Saturday, February 11, 2012

தை அமாவாசை

 தை அமாவாசை. இந்த நாளில், நம் முன்னோருக்கு அவசியம் தர்ப்பணம், திதி கொடுக்க வேண்டும். இது குறித்து காஞ்சிப்பெரியவர் சொல்வதைக் கேளுங்கள். ஒரு ஜீவன்(உயிர்) இருக்கும் போதும், இறக்கும் போதும், இறந்த பின்பும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. ஒருவர் இறந்த பின் திவஸம், திங்கள் எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடாது. பித்ரு காரியங்கள் பரோபகாரத்தைச் சேர்ந்தவை. பித்ருக்கள்(முன் னோர்) எங்கே, எப்படிப்பட்ட ஜன்மா(பிறவி) எடுத்திருந்தாலும் அங்கே அவர்களுக்கு, இங்கே செய்யும் தர்ப்பணம் திருப்தியை உண்டாக்கும். ஒருத்தர் செத்துப் போனவுடனேயே பித்ருலோகம் போய் விடுவதில்லை. இன்னொரு ஜன்மா எடுத்து விடுவதில்லை. இறந்து போனவரின் ஜீவன்(உயிர்) ஒரு வருஷம் பிரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை அடைகிறது. இதை நம் சாஸ்திரங்களில் இருக்கிற மாதிரியே "கிரீக் மைதாலஜி' (கிரேக்கபுராணம்) முதலான மதாந்திரங்களிலும் சொல்லியிருக்கிறது. ஜீவன் வைதரணியைக் (எமலோகம் செல்லும் வழியிலுள்ள ஆறு) கடந்து யமபட்டணம் போக வேண்டும் என்று நாம் சொல்கிற மாதிரியே அவர்களும் ஒரு நதியை சொல்லி அதைத் தாண்டி மறுலோகத்துக்கு போக வேண்டும் என்கிறார்கள். ஒரு ஜீவன் பரலோகம் செல்வதற்குப் பிடிக்கிற இந்த ஒரு வருஷத்தில் தான் அதன் திருப்திக்காக மாசா மாசம் சில சடங்குகளைச் செய்கிறோம். இவையெல்லாம் ஒரு ஜீவனை பரமாத்மாவிடம்(கடவுளிடம்) கொண்டு சேர்க்கிற பரம உத்க்ருஷ்டமான பரோபகாரம்(மிக உயர்ந்த சேவை).
 -காஞ்சிப்பெரியவர்


நம் குடும்பத்தில் இறந்த முன்னோரை வடமொழியில் "பிதுர்' என்பர். அவர்களுக்குரிய உலகம், "பிதுர்லோகம்' ஆகும். புண்ணியம் செய்த உயிர்களே பிதுர்களாக பிதுர்லோகத்தில் இருக்கும். நம் முன்னோர் தேவர்களுக்குச் சமமானவர்கள். எனவே, அவர்களை வழிபடவேண்டியது நம் கடமை என்று வேதம் கூறுகிறது. தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளில்,"தென்புலத்தார்' என்று இவர்களைக் குறிப்பிடுகிறார். இவர்களை வணங்க எல்லா அமாவாசைகளும் உகந்தது என்றாலும், தை, ஆடியில் வரும் அமாவாசைகள் சிறப்பானவை. தை அமாவாசை, சூரியனின் வடக்கு திசை பயணத்தைக் குறிக்கும் உத்ராயண புண்ணிய காலத்திற்கு உரியது. இந்நாளில் தீர்த்த தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் செய்து நீராடினால் முன்னோர் ஆசி முழுமையாக கிடைக்கும்.


புனித கங்கை தீர்த்தம்
கபில முனிவரின் சாபத்தால், சகரன் என்பவனின் புத்திரர்கள் எரிந்து சாம்பலாயினர். துர்மரணமடைந்த அவர்கள் நற்கதி அடையவில்லை. இதை அவர்களின் வழியில் பிறந்த பகீரதன் அறிந்தான். அவர்களது ஆத்மசாந்திக்காக தவம் செய்தான். தேவலோகத்தில் இருந்து கங்கை நதியை வரவழைத்தான். இந்த நதி நீர் பட்டதால் சகரபுத்திரர்கள் பிதுர்லோகத்தை அடைந்தனர். இந்நதியில் 64தீர்த்தக்கட்டங்கள் உண்டு. இதில் மணிகர்ணிகாகாட் என்னும் தீர்த்தக்கட்டம் சிறப்பானது. இங்கே தொடர்ந்து பிணங்கள் எரிந்தபடி இருக்கும். கங்கையில் நீராடிவிட்டு, படித்துறைகளில் பக்தர்கள் பிதுர் தர்ப்பணம் செய்வர்.



No comments:

Post a Comment