என் கனவில் அடிக்கடி பசு வருகிறது; இது நல்ல சகுனமா?
ஆன்மிக சந்தேகங்களும் அர்த்தமுள்ள பதில்களும்
ஆன்மிக சந்தேகங்களும் அர்த்தமுள்ள பதில்களும்
நான் தனியார் துறையில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளேன். நான் சிவ பஞ்சாக்ஷர உபதேசம் பெற்றுள்ளேன். தொடர்ந்து கணபதி மந்திரமும் ஜபித்து வருகிறேன். எந்த ஜபமாலையால் ஜபிப்பது விசேஷம்? மான்தோல் அல்லது புலித்தோலில் அமர்ந்து ஜபிப்பது நல்லது என்கிறார்களே? சாதாரண தரையில் அமர்ந்து ஜபிக்கக்கூடாதா? இது குறித்து விளக்கவும்.
கை விரலில் உள்ள ரேகையைக் கொண்டு எண்ணி ஜபம் செய்யும் வழக்கம் உண்டு. அதற்குப் பதிலாக தர்ப்பை முடி கொண்டும், ஸ்படிக மணியாலும், சொர்ண மணியாலும் (காஞ்சனமாலை), நவரத்தின மாலையாலும் ஜபம் செய்வது ஒன்றைவிட மற்றொன்று நூறு மடங்கு பலன் தரும் என்பார்கள். சிவ நாமங்களை ருத்ராக்ஷ மணியாலும், விஷ்ணு நாமங்களை துளசிமணி மாலையாலும் ஜபிப்பது அநேக கோடி உயர்ந்த பலன்களைத் தரும்.
தரையில் அமர்ந்து ஜபம் செய்தால் ஜபத்தின் பலனை இழக்க நேரும். மாமரத்தில் செய்த பலகை அல்லது தேக்கு மரத்தில் செய்த பலகை போன்றவற்றில் உட்கார்ந்து ஜபிக்கலாம். மான்தோல், புலித்தோல் போன்றவற்றில் எவ்வித துளையும் இருக்கக்கூடாது என்பார்கள். அதாவது அது இயற்கையாக இறந்ததாக இருக்க வேண்டும். தற்பொழுது இத்தகைய தோல்கள் வைத்திருப்பது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளதால் அவற்றைப் பற்றி யோசிக்காதீர்கள். சாதாரண தர்ப்பையால் செய்த தர்ப்பாசனத்தில் அமர்ந்து ஜபிப்பது ஆயிரம் மடங்கு உயர்ந்த பலனைத் தரும்.
வீட்டின் பூஜையறையில் ஜபிப்பது பொதுவாக நல்லது என்றாலும், பசுக்கள் இருக்கும் கொட்டடியில் ஜபிப்பது ஆயிரம் மடங்கு உயர்ந்த பலனைத் தரும். வனம் சார்ந்த பகுதியில் ஜபிப்பது அதைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்த பலனைத் தரும். நதிக்கரையில் ஜபிப்பது அதைவிட பத்தாயிரம் மடங்கு உயர்ந்த பலனைத் தரும். ஆலயங்களில் ஜபம் செய்வது லட்சம் மடங்கு உயர்ந்த பலனைத் தரும். குருவின் சந்நிதானத்தில் ஜபம் செய்தால் நிகரில்லாத பலன்களை அடைய முடியும் என்பார்கள்.
ஏகாதசி விரதம் இருப்பதன் சிறப்பையும், ஏகாதசி விரதங்களின் பலன்களைப் பற்றியும் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஏகாதசி திதியில் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு விரதத்திற்கும் ஒவ்வொரு விதமான பெயர்கள் உண்டு. மார்கழி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு உற்பத்தி ஏகாதசி என்று பெயர்.
முரன் என்ற அசுரனை அழிக்க பகவான் அவனுடன் போர் புரிந்து கொண்டிருந்த வேளையில், இடையில் பத்ரிகாசிரமத்தில் யோக நித்திரையில் இருக்கும்போது அவர் உடலிலிருந்து ஒரு மோகினி வடிவம் வெளிவந்து முரனை அழித்ததாகக் கூறுவார்கள். அந்த மோகினியை ஏகாதசி என்று அழைத்ததாகவும் கூறுவார்கள்.
நம்முள் இருக்கும் தீய சக்திகள் அழியவும், தெய்வீக சக்திகள் மேலோங்கவும் ஏகாதசி விரதம் பலன் தரக்கூடியதாக இருக்கும். மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியை மோட்ச ஏகாதசி என்பார்கள். இந்தக் காலகட்டங்களில்தான் சொர்க்க வாசல் திறப்பது என்பது எல்லா பெருமாள் கோவில்களிலும் நிகழும்.
தை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு சபலா ஏகாதசி என்றும்; வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு புத்ரதா ஏகாதசி என்றும் பெயர்.
மாசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஷட்திலா ஏகாதசி என்றும்; வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஜெய ஏகாதசி என்றும் பெயர்.
பங்குனி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்றும்; வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஆமலதி ஏகாதசி என்றும் பெயர். அன்று நெல்லி மரத்தைச் சுற்றி வருவது நன்மை தரும் என்பார்கள். நெல்லி மரம் நடுவதும் பெரும் புண்ணியத்தை உண்டு செய்யும்.
சித்திரை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு பாபமோசனிகா ஏகாதசி என்றும்; வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு காமதா ஏகாதசி என்றும் பெயர்.
வைகாசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு வரூதிநி ஏகாதசி என்றும்; வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்றும் பெயர்.
ஆனி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு அபரா ஏகாதசி என்றும்; வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி என்றும் பெயர்.
ஆடி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்றும்; வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு சயனீ ஏகாதசி என்றும் பெயர்.
ஆவணி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு காமிகா ஏகாதசி என்றும்; வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு புத்ரஜா ஏகாதசி என்றும் பெயர்.
புரட்டாசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு அஜா ஏகாதசி என்றும்; வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு பத்மநாபா ஏகாதசி என்றும் பெயர்.
ஐப்பசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு இந்திரா ஏகாதசி என்றும்; வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு பாபாங்குசா ஏகாதசி என்றும் பெயர்.
கார்த்திகை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு ரமா ஏகாதசி என்றும்; வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ப்ரமோதினீ ஏகாதசி என்றும் பெயர்.
24-க்குமேல் அதிகப்படியாக வரும் ஏகாதசியை கமலா ஏகாதசி என்று கூறுவார்கள்.
நான் நீண்ட நாட்களாக மகாலட்சுமியை பூஜை செய்து வருகிறேன். குறிப்பாக, பௌர்ணமி காலங்களில் விசேஷமாகப் பூஜிக்கிறேன். என் கனவில் வெள்ளைப் பசு அடிக்கடி வருகிறது. அது நல்லதா?
பசு, மகாலட்சுமியின் அம்சம். கனவில் பசுவைக் காண்பது நல்லது. மேலும், கோவில், கோட்டை, மரங்கள், எருது, யானை போன்றவற்றைக் கனவில் காண்பதும் நன்று. மலை உச்சியில் ஏறி நிற்பதுபோலவும், நவரத்தினங்கள் அணிவதுபோலவும், வாசனைப் பூக்களைக் காண்பதும், தேள், பாம்பு கடிப்பது போலும், கடலைத் தாண்டுவதுபோலும் கனவு காண்பதும் நல்லதே.
கனவு கண்டு மனம் சஞ்சலமடைந்தால் சுந்தர காண்டத்தில் வரும் திரிசடை சொப்பனம் பகுதியைப் படிப்பது நன்மை தரும்.
நான் அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய வேலையில் உள்ளேன். சில நேரங்களில் சகுனத்தடை ஏற்படுவதாக உணர்கிறேன். தவிர்க்க முடியாத காரணத்தால் சகுனத்தடையை மீறி பயணம் செல்ல வேண்டி நேர்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்கவும்.
நீங்கள் முக்கிய வேலையாக வெளியே செல்லும்போது திருமணமான பெண், வாசனைப் பூ, பழங்கள், குங்குமம், மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்கள், பால் குடம், தயிர்குடம், மனதை மகிழ்விக்கும் ஓசைகள், தீபத்துடன் கூடிய விளக்கு, யானை, குதிரை, பசு போன்றவை எதிர்ப்படுவது நல்ல சகுனமாகும். மேலும், வெற்றி என்ற சத்தம், மந்திர ஒலி, கழுதை கத்தும் சத்தம் போன்றவை நல்ல சகுனமாகும்.
பயண நிமித்தமாக நீங்கள் கிளம்பும்போது தடை வார்த்தைகளைக் கேட்டாலும், யாராவது சாப்பிடு சாப்பிடு என்றாலும், பற்றி எரியக்கூடிய நெருப்பைக் கண்டாலும், எண்ணெய்க் குடம் எதிரே வந்தாலும், கந்தல் ஆடை உடுத்தியவர், உடல் முழுக்க எண்ணெய் பூசியவர் போன்றவர்கள் எதிரே வந்தாலும், கடுமையான இடியோசை கேட்டாலும் அசுப சகுனமாகும்.
இவ்வாறு நிகழ்ந்தால் இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்து, விநாயகரையும் அனுமனையும் வணங்கிவிட்டுச் செல்லுங்கள்.
No comments:
Post a Comment