால் உயிரூட்டி, கேட்பவர்கள் உள்ளமெல்லாம் உருக இனிய கானமிசைத்து மகிழ்ந்தாள்.
ஆனால் இந்த பக்தியின் மேன்மையை உணராதவர்கள், மீராவுக்கு கும்பராணா தகுதிக்கும் மீறிய சலுகைகளை வழங்கிவிட்டார் என்று குற்றம் சாட்டினார்கள். குறிப்பாக மன்னரின் மூத்த ராணி, ‘‘பஜனை கும்பலுக்காகச் செலவிடும் நேரத்தையும் பணத்தையும் வசதிகளையும் நாட்டு நலனுக்காகச் செலவிடலாம்” என்று குற்றம் சாட்டினாள்.
ராணாவின் தங்கையான ஊதா, மீராவின் பஜனை கோஷ்டியில் இருக்கும் ஆடவர்கள் யாரும் பக்தி மேலீட்டால் அவளிடம் போய்ச் சேரவில்லை என்றும் மீராவின் அழகைக் கண்களால் பருகவே அப்படிச் சேர்ந்திருக்கிறார்கள் என்றும் சொல்லி, மன்னரின் மனதில் குப்பையைச் சேர்த்தாள். அதற்கு உதாரணமாக, மன்னரின் இளைய ராணியின் தம்பி அவ்வாறு சேர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டி வம்பு திரித்தாள்.
மன்னரும் சந்தேகப்பட ஆரம்பித்தார்.
ஆனால் மீரா தீர்மானமாக இருந்தாள். தன் நிலைமையை விளக்கினாள். ‘‘என்னுடைய பணியே பக்தி செய்வதுதான்! இது சிறு பிராயத்திலிருந்தே நான் தீர்மானித்து விட்ட முடிவு. தாங்கள் என்னை மணந்தது உட்பட எல்லாமே கடமை சார்ந்த நிகழ்ச்சிகள்தானே தவிர, அதெல்லாம் நிரந்தரமாகவோ, அந்த நிகழ்ச்சிகளின் தன்மைக்கேற்ப என்னை மாற்றிக் கொள்வதற்கோ அல்ல என்பதே உண்மை. என்னுடன் பக்தர்கள் பாடுகிறார்கள். அவர்கள் அனைவரையும் கிருஷ்ணரின் பக்தர்களாகத்தான் நான் பாவிக்கிறேன். அவர்கள் யார், அவர்கள் அந்தஸ்து என்ன, உயர்ந்தவரா? தாழ்ந்தவரா? என்றெல்லாம் பாகுபடுத்திப் பார்க்க எனக்குத் தெரியவில்லை. காரணம், என் மனசு பூராவும் கிருஷ்ணர் வியாபித்திருக்கிறார். நான் பார்க்கும் நபர்கள், காட்சிகள் எல்லாமே கிருஷ்ண ஸ்வரூபமாகவே எனக்குத் தெரிகின்றன” என்றாள்.
கும்பராணா தவித்தார். தான் தவறு செய்துவிட்டது அவருக்குப் புரிந்தது. ‘‘மீரா கிருஷ்ணனுக்குரியவள். தனி நபருடனான மணவாழ்க்கை அவளுக்கு ஏற்றதல்ல. அவளைத் திருமணம் செய்து கொண்டது தவறு. தேவையின்றி அவளுக்கும் அபவாதம் தேடிக் கொடுத்துவிட்ட தானொரு பாவி” என்றெல்லாம் வேதனைப் பட்டு வருந்தினார். தன் தவறை உணர்ந்து அவளிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
அன்று கோகுலாஷ்டமி. கண்ணன் பிறந்த நாள். யதுநந்தன், யசோதபாலன், கிரிதாரிக்கு கோலாகலமாக விழா எடுத்தார்கள். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பஜனை பாடி, கிறங்கிப் போயிருந்தார்கள். அலங்கரிக்கப்பட்ட கண்ணன் விக்ரகம் உயிரோட்டமுள்ளதாகவே தோன்றியது. வசீகரப் புன்னகை, மயக்கும் விழிகள் பொழிந்த கருணை, மோகன ரூபனாக மதி தடுமாற வைக்கும் கோலத்தில் அந்த மாயவன் நின்றிருந்தான்.
மீரா, கையில் தம்பூராவுடன் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தாள். கண்களில் பெருகிய நீர் அவளுடைய உள்ளத்து உருக்கத்தைக் காட்டியது. அவளுடைய குரலில்தான் எவ்வளவு தெய்வீகம்? இடைவிடாமல், இசை பிசகாமல் பாடிக் கொண்டே இருந்தாள் அவள்.
ஒரு கட்டத்தில் மீரா எழுந்தாள். தம்பூராவை பக்கத்தில் சாய்த்து வைத்தாள். கிருஷ்ணரின் கர்ப்பகிரகத்திற்குள் சென்றாள்.
பளீரென்று ஒரு மின்னல். கர்ப்பகிரகம் ஆயிரம் கோடி சூர்யப் பிரகாசமாக ஒளிர்ந்தது. உள்ளே கிருஷ்ணனைத் தழுவிய கோலத்தில் மீரா. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சந்நதிக் கதவுகள் தாமாக மூடிக் கொண்டன. திக்பிரமையடைந்து அனைவரும் உறைந்து போனதில் மௌனம் அந்த பிராந்தியத்தையே ஆட்கொண்டது.
ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு சந்நதிக் கதவுகள் திறந்தன. உள்ளே மீராவைக் காணோம். கிருஷ்ணனின் சிலை மீது அவள் அணிந்திருந்த புடவை மட்டும் படர்ந்திருந்தது. மீரா மாயமாகியிருந்தாள். ஆனால் அவள் குரல் மட்டும் பாடலாக ஒலித்துக் கொண்டிருந்தது. இப்போது அந்தப் பாடலுக்கு பக்க வாத்தியமாக வேணுகோபாலனின் வேணுகானம்

No comments:

Post a Comment