சுபிட்சம், வெற்றி, இன்பம், தருமம்
தத்தமது இயல்புபடி அவரவர் கடமையைச் செய்தால் நிறை நிலையை அடையலாம் என்று விளக்கிய கிருஷ்ண பகவான், அவர்கள் மேலும் அடையக்கூடிய நற்பலன்களை விளக்குகிறார்:
“தனது சொந்தக் கடமையைச் செய்வதன் மூலம் சாந்தமுள்ள ஒரு யோகி புனிதத் தன்மையை அடைகிறான். அவன் நிர்ச்சலனமானவனாக ஆகிறான். அவனது மனம் இப்போது அலை பாய்வதில்லை. அது அவனிடம் கட்டுப்பட்டதாக இருக்கிறது. மனம் கட்டுப்பட்டுவிட்டால் புலன்களும் அவன் வசம்தானே? ஆகவே, ஐந்து புலன்களையும் தூண்டிவிடக்கூடிய பொருட்களை அவன் சிந்தித்தும் பார்ப்பதில்லை. எளிதாக அவற்றை அவன் விட்டு விடுகிறான். அவனுக்குள் விருப்பு, வெறுப்பு என்ற பேதமே இல்லை. அவற்றை அவன் வென்றவனாக இருக்கிறான். சுற்றிலும் மனிதர்கள் இருந்தும், சொல்லிக் கொள்ள சொந்தம், பந்தம், நட்பு என்று அவனை வளைத்துப்போட பாசவலைகள் அவன் மீது வீசப்பட்டபோதும், அவன் தனிமையில் வாழ்கின்றான். அதாவது, அவனது பார்வை உள்நோக்கிய வண்ணமாக இருக்கின்றது...”
“அப்படியென்றால், அவன் எந்த இச்சையையும் அடக்கி வைத்துக் கொள்கிறவனாகவே இருப்பான் இல்லையா?” -அர்ஜுனன் கேட்டான்.
“ஆமாம்,” பகவான் சொன்னார். “இச்சைகளை அடக்குவதன் மூலம், அவன் தன் மனம், உடல், பேச்சு ஆகியவற்றை அடக்கி ஆள்பவனாக இருக்கிறான். அதனாலேயே அவன் தன்னைத் தனித்து உணர்கிறான். அதுமட்டுமல்ல, தனக்கும் மேலான ஒரே ஒரு பரம்பொருளாகிய கடவுள், தன் அருகில் இருப்பதையும் அவன் எப்போதும் உணர்கிறான். அகந்தை இல்லாதவனாக, ஆசை அற்றவனாக, கோபம் கொள்ளாதவனாக, பொருள் மீது பற்று நீங்கியவனாதலால் சம்பாதிப்பதில் ஆர்வம் துறந்தவனாக அவன் வாழ்கிறான். இத்தகைய விசேஷ குணங்கள் உள்ள யோகிதான் பிரம்மத்துடன் ஐக்கியம் அடைவதற்கான தகுதியைப் பெற்றவன். அவனுக்கு யாரும் உயர்வில்லை, யாரும் தாழ்வில்லை.
அவன் எல்லோரையும் சமமாகக் கருதுகிறான். உணர்வுகள் அவனுக்குக் கட்டுப்படுவதால், அவன் பெருமகிழ்ச்சியால் துள்ளுவதும் இல்லை, துக்கத்தில் துவண்டு போய்விடுவதும் இல்லை. அவனால்தான் கடவுளை அறிய முடிகிறது, உணர முடிகிறது, துய்க்க முடிகிறது. அத்தகைய ஒரு பக்தன்தான் கடவுளை உண்மையாக அறிந்து கொண்டு அவரிடத்தில் ஒன்றுபட்டு விடுகிறான். அதாவது, என்னிடம் சரண் அடைந்து அழிவற்ற நிரந்தரமான இடத்தைப் பெறுகிறான்...”
அர்ஜுனன் சற்றே தெளிவடைந்தவன் போலானான். முகம் மலர்ந்தது.
“ஆகையால்,” கிருஷ்ணன் தொடர்ந்தார். “உன்னிடம் உள்ள, உன்னுடையது என்று நீ நினைத்துக்கொண்டிருக்கிற எல்லாவற்றையும் எனக்கு அர்ப்பணம் செய்துவிடு. பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்யும் நீ, உன்னுடைய பக்தியின் மகோன்னதமான லட்சியமாக என்னை எண்ணிக்கொள். உன்னுடைய மனம் என்னைத் தவிர வேறு எதிலுமே லயிக்காதபடி செய். இதைச் செய்தாயானால் அனைத்து இன்னல்களையும் நீ தாண்டிவிடுவாய். ஆனால், அகந்தை கொண்டு, நான் கூறுவதை நீ அலட்சியப்படுத்தினால், அதற்கு மதிப்பளிக்காவிட்டால், செவி சாய்க்காவிட்டால் நீ முற்றிலுமாக அழிந்து விடுவாய். இதில் ஒரு முக்கியமான விஷயத்தை நீ கவனிக்க வேண்டும்.
அதாவது, முரண்பாடான கருத்துகளையெல்லாம் அறவே விட்டுவிட்டு, பாதுகாப்பை மாத்திரமே நீ நாட வேண்டும். அவ்விதம் நாடினால், நீ பாவத்திலிருந்து எளிதாக விடுதலை பெறுவாய்.
“இன்னொன்றையும் புரிந்துகொள். பக்தனாக இல்லாத, தன் வாழ்க்கையில் தவம் இல்லாத, என்னை வெறுக்கக் கூடிய எந்த நபரிடமும் இந்த உண்மையை நீ சொல்லிவிடாதே. இதைக் கேட்க விரும்பாதவனிடமும் இதைச் சொல்லாதே. ஆனால், என்னைப் புரிந்துகொண்ட, என் மீது பக்திகொண்ட என் பக்தர்களிடம் மட்டும் இந்த மகத்தான ரகசியத்தைக் கூறு. அவர்கள் அந்த ரகசியத்தைப் புரிந்துகொண்டு, ஏற்கெனவே என்னைப் புரிந்திருப்பதால், தன் பக்தியினால் அவர்கள் என்னை வந்தடைகிறார்கள்.”
மகாபாரத யுத்தத்தின் ஒவ்வொரு அசைவையும் சஞ்சயன், பார்வையிழந்த திருதராஷ்டிரனிடம் தெரிவித்துக்கொண்டிருந்தான். அந்த வகையில், அர்ஜுனனுக்கும், கிருஷ்ணனுக்கும் நடந்த உரையாடலையும் அறிவித்தான். கிருஷ்ணனை சஞ்ச யன், ‘யோகேஸ்வரன்’ என்று வர்ணித்தான்.
அதாவது, யோகத்தின் மன்னன் அவன். அப்படியென்றால் என்ன? ஆன்ம அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட தூய்மையான ஞானம் அவன் என்பதே இதன் அர்த்தமாகும். ஆன்ம அனுபவத்தை, இங்கே அர்ஜுனனை வில்லாளி என்று குறிப்பிடுகிறான். அதாவது, உண்மையான ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு தன் கடமையைச் செய்பவனுக்கு, தருமத்திற்கும், நீதிக்கும் முரணில்லாத அவனுடைய ஆசைகள் யாவும் நிறைவேறுகின்றன என்பதே இதன் பொருளாகும். “யோகீசுவரனான கிருஷ்ணன் எங்கே இருக்கிறாரோ, வில்லுடனும் அம்புகளுடனும் அர்ஜுனன் எங்கே இருக்கிறானோ, அங்கே லட்சுமி கடாட்சமும், சுபிட்சமும், வெற்றியும், இன்பமும், தருமமும், நீதியும் நிலைத்திருக்கும்” என்றும் நிறைவாக அவன் தெரிவித்தான்.
No comments:
Post a Comment