** அறுபது வயதடைந்த அனைவரும் 60ம் கல்யாணம் கட்டாயம் நடத்த வேண்டுமா?
நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றையும் சேர்த்துப் பார்ப்பது அறுபதாவது பிறந்த நாளில் தான். மறுமுறை பார்ப்பது நூற்று இருபதாவது வயதில்! அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் அறுபது வயது பூர்த்தி என்பது மிக விசேஷமான நாள். அன்றைய தினம் ஆயுள்ஹோமம் செய்து, திருமாங்கல்ய தாரணமும் செய்ய வேண்டும். அன்றைய தினம் முதல் மறுபிறவி எடுத்ததாக எண்ணி, அது முதல் அந்த தம்பதிகள் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். இதனை "ஷஷ்டியப்தபூர்த்தி சாந்தி' என சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே கட்டாயமாக செய்து தான் ஆக வேண்டும். ஆடம்பரமாகச் செய்ய வேண்டும் என்பதில்லை. எளிமையாக நடத்திக் கொள்ளலாம்.
ஒரே வீட்டில் இரு திருமணங்களைச் சேர்த்து நடத்தலாமா?
நடத்தலாம், முகூர்த்த நேரத்தை மட்டும் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். கண் திருஷ்டிக்குப் பயந்துதான் சிலர் இதை செய்ய யோசிக்கிறார்கள். தேங்காய் உடைத்து பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து விடுங்கள். தம்பதிகள் அமோகமாக இருப்பார்கள்.
* சிலர் கடவுள் வேடம் அணிந்து பிச்சை எடுக்கிறார்களே. இதை ஊக்கப்படுத்தலாமா?
கடவுள் வேடம் வேறு. கிடைக்கும் காசை எடுத்துக் கொண்டு வேடத்தைக்கூட கலைக்காமல் அசைவ ஓட்டலிலும் மதுபானக்கடைகளிலும் இவர்களைக் கண்டு வேதனைப்படுபவர்கள் ஏராளம். எனவே ஊக்குவிக்காதீர்கள். பிச்சைக்காரர்களே இல்லாத நாடாக இந்தியா மாற வேண்டும். பிச்சைஎடுப்பவர்கள் திருந்தி வேறு வழியில் உழைத்து சம்பாதிக்க வேண்டும். அவர்களது குழந்தைகளையாவது படிக்க வைக்க வேண்டும். எவ்வளவோ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தோன்றியும் இவர்களை மாற்ற முடியவில்லையே!
ஜாதகத்தில் பெண் சாபம் இருந்தால் நிவர்த்தி செய்வது எப்படி?
இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் கிடைப்பது, குதிரைக் கொம்பாகிவிட்டது. பெண் குழந்தை வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படத் தோன்றுகிறது. இதற்குப்பரிகாரம் பிறக்கின்ற பெண் குழந்தைகளையாவது பாராட்டி சீராட்டி வளர்ப்பது தான்! பெண் குழந்தை பெற்றெடுப்பவர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். ஜாதகப்படி பெண் சாபம் இருந்தால் சுமங்கலி பூஜை செய்யுங்கள்.
பெரியவர்களை சந்திக்கும் பொழுது எலுமிச்சம்பழம் கொடுப்பது ஏன்?
எலுமிச்சம் பழம் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. பெரியவர்கள், குழந்தைகள், ஆசிரியர், தெய்வம் இவர்களைப் பார்க்கச் செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்லக்கூடாது. அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், பழங்கள், கோயிலுக்கு என்றால் புஷ்பம் இப்படி எதாவது எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment