Monday, June 27, 2011

ஆன்மிக கதைகள்-5 மீன் வயிற்றில் குழந்தை

விதர்ப்ப தேசத்தை பீஷ்மகன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு ருக்குமி என்னும் மகனும், ருக்மணி என்னும் மகளும் இருந்தனர். அழகில் சிறந்த ருக்மணியும், கிருஷ்ணரும் காதல் கொண்டனர். கிருஷ்ணர் தன் காதலை பீஷ்மகனிடம் தெரியப்படுத்தினார். ஆனால், ருக்மணியின் சகோதரன் ருக்குமி, இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தான். தன் தங்கையை, சிசுபாலன் என்பவனுக்கு மணம் முடித்து வைக்கும்படி தந்தையிடம் வற்புறுத்தி சம்மதமும் வாங்கி விட்டான்.
எல்லா நாட்டுக்கும் மணஓலை அனுப்பப்பட்டது. சிசுபாலனின் நண்பர்களான ஜராசந்தன், பவுண்டரகன் என்று பலரும் அழைப்பிதழை பெற்றனர். அவர்கள், திருமண வைபவத்தைக் காண விதர்ப்பதேசம் வந்தனர். கிருஷ்ணருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. கிருஷ்ணரும், பலராமன் மற்றும் யாதவர்கள் புடைசூழ விதர்ப்பதேசம் புறப்பட்டு வந்தார். திருமணம் நடக்கும் முன்பு, கிருஷ்ணர் மணப்பெண்ணான ருக்மணியை தூக்கிக் கொண்டு துவாரகைக்கு தேரில் கிளம்பினார். ருக்குமிக்கு தகவல் தெரிந்தது. அவன் கிருஷ்ணரைக் கொல்வேன் என்று சபதம் செய்து, அவரைத் துரத்தினான். ஓரிடத்தில் கிருஷ்ணரின் தேரை மறித்தான். இருவருக்கும் கடும் போர் நடந்தது. ருக்குமியை கிருஷ்ணர் வீழ்த்தினார். பின்னர், ருக்மணியோடு துவாரகை சென்றடைந்தார்.
ருக்மணி- கிருஷ்ணர் கல்யாணம் விமரிசையாக நடந்தது. சிறிது காலத்தில், மன்மதனின் அம்சத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள் ருக்மணி. அவனுக்கு பிரத்யும்னன் என்று பெயரிட்டனர்.
தன்னைக் கொல்வதற்காக துவாரகையில் பிறந்த ருக்மணியின் பிள்ளையைப் பற்றி கேள்விப்பட்டான் சம்பரன் என்னும் அசுரன். மாய வடிவில் யாரும் அறியாமல் துவாரகைக்குச் சென்றான். பிறந்து ஆறே நாளான சிசுவை தூக்கி வந்து கடலில் எறிந்துவிட்டு ஓடிவிட்டான்.
கடலில் கிடந்த பிரத்யும்னனை மீன் ஒன்று விழுங்கியது. கடலில் செம்படவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, குழந்தையை விழுங்கிய மீனும் வலையில் சிக்கியது. சம்பராசுரனின் அரண்மனைக்கு, மன்னனின் சாப்பாட்டுக்காக அந்த மீன்கள் கொண்டு செல்லப்பட்டன.
மாயாவதி என்ற சமையல்காரி அந்தமீன்களை சமையலுக்காக நறுக்கினாள். ஒரு மீனின் வயிறு அங்கும் இங்கும் அசையவே, அதை பக்குவமாக அறுத்தாள். அதற்குள் உயிரோடு இருந்தபிரத்யும்னனைக் கண்டு ஆச்சரியம் கொண்டாள். குழந்தை எப்படி மீனுக்குள் வந்தது என்று எண்ணியபோது, அவளுடைய சந்தேகத்தைத் தீர்க்க நாரதமகரிஷி அங்கு வந்தார்.
நாரதர் அவளிடம், ""மாயாவதி! கிருஷ்ணரின் குழந்தை பிரத்யும்னன் இவன். சம்பரனுக்கு யமனாக வந்திருக்கிறான். இவனை வளர்த்து வா,'' என்று கூறி மறைந்தார். மாயாவதியும் கண்ணும் கருத்துமாக பிரத்யும்னனை வளர்த்துவந்தாள். ஒருநாள் மாயாவதி பிரத்யும்னனிடம், ""பிரத்யும்னா! நீ கிருஷ்ணரின் பிள்ளை. உன் தாயான ருக்மணி துவாரகையில் இருக்கிறாள்,'' என்ற உண்மையை எடுத்துச் சொன்னாள். தன் பெற்றோரிடம் இருந்து தன்னைப் பிரித்த சம்பராசுரனுடன் போர் செய்து கொன்றான் பிரத்யும்னன். வெற்றியுடன் திரும்பிய பிரத்யும்னன், தன்னை வளர்த்த மாயாவதியை அழைத்துக் கொண்டு ஆகாயமார்க்கமாக துவாரகை கிளம்பினான். கிருஷ்ணரின் சாயலில் இருந்த அப்பிள்ளையைக் கண்டதும் யாதவர்கள் கிருஷ்ணர் என்றே எண்ணி மகிழ்ந்தனர். ருக்மணிக்கு அவனைக் கண்டதும் தாய்மை உணர்வு பொங்கியது. நாரதரும் கிருஷ்ணரை அழைத்துக் கொண்டு துவாரகை வந்து சேர்ந்தார். நீண்ட நாளாக காணாமல் போன தன் பிள்ளை திரும்பக் கிடைத்ததை எண்ணி ருக்மணி எல்லையில்லாமகிழ்ச்சி கொண்டாள்.

No comments:

Post a Comment