தியானமே திடமான வெற்றி தரும் அருமருந்து!
ஆன்மிகச் சொற்பொழிவு ஒன்றை முடித்துக் கொண்டு, மண்டபத்தை விட்டு நான் வெளியே வரும்போது, வழக்கம்போல் சில ஆன்மிக அன்பர்கள் என்னுடனேயே வந்து வழியனுப்பினர்.அப்போது ஒரு அன்பர், ""சார்... என் பெயர் ரங்கநாதன். (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது நாற்பத்தைந்து. நல்ல மனைவி. இரு ஆண் குழந்தைகள். அரசு உத்தியோகம். ஆபீஸ் என்னவோ காலை பத்து மணிக்குத்தான். நல்ல ஆசாரமுள்ள குடும்பம். மூன்று மாதத்திற்கு ஒரு முறைதனியாகவாவது திருப்பதி போய் விடுவேன். காலை ஆறு மணிக்கு எழுந்து ஸ்நானம் செய்து, பூஜையும் முடித்து அரை மணி நேரம் தியானம் செய்கிறேன்.
ஆனால் எனக்கு நல்லதே நடப்பதில்லை. பிள்ளைகளும் சுமாராகவே படிக்கிறார்கள். ஆபீசில் எனக்குக் கீழே இருந்தவர்கள் எல்லாம் பணி உயர்வு பெற்று மேலே வந்து விட்டார்கள். நான் ஒரு படி முன்னேறினால் அவர்கள் பத்து படி முன்னேறிவிடுகிறார்கள். நான் என்ன செய்தால் நல்லது நடக்கும்?'' என்று மூச்சுவிடாமல் கேட்டார் அவர்.
இதை ஏன் என்னிடம் கேட்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. நான் ஏதாவது பதில் சொன்னால் அவர் அழுதுவிடுவார் போலிருந்தது. நான் மெதுவாக அவர் தோளைத் தடவிக் கொடுத்து, ""நாளை இதே இடத்தில் நான் பேசப் போகிறேன். அப்போது உங்களுடைய கேள்விக்குப் பதில் சொல்கிறேன்'' என்று சொன்னவுடன் ஓரளவு சமாதானமடைந்து புறப்பட்டார்.
இப்படிப்பட்ட பல சம்பவங்கள் பல ஆன்மிகச் சொற்பொழிவாளர்களுக்கு நேர்வ துண்டு. "என் மகன் என்னை மதிப்பதில்லை; "மருமகள் வீட்டினுள்ளே சேர்க்க மறுக்கிறாள்'; "பெற்ற மகளே சோறு போடுவதில்லை...' -இப்படிப் பல கேள்விகள் கேட்பார்கள். இதுபோன்ற ஒற்றைவரிக் கேள்வி களுக்கு ஓரளவு நல்லது சொல்லி அனுப்பிவிடலாம். ஆனால் முதலில் சொன்ன ரங்கநாதனுக்கு எப்படி பதிலளிப்பது? ஒரு கதையே சொல்லியிருக்கிறாரே அவர்! நல்ல மனிதர்; நல்ல மனைவி. பத்து மணி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவர், பலரைப்போல் எட்டு மணிக்கும் ஒன்பது மணிக்கும் எழுந்திராமல், ஆறு மணிக்கே எழுந்து பூஜை, தியானம் செய்கிறார்.
ஆனால் மொத்தக் குறைகளில் இரண்டுதான் அவரை வாட்டுகிறது. ஒன்று குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் பெறுவதில்லை; அடுத்தது ஆபீசில் சரியான பதவி உயர்வு கிட்டவில்லை. இந்த இரண்டுக்காக அவர் குழம்பிப் போயிருப்பது தெரிந்தது. இந்த இரண்டுக்கான காரணத்தைக் கண்டு பிடிக்காமல் கடவுளிடமும் தியானத்திலும் அவர் சரியான நம்பிக்கை கொள்ளவில்லை என்று புரிந்தது. இப்படி இரண்டுங்கெட்டான் நிலையில் இருப்பவர்கள்தான் ஏராளம்.
மறுநாள் அதே மண்டபத்தில் நான் சுந்தர காண்டம் சொல்ல வேண்டும். ரங்கநாதன் மண்டபத்து வாயிலிலேயே எனக்காகக் காத்திருந்தார்.
""ரங்கநாதன், இன்று சுந்தர காண்டம் சொல்கிறேன். கவனமாகக் கேளுங்கள்.
ஆனால் ஒன்று... நீங்கள் அனாவசியமாகக் குழம்ப வேண்டாம். பிள்ளைகள் சரியாகப் படிக்கவில்லை; பிரமோஷன் சரியாக வருவதில்லை. இந்த இரண்டுதான் உங்களுக்குப் பிரச்சினை. ஆனால் நீங்கள் வாழ்க்கையே ஒரு பெரிய பிரச்சினைபோல என்னிடம் சொன்னீர்கள். அந்த ஆஞ்சனேயப் பிரபு உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார். ஆனால் கவனமாகக் கேளுங்கள்'' என்று சொல்லிவிட்டு மண்டபத்தினுள் நுழைந்தேன்.
சரியாக ஏழு மணிக்கு சுலோகங் களையும், கம்பனுடைய "உலகம் யாவையும் தாமுளவாக்கலும்...' செய்யுளைச் சொல்லிவிட்டு சுந்தர காண்டத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். சுந்தரகாண்டம் முழுவதுமே அனுமனுடைய மகிமைதானே. சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் பல விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்லி முடித்ததும், இலங்கைக்கு யார் போவது- இவ்வளவு பெரிய கடலை யார் தாண்டுவது போன்ற பிரச்சினைகள் வானர சேனைகளிடம் ஏற்பட்டபோது, ஜாம்பவான் இதனை அனுமனால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறியபோது, அனுமனா லேயே நம்ப முடியவில்லை. "நானா?... என்னால் முடியுமா?' என்ற அவநம்பிக்கை ஏற்பட்டபோது, "உன்னால்தான் முடியும்' என்று ஜாம்பவான் நம்பிக்கை ஊட்டியதை சற்று விரிவாகவே சொன்னேன். யாருக்காக? ரங்கநாதனின் இரு பிள்ளைகளுக்காக. அவர் நல்ல தந்தையாக இருந்தாரோ இல்லையோ- தன் பிள்ளைகளுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு தந்தையாக இருந்தாரா என்று எனக்குத் தெரியாது. இருப்பினும் கதையோடு கதையாக ஒவ்வொரு தந்தையும் தன் பிள்ளைகளுக்கு ஜாம்பவானாக இருக்க வேண்டும் என்று சொல்லி மேலே தொடர்ந்தேன்.
ஜாம்பவான் சொன்னதும் ஸ்ரீ ராமனைத் தியானித்தவாறே அனுமன் மண்ணுக்கும் விண்ணுக்குமாக விஸ்வரூப தரிசனம் எடுத்ததைச் சொல்லிவிட்டு, ""மகேந்திர மலையை அப்படியே தூக்கிக் கடலில் எறிந்து அதன்மீது ஏறி நின்று, "அதோ தெரிகிறது இலங்கை' என்று சந்தோஷ மிகுதியால் கூச்சலிடுகிறான். இது தான் பஹழ்ஞ்ங்ற். யாரா லும் நின்ற இடத்தில் இருந்து பார்க்க முடியாத லங்கா புரியை அனுமனால் பார்க்க முடிந்ததென்றால் அதுதான், அது ஒன்றேதான் குறிக்கோள். அந்தப் பரீட்சையில் அவன் வென்றுவிட்டான். பிள்ளை நூறு மார்க் வாங்க வேண்டுமென்றால் பரீட்சை சமயத்தில் படித்தால் மட்டும் போதாது; வகுப்பில் அன்றாடம் கவனமாக இருக்க வேண்டும். தாயும் தந்தையும் ஜாம்ப வானைப்போல் அவனுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். நீ பெரிய டாக்டராக வேண்டும்- நீ பெரிய எஞ்சினியராக வேண்டும் -நீ பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்று தன் பிள்ளைகளின் மனத்தில் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும். ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் நல்ல நம்பிக்கையூட்டினால்தான் அனுமனைப் போல் புத்திக் கூர்மையுடனும் தைரியத்துடனும் சொல்லின் செல்வனாகவும் மாற முடியும். செய்வீர்களா?'' என்று கூட்டத்தினரிடம் கேட்டபோது, மற்றவர்களைவிட ரங்கநாதனே அதிக நேரம் கைதட்டினார்.
இரண்டாவது குழப்பம் பதவி உயர்வு. "குழப்பங்களை வெற்றிகொள்வதே தியானம். அந்த தியானத்தை எத்தனை பேர் செய்கிறீர்கள்?' என்று கேட்டபோது, ஒருசிலர்தான் கைதூக்கினார்கள். "எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டபோது சிலர் விழித்தார்கள். "என்ன மந்திரம் சொல்லி தியானம் செய்கிறீர்கள்?' என்று கேட்டபோது சிலர் "ஓம் நமசிவாய' என்றும்; சிலர் "ஓம் நமோ நாராயணாய நமஹ' என்றும் சொல்வதாகச் சொன்னார்கள்.
""தியானம் செய்யும்போது மனம் குழம்பக் கூடாது; செவியில் பிறர் போடும் சத்தம் விழக்கூடாது; அடுப்படியில் மனைவி செய்யும் சாம்பாரின் வாசனையை மூக்கு நுகரக் கூடாது; மனம் எதையும் நினைக்கக்கூடாது.
"மனசச் சேந்திரியாணம் ச
ஹேகாக்ரம் பரமம் தபஹ.'
மனதை அடக்கினால் ஐம்புலன்களும் கட்டுப்படும். ஐம்புலன்களும் கட்டுப்பட்டால் பரமனை உணரலாம் என்பதே மேற்கண்ட சுலோகம். நம்முடைய இந்துமத இதிகாசம் மற்றும் புராணங்களில் கடவுளின் உருவம் வர்ணிக்கப்பட்டுள்ளது. வால்மீகி, வசிஷ்டர், வியாசர் போன்ற மகான்களால் இறைவன் இப்படித்தான் இருப்பார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றைத்தான் வீட்டில் நாம் படங்களாக வைத்து வழிபடுகிறோம்.
எனவே, சிவன் பார்வதியுடனும், அர்த்தநாரீஸ்வரன் என்று சக்தி ஸ்வரூபமாகவும் விளங்குகிறான் என்பதை பெரிய மகான்கள் நமக்கு வர்ணித்தார்கள். சங்கு சக்ரதாரி- பீதாம்பர தாரி என்று விஷ்ணுவை வர்ணித்தார்கள். விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் விஷ்ணு பலவாறாக வர்ணிக்கப்பட்டுள்ளார். பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருக்கும்போது ஸ்ரீ கிருஷ்ணனே விஷ்ணு என்பதை உணர்த்துகிறார். அப்பேற்பட்ட உருவங்களை மனத்தில் பதிக்க வேண்டும். அவனை நினைத்து தியானிக்க வேண்டும். இது நமது கடமை. இராவணனின் அம்புக்குப் பலியாகாமல் அனுமன் உயிரோடு இருந்ததற்கு அவன் செய்த தியானமே- ஸ்ரீராம நாம மகிமைதான் காரணம்.
நமக்கு சம்பளம் உயரவில்லை; பதவி உயர்வு கிட்டவில்லை. அதனால் தினமும் கோவிலுக்குப் போகிறேன்; தியானம் செய்கிறேன்; 108 தேங்காய் உடைக்கிறேன் என்றெல்லாம் சொல்வதைவிட, பயன் கருதாது இறைச் சிந்தனையில் ஈடுபடுவதே தியானம்'' என்று முடித்து சுந்தர காண்டத்தை நிறைவு செய்தேன்.
""சார்... என் கண்களைத் திறந்து விட்டீர்கள். தியானம் செய்யும்போது குழம்புவேன். இப்போது புரிந்து கொண்டுவிட்டேன்'' என்று நம்பிக்கையோடு சொன்னார்- கண்களில் ஒளிமின்ன ரங்கநாதன்!
No comments:
Post a Comment