Wednesday, May 18, 2011

அனுமன்

அனுமன் என்னும் வாயுபுத்திரன்



அனுமன்


அனுமன் என்னும் பெயருக்கே பல மூல காரணங்கள் உண்டு. முகவாய்க்கட்டை சற்றே நீண்டு சாதாரணமான மனிதர்களிலிருந்து மாறுபட்ட தோற்றம் உடையவன் என்பது ஒரு காரணம். 'ஹனு' என்றால் முகவாய்க்கட்டை என்பது பொருள். இந்திரனின் தாக்குதலால் அனுமனின் அழகிய முகவாய்க்கட்டை சேதமடைந்து அதன் தன்மை மாறியதினால் இப் பெயர் ஏற்பட்டது என்பதை இலக்கண விளக்கங்கள் தவறு என்கின்றன. அழகிய வாய்ப்புறம் கொண்டவனைத்தானே ஹனுமன் எனக் குறிப்பிட வேண்டும் என்பது அதன் வாதம்.



ஹனுமன் வானர இனத்தைச் சேர்ந்தவனல்ல - மனித இனத்தைச் சார்ந்தவன்தான். அவனுடைய இனத்திற்கும் ஆரியர்களுக்கும் அதிக வேற்றுமைகள் இல்லை என்கின்றனர் மனித இயல் ஆய்வாளர்கள்.



அஞ்சனையின் மகன் என்பதால் ஆஞ்சநேயன் எனவும், வாயு பகவானின் மகன் என்பதால் வாயு புத்திரன் எனவும், தக்க சமயத்தில் சஞ்சீவி மலையை ஏந்தி வந்து இளைய பெருமாளாகிய லக்குவனைக் காத்ததால் சஞ்சீவைய்யா, சஞ்சீவிராயன் எனவும் பல பெயர்களால் அனுமன் அழைக்கப்படுகிறான்.



நமக்குத் தேவையான ஆன்மபலம், மனோபலம், புத்திபலம், தேகபலம், பிராணபலம், சம்பத் பலம் என்னும் இந்த ஆறு பலங்களையும் நமக்குப் பெற்றுத் தர வல்லதுதான் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருள்.



'ஸ்ரீ ஆஞ்சநேயப் பிரபாவம்' என்னும் வார்த்தைகள் ஸ்ரீ ராமபிரானாலேயே சொல்லப்பட்ட ஒன்று. ஆம். இதை ஆயிரம் நாவு படைத்த ஆதிசேக்ஷனாலும் சொல்ல முடியாது என்பர்.



பஞ்ச பூதங்களையும் வசப்படுத்தியவர் ஆஞ்சநேயர் என்பர். புத்திர பாசத்தினால் வாயுவையும், ஆகாயத்தில் பறந்து பெருங்கடலைத் தாண்டியதால் ஆகாயம், சமுத்திரம் இரண்டையும், பூமியைப் பிறப்பிடமாகக் கொண்டதுடன் பூமாதேவியின் மடியில் அவதரித்த சீதாதேவியின் பூரண அருள் பெற்றதால் பூமியையும் வசப்படுத்தியவர் இவர். இராவணனின் ஆணைப்படி இவர் வாலில் வைக்கப்பட்ட நெருப்பினால் இலங்கையையே அழித்தவர். நெருப்பும் இவர் வசமானது. இதனால் 'அஞ்சிலே ஒன்று பெற்றான்' என்கிறார் கம்பர்.



பஞ்ச பூதங்களை மட்டுமன்றி பஞ்சேந்திரியங்களையும் வசப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. ஓயாமல் எப்போதும் சலனப்படும் தன்மை கொண்டது வானர இனம். இதில் தோன்றியவரான அனுமன் தன் இயல்பிலிருந்து மாறி இயற்கை இடையூறுகளை வென்றதுடன் ஓயாமல் பக்தி பூண்டதால் இவரை ஜிதேந்திரியன் என்றும் குறிப்பிடுவர்.



ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவோருக்குப் பக்தியுடன் புத்தியும், ஞானமும், வீரமும், வினயமும் சேர்ந்து வருவதுடன் காம குரோத எண்ணங்கள் அழியும்.



அனுமனிடம் சிக்கி அலைக்கழிக்கப்பட்டவர்களும் உண்டு. அதில் ஒருவர்தான் சனி பகவான். அவர் ஒருமுறை வாயு புத்திரனிடம் வந்து ''நான் உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் எந்தப் பாகத்தில் பிடிக்க வேண்டுமென்பதைச் சொல். மற்றவர்கள் என்றால் எச்சரிக்கை ஏதுமின்றிப் பிடித்து ஆட்டுவேன். நீ இராம தூதன் என்பதால்தான் உன்னிடம் முன் கூட்டியே தெரிவிக்கிறேன்'' என்றார்.



சனி பகவான் மாருதியைத் தேடி வந்தபோது அவர் சேது பந்தன வேலையில் ஈடுபட்டிருந்தார். ''கடமையைச் செய்ய வருபவர்களைத் தடுத்தல் தவறு. நீ என் தலை மீது அமர்ந்து கொள்ளலாம்'' என மாருதி கூற இ சனி பகவானும் அப்படியே செய்தார். ஆஞ்சநேயன் ஸ்ரீ இராம ஜபம் செய்தபடியே மலைகளையும், மரங்களையும் தலையின் மீது அடுக்கியபடியே அணை கட்டுமிடத்திற்கு வந்தார். அனுமன் ஏற்றிய சுமைகள் அவர் தலை மீதிருந்த சனி பகவானின் மீது ஏற்றப்பட்டதால், இதன் பாரம் தாங்க முடியாமல் தன்னை இறக்கிவிடும்படி அவர் வேண்ட - இரண்டரை மணி நேரத் துன்பத்துக்குப் பிறகுதான் அனுமன் அவரை இறக்கி விட்டார். இ அதுவரை பாரம் சுமக்கும் வேலையைத் தொடர்ந்தார். ''இனி உங்கள் பக்தர்களைக் கூட நான் தொட மாட்டேன்'' என அனுமன் இருந்த திசைக்கே ஒரு கும்பிடு போட்டுச் சென்றார் சனி பகவான். இதனால்தான் சனியினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆஞ்சநேயருக்குப் பூஜைகள் செய்து துளசிமாலை சாற்றுவர்.



நம் புராணங்களில் அனுமனுக்கு என்றுமே தனியிடம் உண்டு. சைவம், வைணவம் இரண்டிலுமே ஹனுமன் பற்றி பல கதைகள் உண்டு. அவரை சிவபெருமானின் அம்சம் என்பர்.



தசரதன் புத்திர பாக்கியம் வேண்டி யாகம் செய்து அதன் பிரசாதத்தைத் தன் மனைவிகளிடம் தந்த போது பட்டத்து ராணியான கெளசலையிடமிருந்த பிரசாதத்தில் சிறிதளவை ஒரு கழுகு கொத்திச் சென்று குழந்தை வரம் கேட்டுத் தவமிருந்த அஞ்சனையின் அருகில் இட - அது வாயு பகவானின் அருளால் அவளிடம் சேர்ந்தபோது சிவபெருமான் அவள் முன் தோன்றி அதை உண்ணும்படி பணித்தார். அஞ்சனை அதனை உண்டதன் பலனாக அனுமன் அவதரித்தார் என்று கூறப்படுகிறது.



வைணவ சம்பிரதாயத்தில் அனுமன் சிறிய திருவடியாகத் திருமாலின் சேவகனாகச் சித்திரிக்கப்படுகிறான்.

No comments:

Post a Comment