Saturday, June 11, 2011

இராமாவதாரத்தின் ரகசியம்

தசரதன் கேட்டது ஒரு பிள்ளை; கிடைத்ததோ நான்கு பிள்ளை ஏன்
 
60,000 ஆண்டு காலம் அயோத்தி மாமன்னனாக, நீதி, நெறி வழுவாமல் ஆட்சி செய்த தசரதனுக்கு பிள்ளைப் பேறு கிட்டவில்லை. நமக்குப்பின் இந்த அயோத்தியின் ஆட்சிப் பீடத்தில் அமர ஒரு பிள்ளை இல்லையே! தான் மேன்மை அடைய ஒரு மகன் இல்லையே என்ற கவலை தோன்றியது. தன் குல குருவான வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்டார் தசரதன்.
இலங்கையை ஆண்டு வந்த இராவணனின் கொடுமை தாளாமல் தேவர்கள் ஸ்ரீமன் நாராயணனிடம் முறையிட்டதை யும்; விரைவிலேயே அவர் மண்ணுலகில் தசரதனுக்கு மகனாக அவதாரம் செய்து இராவணனைச் சம்ஹாரம் செய்யப் போவதாகக் கூறியதையும் தன் ஞான திருஷ்டியால் அறிந்தார் வசிஷ்டர்.

உடனே, ""கலைக்கோட்டு மாமுனி என்னும் ரிஷ்ய சிருங்கரை வரவழைத்து, புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் மகன் பிறப்பான்'' என்று தசரதனிடம் கூறினார்.
அதைக் கேட்ட தசரதன் ரிஷ்ய சிருங்கரை வரவழைத்து யாகம் செய்தார். அதன் பலனாக தேவதூதன் ஒருவன் யாக குண்டத்தில் தோன்றி, ""இந்தப் பாயசத்தை உன் மனைவிக்குக் கொடு. சத்புத்திர பாக்கியம் கிடைக்கும்'' என்று ஒரு கலசத்தைக் கொடுத்துவிட்டு மறைந்தான்.

மனம் மகிழ்ந்த தசரதன் அந்தப் பாயசத்தில் ஒரு பகுதியை தன் பட்ட மகிஷியான கோசலைக்கும், இன்னொரு பகுதியை கைகேயிக்கும், மூன்றாவது பகுதியை சுமித்திரைக்கும் தந்தார். எஞ்சியிருந்த நான்காவது பகுதியையும் சுமித்திரைக்கே தந்துவிட்டார். அதன் பலனாக கோசலையிடத்து ராமனும், கைகேயியிடத்து பரதனும், சுமித்திரையிடத்து லட்சுமணன், சத்ருக்னனும் அவதரித்தனர்.

ஸ்ரீமன் நாராயணன் தேவர்களிடம், "இராவணன் மனிதர்கள், குரங்குகள் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது என்று வரம் பெற்றிருக்கிறான். மனிதர்களையும் வானரங்களையும் அவன் அற்ப உயிர்களாகக் கருதியதே இதற்குக் காரணம். எனவே நான் தசரத மைந்தனாக அவதரிக்கப் போகிறேன். ஆதிசேஷன் லட்சுமணனாகவும்; எனது சங்கு, சக்கர அம்சமாக பரதன், சத்ருக்னனும் அவதரிப்பர்' என்று ஏற்கெனவே கூறியிருந்தார்.

தசரதன் கேட்டதோ தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டுமென்றுதான். ஆனால் பிறந்ததோ நான்கு பிள்ளைகள். இது ஏன்?

தர்மங்கள் நான்கு. அதன் அம்சமாகப் பிறந்தவர்களே நான்கு பிள்ளைகள். ஒன்று சாமான்ய தர்மம். மனிதர்களாகப் பிறந்த வர்கள் அனுஷ்டிக்க வேண்டிய தர்மம். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்ற பித்ரு வாக்கியப் பரிபாலனம் செய்தவன் இராமன். சிறந்த மகனாக- சிறந்த கணவனாக- சிறந்த சகோதரனாக- சிறந்த அரசனாக- சிறந்த நண்பனாக தருமநெறி வழுவாமல் வாழ்ந்து காட்டிய வள்ளல் இராமன். நம்மைப்போல சாதாரண மனிதர்கள் பின்பற்றக்கூடிய தர்மத்தை அனுஷ்டித்தவர் புருஷோத்தமன்.

சாமான்ய தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுகினாலும், ஒரு காலகட்டத்தில் இறைவனிடம் சரணடைந்து உய்தி பெற வேண்டும். இதைச் செய்தான் லட்சுமணன். ராமனையே தெய்வமாகக் கருதி, அவனுக்குப் பணிவிடை செய்வதையே மேன்மை தரும் அறமாகப் பேணியவன் இளைய நம்பி. இது சேஷ தர்மம்.

இறைவனுக்குப் பக்கத்தில் இருந்து சேவை செய்தும் உய்தி பெறலாம்; தூரத்தில் இருந்தும் இறைவனுக்குச் சேவை செய்து மேன்மை அடையலாம். பரதன் அனுஷ்டித்த இந்த தர்மம், விசேஷ தர்மம் ஆகும்.

அயோத்தியை விட்டு நந்தி கிராமத்தில் வசித்து, இராமனின் பிரதிநிதியாக அவன் பாதுகைகளை வைத்து அரசாட்சி செய்தவன் பரதன்.
இறைவனுக்குச் சேவை செய்வதைவிட அவனுடைய அடியவர்க்குச் சேவை செய்வது அனைத்திலும் மேலானது. பகவத் ஆராதனையைவிட பாகவதோத்தமர்களுக்குச் சேவை செய்யும் இந்த நான்காவது தர்மத்தை அனுஷ்டித்து வாழ்ந்தவன் சத்ருக்னன். பரதனுக்குச் சேவை செய்வதையே தன் பெரும் பேறாகக் கருதினான் அவன்.
ஆக, இந்த நால்வகை தர்மங்களையும் கடைப்பிடித்து வாழ்ந்த உத்தம சகோதரர்கள் இராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன்.

இதில் சுமித்திரையின் தியாகம் மிகப் பெரியது. தனக்குப் பிறந்த இரு செல்வங் களையும், ஒருவனைப் பரமனுக்குச் சேவை செய்யவும்; இன்னொருவனை பரமனடியா ரான பரதனுக்குச் சேவை செய்யவும் அனுப்பினாள் அவள். இப்படி இருவரையும் அர்ப்பணித்த உத்தமப் பெண்மணி சுமித்திரை.

கண் துஞ்சாமல் கருமமே கண்ணாக அண்ணனுக்குப் பணிவிடை செய்தான் லட்சுமணன் என்பதை "இமைப்பிலன் நயனம்' என்று குகன் வாயிலாக விளக்குகிறார் கம்பர்.

"சென்றால் குடையாம்
இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம்
நீள் கடலுள் என்றும்
புனையாம் மணிவிளக்காய்
பூம்பட்டம் புல்கும்
அணையாய் திருமாற்கு அரவு (ஆதிசேஷன்)'

என்று, லட்சுமணனின் இந்த அரிய சேவையை ஆழ்வார் போற்றுகிறார்.

இப்படி இராமனாக அவதரித்த பரந்தாமன் நான்கு உயரிய சத்தியநெறிகளை நிலைநாட்டினார். இதுதான் விசிஷ்டாத்வை தாந்தமான இராமாவதாரத்தின் ரகசியம்.

No comments:

Post a Comment