கவுதம முனிவரின் மனைவி அகலிகை. பேரழகியான இவள் மீது இந்திரன் ஆசைப்பட்டான். கவுதமர் அதிகாலையில் சேவல் கூவியதும், நீராட ஆற்றுக்குச் செல்வது வழக்கம். இதைப் பயன்படுத்திக் கொண்ட இந்திரன், சேவலாய் வடிவெடுத்து, ஒருநாள் நடுநிசியிலேயே கூவ, கவுதமர் ஆற்றுக்கு கிளம்பி விட்டார். இந்திரன், தன் வடிவை கவுதமர் போல மாற்றிக் கொண்டு, குடிலுக்குள் வந்து, ""இன்னும் விடியவில்லை, சேவல் தவறாகக் கூவியிருக்கும் போல' என்று சொல்லி, அகலிகையுடன் தனித்திருந்தான். அவள் கற்பிழந்தாள்.
திரும்பி வந்த கவுதமர் நடந்ததை அறிந்து, அவளைக் கடிந்து கொண்டார். கல்லாகப் போகும்படியும், ராமனின் கால்பட்டால் தான் விமோசனம் என்றும் சொல்லி விட்டார். ராமனும் வந்தார். கால் பட்டது. அகலிகை எழுந்தாள்.
கற்பிழந்த ஒருத்தியை ஏற்றுக்கொள்ள கவுதமருக்கு தயக்கம். ""உருவம் ஒன்றாக இருந்தாலும் கணவனுக்கும், இன்னொருவனுக்கும் ஸ்பரிச பேதம் தெரியாத இவளை நான் எப்படி ஏற்பது?'' என்றார்.
உடனே ராமன்,""கவுதமரே! முக்காலமும் உணர்ந்த ஞானியான நீரே, கூவியது உண்மைச் சேவலா, பொய்ச்சேவலா எனத்தெரியாமல் சந்தியாவந்தனத்துக்கு கிளம்பிச் சென்றீரே! அப்பாவியான, இவள் உமக்கும், அவனுக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி அறிவாள்?'' என்று எதிர்க்கேள்வி கேட்டார்.
முனிவரால் பதில் சொல்ல முடியவில்லை. அகலிகையை ஏற்றுக் கொண்டார். தெரியாமல் செய்த தவறுக்கு இறைவனின் சந்நிதானத்தில் மன்னிப்பு உண்டு.
No comments:
Post a Comment