Wednesday, May 18, 2011

விநாயகரும் விளாம்பழமும்

விநாயகரும் விளாம்பழமும்



விநாயகச் சதுர்த்தி வரும் போது கூடவே விளாம்பழமும் வந்து விடும் கடைத் தெருவில்! எத்தனையோ பழ வகைகள் இருக்க, என்ன விசேஷம் விளாம்பழத்தில்? அது மனிதன் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.



விளாங்காயாக இருக்கும் போது, ஓடு பச்சையாக இருக்கும். உள்ளே இருக்கும் சதையும் ஓடோடு இறுக ஒட்டிக்கொண்டிருக்கும். அது போல் பக்குவமில்லாத நிலையில் மனிதன் உலக ஆசைகளோடு ஒட்டியிருப்பான். அவனைப் பிரித்தெடுப்பது கடினம்!



விளாங்காய், பழமாக மாறியபின், ஓடு மஞ்சள் கலந்த நிறமாக மாறி விடும். உள்ளே இருக்கும் சதையும் ஓட்டை விட்டுப் பிரிந்து தனியாக வந்து

விடும். அது மட்டுமல்ல. பழத்தின் நறுமணமும் கூடிவிடும்.



பக்குவப்பட்ட மனிதன் இறையனுபவத்தை நாட ஆரம்பித்தவுடன் உலக ஆசைகளை விட்டு விலக ஆரம்பித்து விடுவான். காயாய் இருந்த அவன், கனியாய்க் கனிந்து விடுவான். கனிந்த பழத்தை அதன் மணம் காட்டி கொடுத்து விடும். அது போல் ஞானியாகிவிட்ட அல்லது ஞான மார்க்கத்தின்பால் சென்று கொண்டிருப்பவரை அவருடைய ஞானம் காட்டிக் கொடுத்துவிடும்.



இரண்டுக்கும் விளம்பரம் தேவையில்லை. ஞான நிலையைப் பற்றிக் குறிப்பது விளாம்பழம். அதனை யாருக்கு அளித்தால் சிறப்பு? ஞானக் கொழுந்தாய் விளங்கும் விநாயகனுக்கு அளித்தால்தானே சிறப்பு?



விநாயகருக்கு உகந்த விநாயகச் சதுர்த்தி அன்று நாம் ஞானத்தை அடைய வேண்டி, ஞானத்தைக் குறிக்கும் விளாம்பழத்தை, ஞானக் கொழுந்தனுக்கு அளித்து அவன் அருள் பெற்றுக் கொள்வோம்!

No comments:

Post a Comment