அன்பே கடவுள் என்கிறோம்.
அன்பு என்பது பண்பு. அன்புருவான கடவுள் நம்மிடம் வெளிப்படுத்துவது அருள். அந்த அருளைப் பேரொளியாய் வழிபட்டார் வள்ளலார் இராமலிங்கர். அருட்பெருஞ்ஜோதி என்பதே அவர் சொன்ன மந்திரம். அருள் என்பதை கருணை என்றும் கூறலாம். அது மனிதர்களிடையே உண்டு என்றாலும் ஒரு எல்லைக்கு உட்பட்டது. ஆனால் இறைவன் புரியும் கருணை தனிப்பெருங்கருணை. அதற்கு நிகரான கருணை வேறெதுவுமில்லை என்பது பொருள். எனவேதான் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியோடு தனிப்பெருங்கருணையையும் சேர்த்து மந்திரமாக்கினார்.
இறைவன் கருணைக் கடல். எனவே அவனை "கருணாசாகரன்' என்கிறோம். கடலின் ஆழத் தையும் அளவையும் அறிவதென்பது அரிது. அதுபோலவே இறைவன் கருணையை அளத்தலும் அரிது. அவனது கருணை வெள்ளம் பலருக்கும் பாய்ந்துள்ளதை புராணங்கள், இதிகாசங்கள் மூலமாகக் காண முடிகிறது. இன்றும் பலர் தங்கள் அனுபவத்தில் கண்டு வருகின்றனர்.
கருணைக்கடலும் ஆசைக்கடலும்
எந்த மனிதரும் தாம் விரும்பிப் பிறப்பதில்லை. இறப்பை எவரும் விரும்புவதுமில்லை. எனவே நம் பிறப்பும் இறப்பும் அவன் கையில். அந்தக் கருணைக்கடலை உணர்ந்துகொண்டால் நாம் பிறவிக்கடலைக் கடந்துவிடலாம். ஆனால் மனித மனதிலிருக்கும் ஆசைக்கடலோ, அதை அடைய முடியாமல் செய்துவிடுகிறது.
மனிதன் என்றாலே மும்மலங்களுடையவன். மலம் என்பது அழுக்கு. மும்மலம் என்பவை ஆணவம், கன்மம், மாயை என்பன. பிறக்கும்போதே மனிதன் சிறிது (கால் பங்கு) ஆணவமலமும் சேர்ந்தே பிறக்கிறான்.
குழந்தையின் முதல் அழுகைதான் அதன் வெளிப்பாடு. ஆனால் சுற்றியிருக்கும் மனிதர்கள் குழந்தை பிறந்ததும் அழவில்லை என்றால் கவலைப்படுவார்கள். காரணம் ஏதாவது நோயிருந்தால்தான் அழாதாம். அழாமலிருந்தால் ஆணவ மலம் இல்லாத குழந்தையென்று சிந்திக்க வேண்டும்.
முற்பிறவியில் நிறைவேறாத ஆசைகள் இப்பிறவியில் நிறைவேற என்னென்ன துன்பப்பட வேண்டுமோ என்று நினைத்து அழுதிருக்கலாம்! பிறவி என்னும் பிணியில் மறுபடியும் சிக்கிக்கொண்டேமே என்று அழுதிருக்கலாம்.
அது எப்படி பிறக்கும்போதே கால் பங்கு ஆணவம் இருக்கமுடியும் என்ற வினா எழலாம். ஒரு பையன் குழம்பு, ரசம், பாயசம், மோர் எல்லாவற்றையும் கலந்துதான் சாப்பிடுவான். ""உனக்கு எப்படிடா இந்தப் பழக்கம் வந்தது?'' என்பாள் தாய். ""எல்லாம் பூர்வஜென்ம வாசனைதான்'' என்பார் அப்பா! ஆக பிறவி எடுப்பதே முற்பிறவியில் அனுபவிக்காமல் விடுபட்ட வினைகளின் தொடர்ச்சியால்தான்! இது அறிஞர்கள் கண்ட உண்மை!
மும்மலமுடைய உயிர்கள் உண்டு; இருமலம் மட்டும் உடைய உயிர்களும் உண்டு. ஒரே மலம் மட்டும் உடைய உயிர்களும் உண்டு. அந்த ஒரு மலம்தான் அந்தப் பிறவியில் முற்றிலுமாக அழியாமல் இருப்பதாகிய ஆணவ மலம்.
இதனை இராவணன் விஷயத்தில் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல்புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி!'
சீதையிடம் கொண்ட காதல் இராவணன் உள்ளத்தில் இன்னமும் எங்கேயாவது ஒளிந்திருக்குமோ என்று, ராமனின் அம்பு அவனுடலில் புகுந்து தடவித் தேடி இல்லையென்றறிந்த பின்னரே வெளியே வந்ததாம்! கற்பனைக்கோர் கம்பனல்லவா?
கம்பன் இப்படிச் சொன்னதற்குக் காரணமும் உண்டு. இலக்குவனிடம் மரண அடிபட்டுத் திரும்பினான் இராவணனின் மகன் மேகநாதன்.
அப்பொழுது அவன் தந்தையிடம் சீதையை விட்டுவிடச் சொன்னான். ஆனால் இலங்கேஸ்வரன் இராவணனோ, ""ஆவியை விடினும் தேவியை (சீதையை) விடேன்'' என்று கர்ஜித்தான். தோல்வியிலும் துவளாத தனியாண்மை என்று பாராட்டினாலும் இது ஆணவத்தின் உச்சநிலை! ஆணவம் அவ்வளவு கொடியது! எளிதில் அழியாதது!
மும்மலங்களைப் பெற்ற உயிர்கள் சகலர் எனப்படுவர். இரண்டு மலங்களைக் கொண்டவர்கள் பிரளயாகலர்கள். ஒரு மலம் மட்டுமே உடையவர் விஞ்ஞானகலர். சைவ சித்தாந்தம் உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப இவ்வாறு பெயரிட்டு வழங்குகிறது.
சிவபெருமான் எனும் மெய்ப்பொருள் இம்மூன்று வகையினர்க்கும் மூன்று வேறு முறைகளில் தனது திருவருளை வழங்குகிறார்.
அதுவே அவரவர்களுக்கேற்ற அனுபவ நிலையாய் வாய்க்கிறது. ஆகவே மனிதன் தன் அருமுயற்சியால் எதை எதையோ பெற்றிருந்தாலும், அவை எல்லாம் மெய்ப்பொருளாகிய இறைவன் வகுத்தளித்ததற்குமேல் அணுவளவும் கூடுதலாய் அனுபவித்திட முடியாது. இதனை திருவள்ளுவர் தெளிவாக,
"வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க் கும்துய்த்த லரிது'
என்று கூறியுள்ளார்.
துய்த்தல்- அனுபவித்தல்.
ஆகவே இறைவனது அருட்பெருங்கருணை இன்றேல் வாயும் வயிறுமிருந்தும், வகை வகையாய் உணவிருந்தும் ஒருவாய்கூட உண்ண முடியாது! ஆற்றில் சிறிதளவே நீர் போனாலும், கரைபுரண்டு பெருவெள்ளம் போனாலும் நாய் நக்கித்தான் நீர் குடிக்கமுடியும்!
விஞ்ஞானகலர்க்கு அருளுதல்
ஒரு மலத்தைப் பெற்ற உயிர்களுக்கு இறைவன் அவ்வுயிர்களின் உள்ளேயே இருந்து தன்னை உணர்த்தி அருளுகிறான். இதையே வேதம் "அஹம் பிரம்மாஸ்மி' என்கிறது. இது ஞானிகள் நிலை!
பிரளயாகலர்க்கு அருளுதல்
இரு மலங்களைப் பெற்ற உயிர்களுக்கு இறைவன் தெய்வ வடிவிலேயே காட்சியருளுவான். எருதேறிய சிவனாக- ஸ்ரீதேவி, பூதேவியுடன் கருட வாகன விஷ்ணுவாக!
சகலர்க்கு அருளுதல்
நம்மைப் போன்ற மும்மலமுடையவர்களுக்கு மனித வடிவிலேயே வந்து அருள்புரிவான் இறைவன்! "நடுக்காட்டில் தவித்தபோது ஒருவர் வந்தார்; வழிகாட்டினார்; உடன் வந்தார். ஊர் வந்தபோது ஆளைக் காணோம்' என்கிறோமே- இதுதான் நம்மைத் தேடிவந்த தெய்வம். கலியுகத்தில் இதுமட்டுமே சாத்தியம். உணர்ந்து கொள்கிற அறிவே பகுத்தறிவு! பழித்துரைப்பது பகுத்தறிவாகாது!
தேடிவந்து உதவும் இறைதன்மைக்கு உதாரணம் சொல்லலாம்.
வேடர்கள் மான்களைப் பிடிக்க தங்களிடமுள்ள ஒரு மானை நடுக்காட்டில் கட்டி வைப்பர்.
காட்டு மான்கள் கட்டி வைத்துள்ள மானிடம் கூட்டமாய் வரும். மறைந்திருந்த வேடர்கள் அப்பொழுது வலைவிரித்து பல மான்களைப் பிடித்துவிடுவர். அதுபோல மும்மலமுடைய நம்மை தன் திருவடிகளில் சேர்த்துக்கொள்ள நம்மைத் தேடி வருவான் இறைவன்.
நம் மனமாகிய மான் இஷ்டப்படி சுற்றித் திரியும்! அதை பக்தி என்னும் கயிற்றில் கட்டி வைக்கவேண்டும். அப்பொழுது இறைவனும் இறைவியும் காட்டு மான்களாக நம்மிடம் வருவர்! நம் மனம் மனிதனாகவே இருந்தால் இறைவனும் மனிதனாகவே வருவான்! "எங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே'
என்று தாயுமானவர் கூறியதுபோல, எங்கெங்கும் உள்ள இறைவன் நம்மோடும் இருக்கிறான் என்றுணர்ந்து பக்தி செய்தால், அவன் நிச்சயம் நம்மைக் கடைத்தேற்றுவான்!
No comments:
Post a Comment