பகவானிடம் முறையிட்ட ஒரு மலர் !
பெரியாழ்வாரின் பாசுரம் பாடியபடி பூப் பறிக்கும் ஆண்டாள் தாசரது பக்திக்காகவே அந்தப் பவளமல்லி மரம் பூத்துக் குலுங்கும். அதில் எந்தப் பூவும் உதிராமல் கவனமாக இருக்கும். ஏன்? உதிர்ந்த பூக்களை அவர் பெருமாளுக்குச் சாத்துவதில்லை.
ஆனால் இன்று தாசர் இந்தப் பூவைப் பறித்தபோது அவரை ஓர் எறும்பு கடித்துவிட்டது. தாசரின் கை நழுவியதால் அந்தப் பூ பாதையில் கிடக்கிறது.
ஓ, ஒரு மலர் மாலையாகும் பாக்கியத்தை இழந்துவிட்டதே என எண்ணிய தாசரின் காலைக் கட்டிக் கொண்டு என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கதற நினைத்தது அந்தப் பூ. ஆனால் தாசர் வேறு மரத்திற்குச் சென்றுவிட்டார்.
அழுத அந்தப் பூ மகளிடம், விடு, உன் விதி இதுவென ஏற்றுக்கொண்டு, அடுத்த பிறவியில் முயன்றிடு என அந்த மலரின் தாயான மரம் ஆறுதல் தந்தது.
ஆனால் இந்தப் பூவோ மகரந்தச் சேர்க்கை நடந்தபோதே மன்மதச் சேர்க்கை உடைய எவரிடமும் சேர்வதில்லை என விரதமெடுத்துவிட்டது. அம்மலர் மலர்ந்தது மலர்வண்ணனின் மலரடி சேர்வதற்கென்றே அல்லவா? அது முடியாதபோது பெருமாளிடம் முறையிட்டாள்.
மகளே நான் உன் புறத்தோற்றத்தையோ, உன் நிலையையோ பொருட்படுத்தவில்லை. இன்று பொழுது புலர்வதற்கு முன் நான்காம் ஜாமத்திலிருந்தே நீ என்னை நினைத்துக் கொண்டிருப்பதை அறிவேனம்மா என்றார் பெருமாள்.
மன்னிக்க வேண்டும் பகவானே. என்னோடு சேர்ந்த எல்லாப் பூக்களும் மாலையாகித் தங்களைச் சேர்ந்துவிட்டனர். எனக்கு மட்டும், ஏன் இந்த அவல நிலை? என அந்தப் பூ முறையிட்டது.
சரீரம் துச்சம், உன் பக்தியே என் இஷ்டம். நீ எங்கிருந்தாலும் என்னவள்தான்.
க்ஷமியுங்கள் சுவாமி, ஆற்று நீரில் மிதந்து வந்த தங்கள் பக்தன் ஒருவனின் சவத்தின் நெற்றியில் வைணவச் சின்னங்கள் இருந்தன. அது கண்ட சக்கரவர்த்தி என்ற உயர்குடி அடியார், அந்தச் சடலத்திற்குத் தாமே ஈசக்கிரியை செய்தாரே!
ஓ, வைணவச் சின்னம் சடலத்தின் மீதிருந்தாலும் அதுவும் பூஜிக்கத்தக்கதே என அந்திமக் கிரியை செய்து, அதனால் ஊராரின் அவச்சொல்லுக்கு ஆளான அந்த வரலாறு உனக்கும் தெரியுமா? என்று பெருமாள் கேட்டார். ஆம் பகவானே, சாதிவெறியர்களுக்கு சக்கரவர்த்தி பொல்லாதவரானாலும், தங்களுக்கு அவர் நல்லவரே அல்லவா! ஆம் அவன் ஊருக்குப் பொல்லான், எமக்கு நல்லான்.
பகவானே, அடியாளையும் அப்படியே கருதும்படிப் பிரார்த்திக்கிறேன். நான் யார் காலிலோ மிதிபடுவது தங்கள் திருவருளுக்கு இழுக்கல்லவா? என்று கதறிய அந்தப் பூவின் கண்ணீர் பெருமாளைச் சங்கடப்படுத்தியது சற்றுப் பொறு புத்திரி பெருமாள். கோயிலில் ஆண்டாள்தாசர் மாலையைக் கட்டி முடித்து மூச்சுக்காற்றுக்கூட அதன் மீது படாதபடி ஏந்தி பக்தியுடன் பெருமாளுக்குச் சூட்டினார்.
பெருமாள் அதை உகந்து ஏற்பார் என்று நினைத்தால்.... ஆ திருமார்பிலிருந்து மாலை சரிந்துவிட்டதே! ஐயோ, கைங்கர்ய அபச்சாரம்! மாலை சரிந்த வேகத்தில் தரையில் சாய்ந்தார் தாசர். பெருமாள் அவரது அகத்துள் புகுந்தார்.
தாசரின் மனம் கண்ணீருடன் பகவானிடம் பேசியது. ஏன் இந்த அபச்சாரம் நடந்தது? பெருமாள், பூவைத் தவறவிட்ட உன் தவறினால்தான் மாலையும் தவறியது என்றார். தாசருக்குப் புரிந்துவிட்டது. அந்தப் பூ குறைபட்டுவிட்டதே. பகவானுக்கு உகந்ததா? தாசர் குறிக்கிட்டார்.
மகனே, குவலயம் வந்த யாரிடத்தில்தான் குறையில்லை? நீ என் பக்தன். உன்னிடத்தில் குறையே இல்லையா? நான் உன்னை ஒதுக்கினேனா? என்று கேட்டார் பெருமாள். தாசருக்கு மூச்சு மீண்டும் வந்தது. அவர் எழுந்தார், அறியமையிலிருந்துதான்!
பெருமாளை வணங்கி, க்ஷமாப் பிரார்த்தனை செய்தார். உடனே ஓடிச் சென்று, தரையில் கிடந்த பூவை எடுத்து நெஞ்சின் மீது ஏந்தினார். கங்கை நீரைத் தெளித்தார். நாராயண மந்திரம் ஜபித்தார். பெருமாளின் திருமார்பிலிருந்து சரிந்த மாலையில் இந்தப் பூவையும் சேர்த்தார். பிறகு அந்த மாலையோடு சம்பந்தப்பட்ட மூவரும் பிரசன்னமாயினர்.
No comments:
Post a Comment