Monday, June 27, 2011

கட்டாய சீதனம் கேட்காதீர்

திருமண வீடுகளில் மாப்பிள்ளை, பெண் இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து கண்ணாடி பார்ப்பது போன்ற சில விளையாட்டுகளை நடத்தும்போது, எல்லாரும் சுற்றிநின்று கைதட்டி சிரித்து சப்தம் போடுகிறார்கள். இத்தகைய செயலை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. பெண்ணையும், மாப்பிள்ளையையும் கண்ணாடியில் பார்க்கச்செய்வது முறையானாலும் ஆரவாரம் செய்வதோ, சப்தம் போடுவதோ கூடாது. கணவன், மனைவி முதலிரவுக்கு ஒத்திகையாகத்தான் இந்த சிறு சந்திப்பு நடத்தப்படுகிறது. இந்த முதல் சந்திப்பு எப்படி அமைய வேண்டும் தெரியுமா? மணமக்கள் ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக்கொள்ள வேண்டும். பெண்ணுக்கு மாப்பிள்ளை மோதிரம் அணிவித்து அன்பைப் பரிமாறலாம். பாலை எடுத்து பெண் மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டும். மாப்பிள்ளை அதில் ஓரளவு குடித்து விட்டு, பெண்ணிடம் கொடுக்கலாம். இத்தகைய கண்ணியமான சில விளையாட்டுகளை நடத்துவதே சிறப்பானது. கல்யாண சடங்கு முடிந்த பிறகு பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏதேனும் சில சீதனப்பொருட்கள் அனுப்பி வைக்கலாம். அதற்காக, மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் இன்ன பொருட்கள் வேண்டும் என்று கட்டாயப் படுத்தவோ, தொல்லை தரவோ கூடாது. அண்ணலார் நாயகம் அவர்கள், தங்களது மகள் பாத்திமா அவர்களுக்கு கொடுத்த சீதனப்பொருட்கள் என்னென்ன தெரியுமா? ஒரு கம்பளம், தண்ணீர் நிரப்பும் தோல் துருத்தி, ஈச்ச ஓலையில் பின்னப்பட்ட கட்டில், ஈச்சம் சருகுகள் பொதித்த மெத்தை, ரோமங்கள் பொதித்த தலையணை இரண்டு, தண்ணீர் சால், தண்ணீர் குடிக்கும் பாத்திரமான மரக்குண்டான், கையில் மாட்ட வெள்ளி வளையம் ஆகியவையே. அதுவும் தமது விருப்பத்திற்காகத்தான் கொடுத்தார்களே ஒழிய, அலி அவர்கள் எதையும் கேட்டுப்பெறவில்லை. இத்தகைய முறையில் திருமணத்தை நல்லபடியாக நடத்துங்கள்.

No comments:

Post a Comment