Friday, February 17, 2012

மந்திரங்களை உச்சரிப்பது எப்படி?


மந்திரங்களை உச்சரிப்பது எப்படி?

மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு சாதனமாகும். மந்திரங்கள் நம் எண்ணங்களை வலுப்படுத்தி, ஆற்றலை வளர்த்து, மனச் சஞ்சலத்தைக் குறைத்து, மனதை அமைதிப் படுத்தி நம்மிடத்து நல்ல எண்ணங்களை வளர்க்கும் ஆற்றல்பெற்றவை. மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில், உடல், மனம், ஆன்மா மூன்றையும் அந்த மந்திரத்தில் அந்த மந்திரத்திற்கு உரிய தெய்வத்தில், அல்லது தேவதையில் நிலைநிறுத்தி உரிய ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும்போது உரிய விரிப்பில் (மான் தோல், புலித்தோல், உரிய மரப்பலகைகள், பட்டுத் துணி, தர்ப்பை, வெள்ளை வஸ்த்திரம்) அமர்ந்து உச்சரிக்க வேண்டும். கண்டிப்பாக வெறும் தரையில் அமர்ந்து மந்திர உச்சாடணம் செய்யக் கூடாது. அதிகாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையான பிரம்ம முகூர்த்தத்தில் மந்திர உச்சாடனம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். அப்படி முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அந்த நேரத்திற்கே மந்திர உச்சாடணம் செய்ய வேண்டும்.
மந்திரங்களை உச்சரிக்கும் போது, 1. சத்தமாக, 2. உதடு மட்டும் அசைந்து, 3. சத்தமே வராமல் மனதிற்குள் என உச்சரிக்கலாம் இதில் மூன்றாவதாக சொன்ன முறையிலேயே அதிக பலன் உள்ளது. அதாவது உதடு, நாக்கு அசையாமல் மந்திரத்தினை மனதிற்குள்ளேயே உச்சரிக்க வேண்டும். மந்திரத்தின் தன்மைக்கேற்ப திசையினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஞானமந்திரங்கள் வடக்கு நோக்கியும், இல்வாழ்விற்குரியன கிழக்கு நோக்கியும், மாரண மந்திரங்கள்
தெற்கு நோக்கியும் அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு. குறைந்த பட்சம் மந்திரங்களை 108 முறை அவசரம் காட்டாது உச்சரிக்க வேண்டும். மனதிற்குள்ளேயே நாவசையாமல் உச்சரிப்பவர்கள் 54, 27 முறை உச்சரிக்கலாம். 16 தடவைக்கு குறையாமல் உச்சரிக்க வேண்டும்.
மந்திரங்களை உச்சரிக்கும்
 இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். பூசை அறை சிறப்பானதாக இருக்கும். பூசை அறையில் நல்ல நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி அறை மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நறுமணம் பிடிக்குமாதலால் அவரவர்கள் தங்களிற்கு பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது. யட்சிணி, மோகினி போன்ற தேவதைகளிற்கு மல்லிகை மணம் பிடிக்குமாதலால் அவற்றிற்கு மல்லிகை மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு. அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு, தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை தெரிந்து உபயோகிக்க வேண்டும். சாம்பிராணி புகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால் சாம்பிராணி தூபம் உபயோகிப்பது சிறப்பானது.
பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள்
 ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும்.
மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது சாத்வீக மந்திரங்களாக இருப்பது நல்லது. அகோரமந்திரங்கள்
 முறைப்படி வழிபாடு செய்யாவிட்டால் நமக்கு எதிர்விளைவுகளைக் கொடுத்து விட வாய்ப்புள்ளது. மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும். முதலில் மந்திரத்திற்குரிய தேவதையிற்கு மலர், தூப, தீப, நைவேத்திய ஆராதனை செய்த பின்னர் மந்திரங்களை உருக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். உரிய எண்ணிக்கை உருக் கொடுத்த பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி பூசையினை நிறைவு செய்ய வேண்டும். உருக் கொடுக்கும் எண்ணிக்கையை மனதில் நிறுத்திக் கொள்ள கை விரல்களின் கணுக்களை கொண்டு கணிக்கலாம் அல்லது உரிய ஜெப மாலையை உபயோகிக்கலாம். ஜெப மாலைகள் மந்திரத்தின் தன்மைக்கேற்ப ருத்திராட்சம், ஸ்படிகம், மிளகு, தாமரைக் கொட்டை, துளசி என மாறுபடும். ஜெப மாலையின் மணியின் எண்ணிக்கை 108 உடையதாக இருக்க வேண்டும்.மந்திரங்களை ஒரு குருவின் மூலமாக உபதேசம் பெற்று ஜெபிப்பதே சிறப்பு. தகுந்த குருவினால் மட்டுமே மேலே சொல்லப்பட்ட சகல விடயங்களிலும் சரியான வழியினைக் காட்ட முடியும்.

1 comment:

  1. It is very useful to me and it also answer to my requirement

    ReplyDelete