Monday, June 27, 2011

ஆன்மிக கதைகள்-21 நம்பிக்கையுடன் அவனைப் பாருங்கள்

ஒரு கோயிலில் உபன்யாசகர் ஒருவர் கண்ணனின் லீலைகள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். கண்ணனும், அவன் அண்ணன் பலராமனும் பசுக்களை மேய்க்கச் செல்லும் போது, உயர்ந்த தங்க அணிகலன்களை அவர்களது அன்னை யசோதை அணிந்து அனுப்புவாள் என்றார். இதை ஒரு திருடனும் கூட்டத்தோடு நின்று கேட்டான். உபன்யாசகர் வர்ணித்ததைப் பார்த்தால், "அந்த அணிகலன்கள் லட்சக்கணக்கில் தேறும் போல் இருக்கிறதே' என எண்ணியவன், அவர்களை எப்படியாவது பிடித்து நகைகளைப் பறித்து விட வேண்டுமென திட்டம் போட்டாள். கூட்டம் முடிந்ததும், உபன்யாசகர் பின்னாலேயே நடந்து, அவரது வீட்டுக்கே வந்துவிட்டான். வீட்டுக்குள் புகுந்து, பாகவதரின் கழுத்தில் கத்தியை வைத்து, ""ஓய்! நீர் சொன்ன கண்ணன், பலராமனிடம் நகைகளை கொள்ளையடிக்கப் போகிறேன். அவர்கள் எந்தப் பக்கமாக பசுக்களை மேய்க்க வருவார்கள்?'' என்றான். ""இவன் சரியான முட்டாளாக இருப்பான் போல் இருக்கிறதே!'' என்றெண்ணிய உபன்யாசகர், அவர்கள் கோகுலத்தில் உள்ள காட்டில் இருப்பார்கள், போய் பார், நிறைய கிடைக்கும்,''என்று சொல்லி தப்பி விட்டார். திருடனும் அங்கே போனான். கண்ணனைப் பிடித்து கழுத்தருகே கத்தியை வைத்தான். அவனைத் தொட்டானோ இல்லையோ! கெட்ட எண்ணங்கள் பறந்து விட்டன. உடனே திருந்திவிட்டான். கண்ணனும், பலராமனும் நகை களைக் கழற்றிக் கொடுத்தும் கூட வாங்க மறுத்துவிட்டான். பின், <உபன்யாசகரிடம் ஓடிவந்தான். ""ஓய்! அவர்கள் தெய்வப்பிறவிகள்! தெரியாமல், அந்தப் பிள்ளைகள் கழுத்தில் கத்தியை வைத்து தப்பு செய்து விட்டேன். வாரும், உமக்கும் அவர்களைக் காட்டுகிறேன்,'' என்றான்.""போடா பைத்தியம்! கடவுளையாவது நீ பார்த்தாயாவது, பித்தனே! ஓடிப்போ!'' என்றார்.
திருடன் வற்புறுத்தவே வேறு வழியின்றி அவனுடன் போனார். திருடன் கண்ணனைப் பார்த்தான். உபன்யாசகருக்கு தெரியவில்லை.""கண்ணா! எனக்குத் தெரிவதைப் போல அவருக்கும் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் இங்கு நடப்பதை நம்பமாட்டார்,'' என்றார். உபன்யாசகருக்கும் கண்ணன் காட்சி தந்தார்.
பார்த்தீர்களா! ஆன்மிகத்தைப் பேசினால் போதாது! எழுதினால் போதாது! முழுநம்பிக்கை இருந்தால் இறைவனின் அருள்பார்வை கிடைக்கும்.

No comments:

Post a Comment