Sunday, May 29, 2011

பரசுராமரும், ராமரும்


பரசுராமரும், ராமரும் திருமாலின் இரு அவதாரங்கள். ராமரும், பரசுராமரும் தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற கொள்கை உடையவர்கள். இருவருமே ஆயுதத்தைக் கையில் தாங்கி காட்சிதருவர். பரசுராமர் கோடரியையும், ராமர் கோதண்டம் என்னும் வில்லையும் ஏந்தியிருப்பார்கள். இருவருமே தந்தையால் வாழ்வில் துன்பம் அடைந்தவர்கள். ராமரோ போர்த்தொழில் புரியும் க்ஷத்திரியவம்சத்தில் அவதரித்தவர்.
பரசுராமர் உயிர்களை நேசிக்கும் அந்தணர் குலத்தில் அவதரித்தவர்.
பரசுராமர், தன் தந்தையான ஜமதக்னி முனிவரை, கார்த்தவீரியன் என்னும் மன்னன் கொன்றதற்காக, நாடாளும் மன்னர்கள் வம்சத்தையே அடியோடு அழிப்பதாக சபதம் ஏற்றவர். ராமர் வேடுவர், அரக்கர், குரங்கு, அணில்,பறவை என்று உயிர்க்குலம் அனைத்திடமும் அன்பு காட்டியவர். மன்னர்களை அழிக்க சபதமேற்ற பரசுராமர் ராமரையும் கொல்ல முயன்றார். ஆனால், ராமபிரானிடம் தோற்றார். காரணம், பரசுராமர் பிறரைத் தண்டிப்பதில் மகிழ்ச்சி கொண்டார். ராமரோ மன்னிப்பதில் மகிழ்ச்சி கண்டார். ஒருவேளை, ராமர் பரசுராமரைக் கொன்றாலும், ராஜ தர்மப்படி குற்றமாகாது. அந்தணரான பரசுராமரைக் கொல்வதில் ராமருக்கு உடன்பாடில்லை. எனவே அவர் தொடுத்த அம்பு பரசுராமரின் உயிரை எடுக்காமல், தவசக்தியை மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பியது. கடவுளே மனிதனாய் பிறந்தாலும் கூட, மன்னிக்கும் குணம் வேண்டும் என்பதை அறிவுறுத்தவே இந்த அவதார நிகழ்வுகள் இறை சித்தத்தால் நடந்தன.

No comments:

Post a Comment