ஆலயம்
எல்லா உயிர்களும் லயம் ( ஒடுங்கும்) ஆகும் இடம் தான் ஆலயம்!
எல்லோரும் ஒன்றாகக்கூடி இறைவனை வணங்கும் இடம் (வணங்குவதற்குரிய இடம் ) ஆலயமாகும்!
பசு (ஜீவன்) தன்னுடைய மும்மலத்தினை நீக்கி இறைவனிடம் ஒடுங்கும் இடம் ஆலயம்!
இறைவனின் இருப்பிடம் ஆலயம்!
ஊனுடம்பே ஆலயம் என்பர் சித்தர்கள்!
ஆலயம் என்பதனை உடலாகக் கொண்டால், கோபுரம் - வாய்.;
நந்தி - நாக்கு;
கொடி மரம் - உள் நாக்கு;
விளக்கில் உள்ள பஞ்ச் தீபங்கள் - பஞ்ச இந்திரியங்கள்;
கர்ப்ப கிரகம் - இதயம்;
சிவலிங்கம் - உயிர்;
ஆலயத்தில் ஐந்து பிரகாரங்கள்.
கர்ப்ப கிரகத்தை அடுத்து ஒவ்வொன்றாக ஐந்து பிரகாரங்கள் உள்ளன. முதல் பிரகாரம் - அந்தர் மண்டபம் ; இரண்டாம் பிரகாரம் - அந்தர்ஹாரம்; மூன்றாம் பிரகாரம் - மத்திய ஹாரம்; நான்காம் பிரகாரம் - மாயாதா ; ஐந்தாம் பிரகாரம் - மஹாமாரியாதா என்றழைக்கப் படும்.
ஜீவனிற்கு ஐந்து உடல்கள் உண்டு. காரணசரீரம் ;கஞ்சுகசரீரம் ; குண சரீரம் ; சூக்கும சரீரம் ; தூல சரீரம் என ஐந்து வகையான உடல்கள் இருக்கின்றன.
காரண சரீரம் - ஆனந்த மய கோசம் என்றும்,
கஞ்சுக சரீரம் - விஞ்ஞான மய கோசம் என்றும்,
குண சரீரம் - மனோமய கோசம் என்றும்,
சூக்கும சரீரம் - பிராணமய கோசம் என்றும்,
தூல சரீரம் - அன்னமய கோசம் என்றும், ஐந்து வகைகளாகும். ஐந்து பிரகாரங்களும் ஐந்து கோசங்களாகும். ஒவ்வொன்றும் நுண்மையானது.
ஐந்தாவது பிரகாரத்தை விட நான்காம் பிரகாரம் நுண்மையானது;
நான்காம் பிரகாரத்தை விட மூன்றாம் பிரகாரம் நுண்மையானது. இவ்வாறே ஒவ்வொன்றும் ஒன்றைக் காட்டிலும் நுண்மையானதாக இருக்கின்றது. சரீர தத்துவமே ஆலய தத்துவமாகும்!
பதி - பசு - பாசம் விளக்கமே சிவாலயமாகும்.
பதி - சிவ லிங்கம்.
பசு - நந்தி
பாசம்.- பலி பீடம்
ஜீவர்கள் மனமெனும் நந்தி அலைந்து கொண்டிராமல், சுகம் துக்கம், அன்பு, பாசம் , பற்று இவைகளை ஒடுக்கினால் தான் இறைவனோடு ஒன்ற முடியும் என்பதே சிவாலயத் தத்துவமாகும்.
இன்னும் சிறிது ஆழ்ந்து நோக்கும் போது, எங்கிருந்து வந்ததோ அங்கேயே ஜீவன் ஒடுங்குவதே ( இறைவன் படைத்து, இறைவனிடமே சென்று சேர்தலே)
லிங்கமாகும்.
ஆலயத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனி அரு உருவத் திருமேனியாகும்.
No comments:
Post a Comment