Saturday, June 11, 2011

கல்கி அவதாரம் (பிராமணருக்கு மகனாக கல்கி பிறப்பார்)

குருக்ஷேத்திரத்தில் அர்ச்சுனனுக்கு யாதவ குலத் தலைவனான கண்ணன் போர்க்களத்திலேயே கீதையைப் போதித்தார். பின் 18 நாட்கள் நடந்த பாரதப் போர் பாண்டவர்களின் வெற்றியுடன் முடிவடைந்தது. பின்னர், தருமருக் குப் பட்டாபிஷேகம் செய்துவிட்டு துவாரகை சென்ற கண்ணன் 36 ஆண்டுகள் அரசாண்டார்.

துவாரகையில் யாதவர்கள் வரம்பு
கடந்த சுகபோகத்தில் ஈடுபட்டனர். ஒரு நாள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணிப் பெண் வேடமிட்டு, அங்கு வந்த ரிஷியிடம், "என்ன குழந்தை பிறக் கும்?' எனக் கேட்டனர். உண்மையை உணர்ந்த ரிஷி கடுங்கோபத்துடன், "இரும்பு உலக்கைதான் பிறக்கும்;

அதனால் உங்கள் குலமே அழியும்' என சாபமிட்டார். அதன்படியே பிரபாசபட்டினக் கடற்கரையில் யாதவர் குலம் அனைத்தும் அழிந்தே போனது.

இது கண்டு கவலையுற்ற பலராமர் யோகத்தில் அமர்ந்து உயிர் துறந்து பலராம அவதாரத்தை முடித்துக் கொண்டார். நடந்த அனைத்தையும் பார்த்த கண்ணன், தன்னைத் தவிர யாவரும் அழிந்தனர்; தானும் தன் அவதாரத்தை முடிக்கும் காலம் வந்துவிட்டது என எண்ணி, குரா மரத்தடி யில் சரிந்து அமர்ந்தார்.

அங்கு வந்த ஜரா எனும் வேடன் எய்த அம்பு குறி தவறி கண்ணனின் காலில் தைத்தது; கண்ணனின் உயிர் பிரிந்தது. அவர் சரீர தியாகம் செய்து கொண்ட இடம்தான் இப்போது தோரஹரசாகர் என அழைக்கப்படுகிறது. இது ஹிரண்ய நதிக்கரையில் உள்ளது. இந்நதிக்கரையில் அர்ச்சுனன் கண்ணன் மகனின் உதவியுடன் சந்தனக் கட்டைகளை அடுக்கி, கண்ணனுக்கு ஈமக்கிரியைகளைச் செய்து முடித்தான்.

அப்போது கண்ணனின் தேகம் ஒரு மரக்கட்டையாகி நீரில் மிதந்து பூரி கடற்கரையருகில் ஒதுங்கியது.

அதை எடுத்து ஒரு சிலை செய்து பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர்.


ராமாவதாரத்தில் ராமனின் அம்பு பட்டு இறந்த வாலியே ஜரா என்ற வேடனாக கிருஷ்ணா வதாரத்தில் வந்து கண்ணன்மீது அம்பெய்து கண்ணனைக் கொன்றான். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பது கடவுள் அவதாரத் துக்கும் பொருந்தும் என்பதை இதனால் நாம் அறிந்து கொள்ளலாம்.கிருஷ்ணாவதாரம் துவாபர யுக முடிவில் நிறைவுற்றது. அதன்பின் தோன்றிய யுகம்தான் நாம் வாழும் இந்த கலியுகம்.

கிருஷ்ணாவதாரம் பூர்த்தியான நாள்தான் துவாபர யுகத்தின் கடைசி நாள். அன்று பிற்பகல் 2.00 மணி, 27 நிமிடம், 30 வினாடிகளில் கண்ணன் சரீரத் தியாகம் செய்தார். அதுதான் கி.மு. 3102-ஆம் ஆண்டு, பிப்ரவரி 18-ஆம் நாள் என்று குறிப்பிடுகிறார்கள். அதன்பின் கி.மு. 3102, பிப்ரவரி 20-ஆம் நாள் கலியுகம் பிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

சோம்நாத் அருகேயுள்ள பிரபாசபட்டினத்தில் 7-9-2004 அன்று நடந்த மாநாட்டில் ஞானானந்த சரஸ்வதி சுவாமிகள் தன் ஆராய்ச்சிக் கட்டுரையிலும் இதையே குறிப்பிட்டுள்ளார். இவர் விஷ்ணு புராணம், மத்சய புராணம், மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் கணினி மூலம் கணித்து நிர்ணயம் செய்துதான் மேற்கண்ட விவரங்களைத் தெளிவுற விளக்கியுள்ளார். மேலும் கண்ணன் மறைந்த தினமான பிப்ரவரி 18-ஐக் கொண் டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். கண்ணன் 125 வருடம், 7 மாதம், 6 நாட்கள் பூவுலகில் வாழ்ந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். உலகம் தோன்றி 198 கோடியே, 67 லட்சத்து, 73 ஆயிரத்து, 109 ஆண்டுகள் ஆகின்றன.

கலியுகம் எப்படி இருக்கும்?

கலியுகத்தில் என்னென்ன நடக்கும், மக்கள் எப்படி இருப்பார்கள், நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை கண்ணன் கூறியுள்ளார்.


"மனிதர்கள் எல்லாவற்றையும் அடைய வேண்டும் என வெறியுடன் இருப்பார்கள். பணத்தாசையுடன் அலைவர். துறவிகள்கூட பணத்திற்காகத் தவறுகள் செய்வார்கள். ஆண்கள் மனைவிக்கு மட்டும் கட்டுப்பட்டு பெற்றோரை உதாசீனம் செய்து தூஷிப்பார்கள். மனைவிவழி உறவினர்களிடம் மட்டுமே உறவாடுவார்கள். திருமணத்தில் முறை இருக்காது. சிறிதளவு சொத்துக்குக்கூட உறவினர் களைக் கொல்லத் தயங்க மாட்டார்கள். ஒருவருக் கொருவர் கெடுதல் செய்து கொள்வார்கள்' என்று கூறியுள்ளார்.

கலியுகத்தில் இப்படிச் செய்த பாவங்கள் விலக வேண்டுமானால், கிருத யுகத்தில் கடுமையான தியானத்தாலும் யோக நிஷ்டை யாலும் பெற்ற புண்ணியத்தை- திரேதா யுகத்தில் யாகங்கள் செய்வ தன் மூலம் கிடைத்த புண்ணி யத்தை- துவாபர யுகத்தில் அர்ச்சனாதி பூஜைகள் செய்ததன் மூலம் கிடைத்த புண்ணியத்தை கலியுகத்தில் ஹரி நாம சங்கீர்த்தனம் செய்தும், கண்ணன் திருநாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயும் சிறிதளவு பிரயாசை யாலேயே அடைந்துவிடலாம்.

ஆனால், சிலரைத் தவிர பெரும்பாலோர் நன்னடத்தையில்லாமல், பொய், சூது, கொலை, கொள்ளை, வஞ்சனை, சோம்பல், தூக்கம், அளவற்ற சாப்பாடு, பணவெறி, மனைவி சொல் கேட்டல், பெற்றோ ரைப் புறக்கணித்தல் போன்ற விபரீதங்கள் நிறைந்த வாழ்க்கையைத்தான் கலியுகத்தில் வாழ்கின்றனர்.

இப்படி தர்மம், நீதி, நேர்மை நசிந்து அராஜகம் அதிகமாகும்போது நல்லவர்களைக் காக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் பகவான் "கல்கி அவதாரம்' எடுப்பார்.

"பரித்ராயண சாதுனாம் வினாசாயச் துஷ்கிருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே, யுகே.'

எப்போதெல்லாம் உலகில் அதர் மம் அதிகமாகிறதோ அப்போதெல் லாம் அதனை அழித்து தர்மத்தையும் அமைதியையும் நிலைநாட்ட விஷ்ணு அவதாரம் எடுப்பார்.

கல்கி அவதாரம்

இது தசாவதாரங்களில் 10-ஆவது அவதாரமாகும். அது எப்போது என தெரியாவிட்டாலும் நிச்சயம் நடக்கும் என புராணங்கள் சொல்கின்றன. அதில் "யாஸஸ்' எனும் பிராமணருக்கு மகனாக கல்கி பிறப்பார். இவர் சகல வல்லமையுடன் பட்டுப் பீதாம்பரம் அணிந்து, மார்பில் துளசி மாலை துலங்க, கையில் வாளும் கேடயமும் தரித்து வெண்புரவி மீதேறி புறப்பட்டு வந்து, சிரஞ்சீவியான பரசுராமரிடம் சென்று பற்பல கலைகள் பயின்று உபதேசம் பெற்றபின், குதிரை மீதேறி வாயு வேகத்தில் மூன்று இரவுகள் உலகை வலம் வருவார்.

அப்போது அக்கிரமச் செயல் புரிவோரை எதிர்த்து அழித்து, அதர்மவான்களையும் கொடிய வர்களையும் ஒழித்து பூமியைப் புனிதப்படுத்துவார். தர்மத்தை நிலைநாட்டுவார். மக்களை நல்வழிப் படுத்துவார். அமைதி, அன்பைப் போதிப்பார்.

அதன்பின் கல்கி அவதாரம் நிறைவடையும். கலியுகமும் முடிவடையும். பின் புதிய யுகமான சத்ய யுகம் பிறக்கும். அதில் அமைதியும் அன்பும் மட்டுமே மலரும்.

கல்கி ஆலயம்

கல்கி அவதாரம் தோன்றும் முன்பே அவருக்கு ஆலயம் அமைத்து வழிபாடும் செய்கின்றனர் திருவனந்தபுரத்தில். முட்டத்தரா எனும் இடத்தில் கல்லுமேடு சந்திப்பின் அருகேதான் கல்கி ஆலயம் அமைத்துள்ளனர். இவ்வாலயத்தின் பெயர் ஸ்ரீ மகாவிஷ்ணு- தேவி க்ஷேத்திரம் என்பதாகும்.

(வடநாட்டிலும் கல்கி பகவானின் வரவுக்காக ஒரு ஆலயம் அமைத்திருக்கிறார்கள். ஆனால் வழிபாடு செய்யப்படுவதில்லை.)

புராணத்தில் விளக்கியுள்ள தோற்றத்தின்படியே கல்கி பகவானை உருவாக்கி இவ்வாலயக் கருவறை யில் பிரதிஷ்டை செய்துள்ளனர். சதுரவடிவக் கருவறை மீதுள்ள விமானம் சுதைச் சிற்பங்களுடன் அழகுற அமைந்துள்ளது.

இவருக்கு கடுசர்க்கரைப் பாயசம், பால் பாயசம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை நிவேதனம் செய்கின்றனர். ஏப்ரல் மாத திருவாதிரையில் விசேஷ உற்சவம் நடத்துகின்றனர். இங்கு பக்தர்கள் சந்தான பாக்கியம் பெற, ஆயுள் நீடிக்க, ஆனந்த வாழ்வு பெற, விரைவில் விவாகம் நடக்க, நோய்கள் விலக பிரார்த்தித்துப் பலன் பெறுகின்றனர்.

80 ஆண்டுக்குமுன் சுவரில் ஓவியமாக வரைந்து இந்த கல்கி அவதாரத்தைப் பூஜித்து வந்தனர். இதனை நிர்வகித்த குடும்பத்தில் ஒரு பெண் அம்மை நோயால் இறந்தாள். அவளைச் சுற்றி அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்து விஷ்ணுவை வணங்கி விபூதி பூசியபின், அவள் உயிருடன் எழுந்தாள். அதற்கு கைம்மாறாக என்ன செய்ய வேண்டும் என விஷ்ணுவிடம் வேண்டினர். அசரீரி யாக விஷ்ணு, "இங்கு கல்கி ஆலயம் அமைத்து மூலவராகப் பிரதிஷ்டை செய்து பூஜியுங்கள்' என்றாராம். அதன்படியே இவ்வாலயம் அமைத்து இன்றளவும் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

No comments:

Post a Comment