Wednesday, May 7, 2014

போதிப்பவனே முன்மாதிரியாய்...!

போதிப்பவனே முன்மாதிரியாய்...!

செயல்படாமல் இருக்க முடியாத தன்மையை உடைய அர்ஜுனனுக்கு கர்ம யோகம் தான் சிறந்த வழி என்றும் அதிலும் செயலின் நோக்கமும், பாவனையும் மிக முக்கியம் என்றும் உணர்த்திய ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்ந்து சொல்...கிறார்.

“சிறந்த மனிதன் என்ன செய்கிறானோ அதையே தான் மற்றவர்களும் செய்வார்கள். அவன் காட்டும் உதாரணத்தையே உலகம் பின்பற்றுகிறது.

பார்த்தா! மூன்று உலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை எதுவுமே இல்லை. நான் அடைய வேண்டியது என்று ஒன்று இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை. அப்படியிருந்தும் கூட நான் எப்போதும் செயல் புரிந்தவனாகவே இருக்கிறேன்

நான் தூக்கமின்றி செயலில் ஈடுபடாவிட்டால் மனிதர்கள் ஒவ்வொரு வழியிலும் என்னைப் பின்பற்றி தொழில் செய்யாதிருந்து விடுவார்கள்”

யாரை மிக உயர்வாக நினைக்கிறார்களோ, அவர் செய்வதைப் பின்பற்றித் தானும் அப்படியே செய்ய முற்படுகிற தன்மை மனிதர்களுக்கு இருக்கிறது. எனவே சிறந்த முன்மாதிரிகள் இருப்பது ஒட்டு மொத்த சமுதாயமே சிறப்படைய ஒரு உந்துசக்தி என்பது எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய உண்மை. இக்காலத்தில் எத்தனையோ சீரழிவுகளுக்கு நல்ல முன்மாதிரிகள் நமக்கிடையே மிகவும் குறைவு என்பதும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று வாய் நிறையப் பேசுபவர்கள் அதிக அளவில் இருந்தாலும் அதன் படி வாழ்ந்து காட்டி மனதில் பதிய வைக்கிற மனிதர்கள் இக்காலத்தில் மிக மிகக் குறைவே அல்லவா?

அவதார புருஷனாகிய ஸ்ரீகிருஷ்ணருக்கு செய்ய வேண்டிய கடமையோ, அதன் மூலம் அடைய வேண்டிய நன்மைகளோ இந்த உலகில் இல்லா விட்டாலும் சும்மா இருந்து ஒரு மோசமான முன்னுதாரணமாக இருந்து விடாமல் கர்ம யோகியாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

மகாபாரதப் போரில் ஆயுதம் ஏந்துவதில்லை என்ற கொள்கையில் இருந்த ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிற்கு சாரதியாக இருக்க ஒத்துக் கொள்கிறார். பரம் பொருளானவர் பார்த்தனுக்கு சாரதி அல்லது தேரோட்டியாக இருப்பதா என்று கௌரவம் பார்க்கவில்லை. தொழில் எதுவாக இருந்தாலும் அதில் பெருமை, சிறுமை என்பதில்லை என்று அறிவுறுத்தும் கண்ணன் தன் விஷயத்திலும் அதைக் கடைபிடிக்கத் தயங்கவில்லை.

அந்தக் காலத்தில் சாரதி என்பவனுடைய கடமைகள் எளிதானதாக இல்லை என்பதை இந்தக் கட்டத்தில் நாம் நினைவில் கொள்வது முக்கியம். தேரில் போர் புரியும் வீரன் யுத்தம் ஆரம்பிக்கையில் தேர் ஏறி அது முடிந்த பின் விட்டு விட்டுப் போவது போல சாரதி இருந்து விட முடியாது. அதிகாலையில் குதிரையைக் குளிப்பாட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது ஒரு சாரதியின் வேலை. அதே போல மாலை போர் முடிந்த பின்னும் குதிரைக்குத் தண்ணீர் காட்டி, கொள்ளு கொடுத்து, அதன் உடலில் உள்ள உண்ணிகளை அகற்றி விட்டு அதை இளைப்பாற வைப்பது வரை சாரதியின் வேலை தொடர்கிறது.

இத்தனையும் ஸ்ரீகிருஷ்ணர் செய்தார் என்பதை வியாசரின் மகாபாரதம் முழுமையாகப் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். தன் பட்டுப் பீதாம்பரத்தின் நுனியில் கொள்ளை எடுத்துக் கொண்டு போய் குதிரைகளுக்குக் கொடுக்கும் கண்ணனின் செயல்களை வர்ணிப்பதில் வியாசருக்கு சலிப்பே இல்லை.

இதெல்லாம் ஒரு காரணத்தின் பொருட்டே அக்காலத்தில் செய்யப்பட்டது. சாரதிக்கும், குதிரைக்கும் இடையே மிக நெருங்கிய அன்பு இருந்தால் தான் யுத்தகளத்தில் சாரதியின் எல்லாக் கட்டளைகளையும் குதிரை உற்சாகமாக நிறைவேற்றும். அந்த நெருக்கத்தை ஏற்படுத்தத் தான் குதிரைக்குத் தேவையான அத்தனை வேலைகளையும் சாரதி செய்கிறான். அதனுடன் இருக்கும் நேரத்தை அதிக அளவில் வைத்துக் கொள்கிறான். யுத்தகளத்தில் குதிரை சாரதி இழுத்த இழுப்பிற்கு இயங்கா விட்டால் தேரில் இருப்பவன் தோற்பது உறுதி. எனவே சாரதி என்ற வேலையை ஏற்றுக் கொண்ட ஸ்ரீகிருஷ்ணர் அதை மிகவும் கச்சிதமாக எந்த அருவருப்பும் கொள்ளாமல் ஆனந்தமாக அதை ஆத்மார்த்தமாகச் செய்தார் என்பதை மகாபாரதம் சொல்கிறது.

அதே போல தேரில் இருந்து போர் புரியும் வீரன் எந்தப் பக்கம் தேரைத் திருப்ப வேண்டும் என்று வாய்ச் சொல்லால் சொல்ல பல நேரங்களில் முடியாது. யுத்த களத்தின் ஆரவாரத்தில் அவன் சொல்வது சாரதி காதில் சரியாக பல சமயங்களில் விழாது. எனவே எந்தப்பக்கம் போக வேண்டும் என்பதை வீரன் சாரதி தோளை மிதித்து தான் சமிக்ஞை செய்வான். வலது தோளை மிதித்தால் வலது புறம் செல்ல வேண்டும், இடது தோளை மிதித்தால் இடது புறம் செல்ல வேண்டும்.

இறை அவதாரமான தான் அர்ஜுனன் காலால் மிதிபடுவது கேவலமானது என்று நினைக்காத ஸ்ரீகிருஷ்ணர் மகாபாரதப் போரின் பதினெட்டு நாள்களிலும் அர்ஜுனனின் கால்மிதிகளை வாங்கிக் கொண்டு சாரதி வேலை பார்த்திருக்கிறார் என்பதையும் நினைத்துப் பார்த்தால் தான் கண்ணன் கர்மயோகியாய் இருந்ததன் பெருமை விளங்கும்.

அது மட்டுமல்ல ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகத்தை எந்த அளவு போற்றினார் என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் சொல்லலாம். மஹாராஸ்டிரத்தில் உள்ள பண்டரிபுரம் என்னும் ஊரில் புண்டலீகன் என்ற கிருஷ்ணபக்தன் தன் வயதான பெற்றோருக்கு எல்லா விதமான சேவைகளையும் சிரத்தையுடன் செய்து கொண்டு வந்தான். ஓரிரு நாள் சேவை செய்வது எளிது. ஆனால் பல காலம் தொடர்ந்து அப்படி சேவை செய்வது என்பது உண்மையில் மகத்தான விஷயமே.

தன் பக்தனின் சேவையை மெச்சிய விட்டலன் என்ற வடிவில் ருக்மிணி சகிதம் புண்டலீகன் முன்பு காட்சியளித்தார் ஸ்ரீகிருஷ்ணர். அவர் வந்த போது தாய் தந்தையரின் உடைகளைத் துவைத்துக் கொண்டிருந்தான் புண்டலீகன். தான் வணங்கும் தெய்வத்தை நேரிலேயே காணும் பாக்கியம் கிடைத்த போதும் அந்த வேலையைக் கை விட்டு கடவுளை வணங்க அவன் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் அவன் துணி துவைத்த அழுக்கு நீர் பகவானின் காலைத் தொடுவதையும் விரும்பவில்லை. ”என் பெற்றோரின் வேலையில் ஈடுபட்டிருப்பதால் தங்களை உடனடியாக கவனிக்க முடியாத நிலையில் இருக்கிறேன் இறைவனே என்னை மன்னியுங்கள். நான் வேலை முடிக்கும் வரையில் இந்த செங்கல்லில் நில்லுங்கள்” என்று கூறிய புண்டலீகன் விட்டலனும், ருக்மணியும் அழுக்கு நீரில் கால்கள் படாமல் நிற்க ஒரு செங்கலையும் அவர்கள் பக்கம் தள்ளி விடுகிறான்.

துகாராம் இதை மராத்திய மொழியில் அழகாக வியந்து பாடுவார்:

“என்ன பைத்தியக்கார அன்பிது

விட்டலனை நிறுத்தி வைத்ததே

என்ன முரட்டுத் துணிவிது

விட்டலன் நிற்கக் கல்லைக் காட்டியதே”

தன் பக்தனின் கர்ம சிரத்தையை மெச்சிய இறைவன் அங்கேயே ருக்மிணியுடன் நிரந்தரமாக சிலையாக நின்று விடுகிறார். இன்றும் பண்டரிபுரத்தில் இறை விக்கிரகம் ஒரு செங்கல்லில் நிற்பதாகவே இருக்கிறது. தனக்கும் அதிகமான முக்கியத்துவத்தை தன் கடமைக்குக் கொடுத்த பக்தனை மெச்ச முடிந்த இறைவனை நீங்கள் வேறெங்கே பார்க்க முடியும்?

இறைவன் ஒரு உதாரணமாக இருப்பதைக் குறிக்கும் வாசகம் பைபிளிலும் வருகிறது. “என் நுகத்தடியை நீங்கள் வாங்கிக் கொண்டு என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். என் நுகத்தடியைத் தூக்குவது எளிது. என் சுமை பளுவாக இல்லை”

பற்றுதலை விட்டு விட்டால் உழைப்பாகிய நுகத்தடியை சுமப்பது எளிதாகிறது என்று கிறிஸ்துவமும் இந்த வாசகம் மூலம் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் சுமை எதிர்பார்ப்பாலும், விளைவின் மீது வைக்கும் அதீதப் பற்றினாலும் ஏற்படும் சுமையே. கடமையை பலன் எதிர்பாராமல் செய்யும் போது அது ஏசுநாதர் சொன்னது போல மிக எளிமையாகிறது.

No comments:

Post a Comment