Sunday, January 16, 2011

பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள் என்பது 12 நூல்கள் என்று பொருள்படும். திருமுறை என்ற வார்த்தையில், முறை என்பது நூல் அல்லது புத்தகம் என்று பொருள்படும். திரு என்பது தெய்வத் தன்மை வாய்ந்த என்று பொருள்படும் அடைமொழியாகும். ஆக, திருமுறைகள் என்பது தெய்வத்தன்மை பொருந்திய நூல்கள் என்று பொருள்படும்.
திரு + முறை = திருமுறை
திரு = தெய்வத்தன்மை வாய்ந்த
.முறை = நூல்
சிறப்பு மிக்க சைவ நெறி சார்ந்த நூல்கள் ‘பன்னிரு திருமுறைகள்’ என்றழைக்கப்படுகின்றன. பன்னிரண்டு திருமுறைகளும் 27 ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
திருமுறைகள் தோன்றிய வரலாறு
தேவாரத் திருமுறை ஓலைச் சுவடிகளை, தமிழை எதிர்த்தவர்களிடமிருந்து காப்பாற்றவும், மழை, வெள்ளம், புயல், காற்று போன்ற இயற்கைச் சீரழிவிலிருந்து காப்பாற்றவும், அவற்றை சிதம்பரத்தில் நடராஜர் கோயிலில் பூட்டி முத்திரை வைத்து விட்டார்கள்.
அக்காலத்தில் தஞ்சையில் இருந்து அரசாண்ட சோழ வேந்தனான அபயகுலச் சோழன், ஓதுவார்களும், இசைவாணர்களும் பாடக் கேட்டு தேவாரப் பாடல்கள் மீது அளவுகடந்த ஈடுபாடு கொண்டார். அவற்றைத் தொகுக்க விரும்பினார். அவை கோவிலில் அறையில் பூட்டி வைத்திருப்பது தெரிந்து அவற்றை எப்படி எடுப்பது என்று யோசித்தார். அப்போது அவரது அவைப் புலவர்கள், நம்பியாண்டார் நம்பி மனது வைத்தால் அவற்றைத் தொகுக்கலாம் என்று ஆலோசனை கூறினார்கள். அப்படி என்ன சிறப்பு நம்பியாண்டார் நம்பியிடம் என்று மன்னன் வியந்து கேட்டார். அவைப் புலவர்கள் நம்பியாண்டார் நம்பியின் கதையைச் சொன்னார்கள்.
நம்பியாண்டார் நம்பியின் கதை
நம்பியாண்டார் நம்பியின் தந்தை சிதம்பரத்துக்கு அருகில் உள்ள திருநாரையூரில் பிள்ளையார் கோவில் ஒன்றில் அர்ச்சகராகப் பணியாற்றினார். நம்பி சிறுவனாக இருந்த போது, ஒரு நாள் அவருடைய தந்தை வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அன்றைய பூஜை செய்யும் பொறுப்பை, சிறுவன் நம்பியிடம் ஒப்படைத்துச் சென்றார். நம்பியின் தாய் பிரசாதத்தைத் தயார் செய்து கோவிலுக்குக் கொடுத்தனுப்பினாள்.
சிறுவன் நம்பியும் தந்தையின் கட்டளைப்படி பிள்ளையாருக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து, தான் கொண்டு வந்த பிரசாதத்தைப் பிள்ளையாருக்குப் படைத்தார். வெகு நேரம் ஆகியும் பிரசாதம் அப்படியே இருந்தது. பிள்ளையார் உண்மையாகவே பிரசாதத்தைச் சாப்பிடுவார் என்றெண்ணியிருந்த நம்பிக்கு அது ஏமாற்றமாய்ப் போய்விட்டது. தான் செய்த பூஜையில் பிழை இருந்தால் மன்னித்தருளுமாறு வேண்டிக் கொண்டார். அதன் பிறகும், பிரசாதம் அப்படியே இருக்கவே, தனது தலையைக் கோவில் சுவரில் மோதிக் கொண்டு அழுதார். நம்பியின் கடமையுணர்வையும், பக்தியையும் கண்டு பிள்ளையார் மனம் கசிந்து பிரசாதத்தை மிச்சம் மீதியின்றி அப்படியே சாப்பிட்டு விட்டார். நம்பி மிகுந்த சந்தோஷத்துடன் வீட்டிற்குச் சென்றார். வெற்றுப் பாத்திரத்துடன் வந்த நம்பி சொன்னதை யாராலும் நம்ப முடியவில்லை.
அடுத்த நாள் நம்பியின் தந்தை வெளியூரிலிருந்து திரும்பி வந்ததும், அவருடன் நம்பி கோவிலுக்குச் சென்றார். அவரே பூஜையும் செய்தார். அன்றும் பிள்ளையார் பிரசாதத்தைச் சாப்பிட்டார். அதை நேரில் பார்த்தவர்களுக்கு உண்மை புரிந்தது. நம்பியின் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
தன் பக்தனான நம்பி ஏழைமையில் கல்வி பயில முடியாத சூழலில் இருந்ததால், பிள்ளையார் தானே தினந்தோறும் கல்வி புகட்ட ஆரம்பித்தார். நம்பியை மாமேதை ஆக்கினார். இறைவனிடம் நேரடியாகக் கல்வி பயின்றதால் நம்பியாண்டார் நம்பியின் புகழ் எங்கும் பரவியது.
நம்பியாண்டார் நம்பி தொகுத்த திருமுறைகள்
இத்தகைய சக்தி வாய்ந்த நம்பியாண்டார் நம்பியைச் சரணடைந்தால் திருமுறைகளைத் தொகுக்கலாம் என்ற அவைப் புலவர்களின் ஆலோசனைப்படி, அவைப் புலவர்கள் மற்றும் மந்திரிகளுடன் திருநாரையூருக்குச் சென்று பிள்ளையாரை தரிசித்து விட்டு, நம்பியாண்டார் நம்பியின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். பின்னர் திருமுறைகளைத் தொகுக்க வேண்டும் என்ற தன் ஆவலைத் தெரிவித்தார் மன்னர்.
நம்பியாண்டார் நம்பி, பிள்ளையாரின் திருவருளால், தேவாரப் பாடல்கள் அனைத்தும் சிதம்பரம் கோயிவில் இருப்பதாகத் தெரிவித்தார். மன்னரும், மந்திரிகளும், அவைப் புலவர்களும் நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் கோவிலுக்குச் சென்று நடராஜர் சந்நிதியில் உள்ள தீட்சிதர்களை அணுகி, சுவடிகளைக் கேட்டனர். அவர்கள் தேவார மூவர் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்) வந்து கேட்டால் மட்டுமே முத்திரையிட்ட அறைக் கதவைத் திறக்க இயலும் என்று கூறினர்.
பல காலங்களுக்கு முன் வாழ்ந்து மறைந்த தேவார மூவரை எப்படித் திரும்ப அழைத்து வந்து கேட்க வைப்பது? என்று யோசித்ததோடு மட்டுமல்லாது, மன்னர் புத்திசாலித்தனமாக ஒரு நடவடிக்கை எடுத்தார். தேவார மூவரின் திருஉருவங்களை அலங்கரித்து, கோயிலுக்குள்ளும், வெளியேயும் உலா அழைத்து வந்து நடராஜர் சந்நிதிக்கு முன் எழுந்தருளச் செய்து “இதோ தேவார மூவர் வந்துள்ளனர்” என்று கூறினார்.
தேவார மூவரின் திருஉருவங்களை வெறும் சிலை தானே என்று சொல்லித் தட்டிக் கழிக்க நினைத்த தீட்சிதர்கள், அப்படிச் சொன்னால் கோயிலுக்குள் உள்ள நடராஜரும் சிலைதானே என்ற வாக்குவாதம் வரும் என்ற எண்ணத்தில் அதைத் தவிர்த்து விட்டு, தேவாரச் சுவடிகள் உள்ள அறையைத் திறந்து விட்டனர்.
கரையான் அரித்தது போக மீதமிருந்த சுவடிகளை எடுத்து வந்தார் நம்பியாண்டார் நம்பி. பின்னர் அவற்றை ஒழுங்குபடுத்தி, 27 ஆசிரியர்கள் இயற்றிய பாடல்களை 12 திருமுறைகளாகத் தொகுத்தார். அவை, சோழ நாட்டுச் செப்பேடுகளில் எழுதிப் பாதுகாக்கப்பட்டன.

மற்ற சங்க இலக்கியங்களுக்கும், சைவ-வைஷ்ணவ திருமுறைகளுக்கும் உள்ள வேறுபாடு

காற்று, புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் முறையாகப் பாதுகாக்கப்படாத சங்க இலக்கியங்களில் எஞ்சியது 36 நூல்கள் மட்டுமே. அதாவது,

பதினெண் கீழ்க் கணக்கு - 18 (சங்கம் மருவிய நூல்கள்)

எட்டுத் தொகை - 8

பத்துப் பாட்டு -10
சைவப் பொக்கிஷத் திருமுறைகளான பன்னிரு திருமுறைகளும், வைஷ்ணவ நூலான நாலாயிர திவ்யப் பிரபந்தமும் திருக்கோவில்களில் வைத்துப் பாதுகாக்கப்பட்டதால்தான் அவை அழிவின்றி நமக்குக் கிடைத்துள்ளன. திருக்கோவில்களில் எழுந்தருளியிருக்கும் இறைவன் அழிவில்லாதவன். அவனிடம் சேர்ந்தவற்றுக்கும் அழிவே இல்லை என்றும் நாம் பொருள் கொள்ளலாம்.
பன்னிரு திருமுறை விழா
ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்திலே வேதங்களைத் தொடங்குவது வழக்கம். அதனால் தான் ஆவணி அவிட்ட நட்சத்திரத்திலே பூணூல் போட்டுக் கொள்கிறார்கள். அதுபோல் தமிழ் வேதங்களை ஆவணி மாதத்தில் தொடங்குதல் மரபு. வருடா வருடம் ஆவணி மாதம் முதல் ஞாயிறு அன்று முடியுமாறு, 12 நாள்கள் ‘பன்னிரு திருமுறைகள்’ பற்றி உரை நிகழ்த்தி, 13ஆம் நாள் ஞாயிறு அன்று ‘திருமுறை காண்டல்’ விழா எடுப்பது வழக்கம்.
சோழ மன்னன் எவ்வாறு தேவார மூவரை அலங்கரித்து, ஆராதனை செய்து, திருவீதி உலா அழைத்து வந்து நடராஜர் முன் நிறுத்தி திருமுறைச் சுவடிகளைக் கேட்டுப் பெற்றாரோ, அதை அப்படியே நடத்திக் காண்பிக்கும் முறைக்கு, ‘திருமுறை காண்டல்’ என்று பெயர். இவ்வாறு செய்வது, இந்தத் தலைமுறைக்கு முற்காலத்தில் நடந்த விஷயங்களையும், சமயச் செய்திகளையும் எடுத்துச் சொல்லவும், புரிய வைக்கவும் உதவுகிறது.
மிகப்பெரிய வருத்தம்:

திருமுறைகளுக்கு இந்த அளவுக்கு நெருங்கிய தொடர்புள்ள சோழநாட்டுத் திருத்தலங்களில் குறிப்பாக, தருமபுரம், திருவாடுதுறை, திருப்பனந்தாள் போன்று ஆதினங்களில் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் திருமுறை காண்டல் விழா நடைபெற்றாலும், மற்ற சோழநாட்டுத் திருத்தலங்களில் சிறப்பாக நடைபெறுவதில்லை என்பதே உண்மை.
திருமுறை காண்டல் விழா நடைபெறும் விதம்
நால்வருக்கு சிறப்பு பூஜை
பொதுவாக சிவாலயங்களில், திருமுறையாசிரியர்களான திருஞானசம்பந்தர்-அப்பர்-சுந்தரர்-மாணிக்கவாசகர் ஆகியோரின் திரு உருவங்களுக்கு விடியற்காலையிலேயே அபிஷேகம், அலங்காரம் செய்து மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை உலா அழைத்து வந்து நடராஜர் முன் நிறுத்துவார்கள்.
அப்போது ஓதுவார் மூர்த்தியை, திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பியாக பாவித்து அவருக்கு பரிவட்டம் (தலைப்பாகை) கட்டி விடுவார்கள்.
அவரும் நம்பியாண்டார் நம்பியாக மாறி திருமுறை காண்டல் புராணம் பாடுவார். அதாவது, ஓதுவார் மூர்த்தி, கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார் நம்பி புராணம் என்னும் திருமுறை காண்டல் புராணத்தில் உள்ள 45 பாடல்களையும் நம்பியாண்டார் நம்பியே பாடுவதைப் போல் பாடுவார்.
நடராஜப் பெருமானுக்கும், நால்வரின் திரு உருவங்களுக்கும் நடுவே திருமுறைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மரத்தினால் அலங்காரம் செய்யப்பட்ட சிறிய சப்பரத்தை அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள். நான்கு கால்கள் கொண்ட இந்த சப்பரத்துக்கு திருமுறைக் கோவில் என்று பெயர். இதனைப் பார்ப்பதற்கு மரத்தினால் செய்யப்பட்ட சிறிய கோவில் போன்றே இருக்கும். இந்த திருமுறைக் கோயிலை நடராஜப் பெருமான் இருக்கின்ற கோவில்களில் அவரது திரு உருவத்துக்கு அருகே கீழே அலங்காரம் செய்யப்பட்டு வைத்திருப்பதை இன்றும் நாம் காணலாம்.

பிறகு நடராஜருக்கு நைவேத்யம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து குருக்கள் நடராஜருக்கு சோடச உபசாரம் செய்வார். சோடச உபசாரம் என்பது 16 விதமான உபசாரங்களைக் குறிக்கும்.

1. குடை

2. ஸ்தாபனம்

3. பாத்யம் கொடுத்தல்

4. ஆசனமளித்தல்

5. அர்க்கியம்

6. அபிஷேகம் வஸ்திரம்

7. சந்தனம்

8. புஷ்பாஞ்சலி

9. தூயதீபம்

10.நைவேத்தியம்

11.பலி போடுதல்

12.ஹோமம்

13.ஸ்ரீபலி

14.கேயம் வாத்தியம்

15.நர்த்தனம்

16.உத்வாஸனம்

இவ்வாறு 16 வகையாக நடராஜருக்கு பூஜை செய்வதையே சோடச உபசாரம் என்பர்.
சுவஸ்தி வஜனம்
இதனைத் தொடர்ந்து வேதியர்களும், குருக்களும் இணைந்து சுவஸ்தி வஜனம் பாடுவார்கள். அதாவது உலக உயிர்கள் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும். பருவ மழை காலத்தே பொழிய வேண்டும். எல்லாருக்கும் எல்லாக் காலத்திலேயும் நல்லதே நடக்க வேண்டும் என்று பொருள்படும் வகையில் வேண்டிப் பாடுவதற்கு சுவஸ்தி வஜனம் என்று பெயர்.
அடுத்ததாக குருக்கள் சைவத் திருமுறைகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பொருள்படும் வகையில் “திராவிட வேதம் அவதாரயா” என்று கூறி தன் பொறுப்புகளை முடித்துக் கொண்டு, ஓதுவார்களிடம் கடமையை ஒப்படைப்பார்.
திருமுறை விண்ணப்பித்தல்
ஓதுவார்கள் திருச்சிற்றம்பலம் என்று தொடங்கி, திருமுறையை இறைவனிடம் விண்ணப்பிப்பார்கள். இதற்கு திருமுறை விண்ணப்பித்தல் என்று பெயர். இப்படி திருமுறையை இறைவனிடம் விண்ணப்பித்தல் என்று பெயர். இப்படி திருமுறையை இறைவனிடம் விண்ணப்பிக்கும் போது, திருமுறைகளிலிருந்து ஐந்து பாடல்களைப் பாடுவார்கள். இப்படி ஐந்து பாடல்களைப் பாடுவதால் அதற்கு பஞ்சபுராணம் என்றும் ஒரு பெயருண்டு. பஞ்சபுராணம் பாடும் போது கீழ்க்காணும் திருமுறைப் பாடல்களைப் பாடுவது வழக்கம்.
தேவாரம் - 1,2,3,4,5,6,7 திருமுறைகளில் ஏதேனும் ஒரு திருமுறையின் பாடல்
திருவாசகம் - 8 ஆவது திருமுறை - ஒரு பாடல்

திருவிசைப்பா - 9ஆம் திருமுறை - ஒரு பாடல்

திருப்பல்லாண்டு - 9ஆம் திருமுறை - ஒரு பாடல்

பெரிய புராணம் - 12 ஆம் திருமுறை - ஒரு பாடல்
பிறகு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு, சுவாமி நைவேத்தியம் வழங்கப்படும்.
யானை வாகனத்தில் திருமுறைக்கோவில் திருவீதி உலா
இறுதியாக யானை வாகனத்தில் திருமுறைக்கோவிலை வைத்து தீபாராதனைகள் செய்து மங்கல வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா அழைத்துச் செல்வர். யானைகள் உள்ள கோவில்களில் யானை மீதே திருமுறைக்கோவிலை வைத்து உலா அழைத்துச் செல்வர். யானைகள் இல்லாத கோவில்களில் யானை வாகனத்தில் அமர்த்தி திருவீதி உலா அழைத்துச் செல்வர்.

No comments:

Post a Comment