கோமாதா நமது குலமாதா
நமது பாரத தேசம் பண்டைய காலம் முதலே பசுக்களை காமதேனு என்றும் கோமாதா என்றும் போற்றிப் பாதுகாத்து வந்திருக்கிறது. இலக்கியங்களில் மாடு என்ற சொல்லுக்கு செல்வம் எனப் பொருள் கூறப்படுகிறது. ஆகவே தான் பண்டைய காலங்களில் பசுக்களையும், காளைகளையும் அளவுகோலாக வைத்து குடும்பங்களை பணக்காரர், பெரும்பணக்காரர் எனக் கணக்கிட்டனர். இன்றைய இயற்கை வளங்கள் பாழ்பட்டுப் போனதற்கும், நமது கிராமங்கள் நலிவடைந்து போனதற்கும் பசுக்களையும், காளைமாடுகளையும் பாதுகாக்கத் தவறியதே காரணம். இதனை நாம் உணர்ந்து உடனடியாக பசுப் பாதுகாப்பு, இயற்கை வளங்களைப் பெருக்குதல், கிராம முன்னேற்றம் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை எடுத்து செயல்பட்டால் மட்டுமே நாமும், நமது வருங்கால சந்ததியினரும் வரப்போகும் ஆபத்துகளைத் தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதே உண்மை.
பசு பாதுகாப்பு - ஏன்
பசுவினால் நாம் பெறும் பயன்கள்
* உலகில் தாய்ப் பாலுக்கு சமமானது - பசுவின் பாலைத் தவிர வேறொன்றில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு.
* பசுவிடமிருந்து கிடைக்கப்பெறும் அனைத்தும் மிகச் சிறந்த மருத்துவ குணங்கள் உடையவை (பால், தயிர், வெண்ணெய், நெய், கோமியம், சாணம்)
* பசுவை காமதேனுவாக வணங்கி பூஜை செய்வதால் முப்பத்து முக்கோடி தேவர்களின் வாழ்த்துகளும், அனைத்துச் செல்வங்களும் பராமரிப்பவர்களுக்கு கிடைக்கின்றன.
* கோமியம், சாணம் போன்றவை கிருமிநாசினியாகவும் சிவபெருமானால் அணியும் திருநீறாகவும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருநீற்றுப் பதிகம் என்ற பெருமையையும் பெறுகிறது.
* பஞ்சகவ்யம் (பால், தயிர், நெய், கோமியம், சாணம்) என்ற கலவை ஆயுர்வேத மருத்துவத்தில் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
* இயற்கை வேளாண்மைக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் மிகவும் பயன்படுகிறது.
* பசுவின் சாணத்தால் மெழுகப்பட்ட வீடுகளில் அணுக்கதிர் வீச்சு, கதிரியக்க வீச்சுகளின் தீய விளைவுகள் ஏற்படுவதில்லை என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
* தினசரி ஏதேனும் ஒருவகையில் பசுவினிடமிருந்து கிடைக்கும் பொருளால் பயன் பெறுகிறோம்.
* மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் பசுவின் சாணம் ஒரு முக்கிய ஆதார வளமாகப் பயன்படுத்தப்படுகிறது.
* வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதிலும், வறுமையை ஒழிப்பதிலும் பசுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
* பசுக்கள் தன் இனத்தைப் பெருக்குவதன் மூலம் பராமரிப்பவரின் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது.
பசுக்களைப் பாதுகாப்பது எப்படி?
வீட்டிற்கு ஒரு பசு வளர்க்க வேண்டும். இயலாதவர்கள் பசுமடம் அல்லது கோசாலை மூலம் பசுவை வாங்கிக் கொடுத்து வளர்க்கச் செய்ய வேண்டும்.
வயதான பசுக்களை பசுமடத்தில் சேர்த்து பராமரிக்கலாம்.
கோமாதா வழிபாடு என்பது ஒவ்வொரு வீட்டிலும் அல்லது ஆலயத்திலும் அல்லது பசுமடத்திலும் இடத்திற்கேற்ப சிறப்பாக நடைபெற வேண்டும்.
கோமாதா வழிபாட்டின் போது பசுவினால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளையும் பயன்களையும், கோமாதாவைப் பற்றி முனிவர்கள், வேதங்கள், இதிகாச புராணங்கள், இலக்கியங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் எவ்வாறெல்லாம் போற்றியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்தவர்கள் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சொற்பொழிவாற்ற வேண்டும்.
இன்றைய தினம் கோதானம் அளிப்பதென்பது மிக மிகக் குறைவாக உள்ளது. ஆகவே கோதானம் அளிப்பது என்பது எவ்வளவு உயர்ந்தது, கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் மட்டுமல்லாமல் அனைவருக்கும் எவ்விதம் நன்மையளிக்கிறது என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம்.
மாட்டுப்பொங்கல் போன்ற விழாக்களின் மூலம் கோமாதாவின் பெருமையை (குறிப்பாக கிராம மக்களுக்கு) வியந்து போற்றி அவர்களனைவரையும் பசுக்களைப் பராமரிக்கத் தூண்டவேண்டும்.
பசுக்கள் நோய்வாய்ப்பட்டால் தேவைப்படும் மருத்துவ சிகிச்சைகளை இலவசமாகப் பெறக்கூடிய அரசு/தனியார் பசுக்களுக்கான மருத்துவ மையங்களை ஏற்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும்.
பசுக்களின் கோமியம், சாணம் போன்றவற்றைச் சேகரித்து, அதை பலவிதங்களிலும் பயன்படுத்துவதற்கான அரசு/தனியார் மையங்களை ஏற்படுத்தவேண்டும்.
கோமாதாவின் விபூதி, ஊதுபத்தி, சோப்பு, ஷாம்பு, பல்பொடி மற்றும் மருந்துப்பொருள்களை பயன்படுத்த அனைத்து மக்களையும் விழிப்படையச் செய்ய வேண்டும்.
நகரங்களில் உள்ள பசுக்கள் சினையாக இருக்கும்பொழுது (பால் கறக்காத) அவற்றை கிராமங்களில் உள்ள விவசாயம் செய்யாத நிலங்களில் மேய்ச்சலுக்குப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கை விவசாயம் செய்வதற்கான மையங்களை ஏற்படுத்தலாம்.
இன்றைய மக்கள் எதற்கெடுத்தாலும் ‘என்ன லாபம்’ என்று கேட்கும் நிலையில் இருப்பதால் பசு பாதுகாப்பால் எத்தனை விதமான வருமானம் மற்றும் நன்மைகள் கிடைக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பயனில்லாத பசு இனமே ஏதுமில்லை.
பசுக்களைப் பராமரிப்பவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு ஒவ்வோர் ஊரிலும் ஒரு குழு (பசுப்பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குழு) அழைத்து சேவை மனப்பான்மையுடன் உதவிகளைச் செய்யவேண்டும்.
பசுவின் பெருமை
கோமாதா என அழைக்கப்படுகின்ற பசு ஆதிகாலம் தொட்டே அனைத்து உயிர்களுக்கும் தாய் போன்றது.
தேவர்கள் மற்றும் அனைவராலும் ‘காமதேனு’ என பூஜிக்கப்படுகிறது.
அனைத்து ஆராய்ச்சியாளர்களாலும் பசுவினிடமிருந்து கிடைக்கும் பொருள்கள் மிக உயர்ந்தவை (ஈடிணையற்றவை) என ஆராய்ச்சிகள் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயத்திற்கு மற்றவற்றை விட பசு வளர்ப்பும், பசு பராமரிப்பும் மட்டுமே ஆதரவாக இருக்கிறது.
ச்யவன மகரிஷியை மீனவர்கள் வலையில் பிடித்ததற்கு ஈடாக, மன்னன் நகுலனிடம் பசுக்களைக் கேட்டு ஏழை மீனவர்களுக்குக் கொடுத்து அருளாசி வழங்கியதாக மகாபாரதம் கூறுகிறது.
பசு மாட்டின் அருகில் அமர்ந்து செய்யும் மந்த்ர ஜபம் மற்றும் அனைத்து தர்ம கார்யங்களுக்கும் நூறுபங்கு பலன் கிடைப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மனிதர்களின் கண்களுக்கு தெரியாத ம்ருத்யு, யமன், யமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு தெரிவதால் தான் ஒருவர் அங்கு இறக்கும் பொழுது பசு சத்தம் போடுகிறது.
யமலோகத்திற்குச் செல்லும் ஜீவன் வெந்நீர் ஓடும் வைதரணி நதியைக் கடக்கும் பொழுது தானம் செய்யப்படும் பசு அந்த ஜீவனுக்கு உதவுகிறது. பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு ஜீவன் வைதரணி நதியைக் கடப்பதாகக் கூறுகிறது கருடபுராணம்.
பசுவின் சீம்பால் (கன்று ஈன்று 4 நாள்கள் வரை கிடைக்கும் பால்) நோய் எதிர்ப்பு சக்தி, இம்யுனோ க்ளோபின், லாக்டோ ஃபெரின், பி ஆர் பி போன்ற சிறந்த காரணிகளைக் (வேறு எதிலும் இல்லாத) கொண்டு ஈடிணையற்ற மருத்துவ குணங்களுடன் திகழ்கிறது.
இன்புளுயன்ஸா, பன்றிக்காய்ச்சல் போன்ற பல தொற்று நோய்களுக்கு எதிரான சிகிச்சையில் எச்1 என்1 வைரஸ் போன்ற ஆர் என் ஏ வைரஸை எதிர்க்கும் ‘இன்டர்பெரான்’ சீம்பாலில் காணப்படுகிறது. மேற்கண்டவற்றிற்கான சிகிச்சையில் சீம்பால் சிறப்பான இடத்தை வகிக்கிறது. என்று விஞ்ஞானி பட்கர் தெரிவிக்கிறார்.
பசுபாதுகாப்பை எதிர்ப்பவர்கள் யார்? ஏன் எதிர்க்கிறார்கள்?
மிதமிஞ்சிய உற்பத்தியால் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் புதிய சந்தைகளைக்? கைப்பற்ற இந்தியா போன்ற நாடுகளில் நுழைவதற்குத் தடைகளாக உள்ள பசுப்பாதுகாப்பை மறைமுகமாக எதிர்த்து தங்கள் வஞ்சக வலைகளை வீசுகின்றனர்.
இயற்கை உரங்கள், இயற்கை எரிபொருள்கள். (பசுவின் சாணம், கோமியம், மூலம் கிடைப்பவை) போன்றவற்றை நம் மக்கள் பயன்படுத்தினால் நிச்சயமாக இறக்குமதி செய்யப்படும் உரங்கள் மற்றும் எரிபொருள் அளவு குறைந்துவிடும் என்ற பயத்திலுள்ள சுயநலமிகள் பசுபாதுகாப்பை எதிர்க்கிறார்கள்.
சுயநல நோக்கம் கொண்டவர்களே பசுப்பாதுகாப்பையும், பசுப்பராமரிப்பையும் எதிர்க்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவானது
இயற்கை வளம் பெருக்குதல்
பூமித்தாயும் கோமாதாவும் நமக்கு இரு கண்கள். பூமித்தாய் நமக்கு வேண்டிய உணவு தானியங்கள், உடைக்குத் தேவையான பருத்தி போன்றவற்றை அளிக்கிறாள். பசு விவசாயத்திற்குத் தேவையான, இயற்கை உரங்களை அளித்து நல்ல விளைச்சலை ஏறபடுத்துகிறது. பசுக்கள் புல்வெளியில் மேய்வதால் இயற்கை வளம் பெருகுகிறது. இயற்கை வளங்கள் பெருகுவதால் நல்ல காற்று, தண்ணீர் முதலியவை கிடைக்கின்றன. ஆகவே இயற்கை வளங்களைப் பெருக்க பசுப்பாதுகாப்பையும் பசுப்பராமரிப்பையும் செய்யவேண்டும். இன்றும் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கும் குடும்பத்துடன் செல்வதற்கும் காளை மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஏராளமான எரிபொருளும் மிச்சப்படுத்தப்படுகிறது. சுற்றுப்புறச் சூழ்நிலையும் பாதுகாக்கப்படுகிறது.
No comments:
Post a Comment