Saturday, February 4, 2012

கிரிவலக்கிழமையும் புண்ணியமும் /திருவண்ணாமலைகார்த்திகை தீப

கிரிவலக்கிழமையும் புண்ணியமும் 

கார்த்திகையன்று கூட்டம் அதிகமாக இருக்குமே! பவுர்ணமிகளில் சென்றாலும் அண்ணாமலையாரைத் தரிசிக்கவும், கிரிவலம் வரவும் சிரமமாக இருக்கிறதே என்பவர்களுக்கு கவலையே இல்லை. அண்ணாமலை செல்ல எல்லா நாளுமே நல்ல நாள் தான். கிரிவலம் வரும் ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு பலன் உண்டு.
ஞாயிறு ......................... பிறப்பற்ற நிலை, நோய் நீங்குதல்
திங்கள் .......................... தைரியம், செயல்திறன்
செவ்வாய் ...................... பணவரவு, பிறப்பற்ற நிலை
புதன் ............................. கல்வி, கலைகளில் அபிவிருத்தி
வியாழன் ....................... ஆன்மிக ஞானம்
வெள்ளி ......................... பிறப்பற்ற நிலை



திருவண்ணாமலை கிரிவலத்தை ராஜகோபுரத்தில் துவக்க வேண்டும். இந்த மலையின் உயரம் 2268 அடி. சுற்றளவு 14 கிலோ மீட்டர். நடந்து செல்பவர்கள் 4 முதல் 5 மணிக்குள் வலம் வந்துவிடலாம். உடல்நிலை முடியாதவர்கள் ஆட்டோ, கார்களில் ஒன்றரை மணி நேரத்தில் சுற்றிவர முடியும். இவர்கள் பவுர்ணமி அன்று கிரிவலம் வருவதை தவிர்ப்பது நல்லது. சாதாரண நாட்களில் சுற்றிவந்தாலே முழு பயனும் கிடைக்கும். கிரிவலம் துவங்குவோர் பவுர்ணமி அன்று இரவு 9 மணிக்கு மேல் நிலவொளியில் வலம் வருவது உடலுக்கு நல்லது. அன்று சந்திரபகவான் 16 கலைகளுடன் பரிபூரணமாக பிரகாசிப்பார். அந்த கிரணங்களை உடலில் ஏற்றால் மனோசக்தி அதிகரிக்கும். 


ஜலால்' என்றால் என்ன

பார்வதிதேவியை சிவபெருமான், தன் இடப்பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனதைக் குறிக்கும் வகையில், கார்த்திகையன்று மாலையில் திருவண்ணாமலை கோயிலுக்குள் அர்த்தநாரீஸ்வரர் புறப்பாடு நடக்கும். இந்த ஒருநாள் மட்டுமே இவருடைய தரிசனம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கொடிமரத்தின் அருகே பரணிதீபங்கள் ஒன்று சேர்ந்ததும், தீ பந்தத்தை அடையாளமாகக் காட்டுவர். அதற்கு "ஜலால்' என்று பெயர். உடனே, மலையில் கார்த்திகைதீபம் ஏற்றப்படும். மலைதீபத்தை ஏற்றும் உரிமை பர்வதராஜ குலமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்கும் தொழிலைக் கொண்ட இவர்கள் தங்கள் குலதெய்வமாகிய பார்வதி தேவிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் இவ்வழிபாட்டைச் செய்கின்றனர். இவர்கள், காலையில் கோயில் நிர்வாகத்தினரிடம் தீபம் ஏற்றும் மடக்கு, நெய், திரி ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு மலையேறுவர். முற்காலத்தில் வெண்கலப்பாத்திரத்தில் கார்த்திகைதீபம் ஏற்றப்பட்டு வந்தது. 1991ல் இரும்புக் கொப்பரையாக மாற்றப்பட்டது. 92 கிலோ செம்பும், 110 கிலோ இரும்பும் கலந்த கொப்பரையில், மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டிருக்கும். சுற்றியுள்ள ஊர் மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே தீபத்தை வழிபடுவர்.

தவம் செய்த உமையவள் 
ஒருமுறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள். அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது. உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது. விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார். தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். பவுர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது. இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.


21 தலைமுறைக்கு புண்ணியம்
திருவண்ணாமலை தீபத்தைப் பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறது அருணாசல புராணம். இந்த புராணத்தின் 159வது பாடலின்படி, திருக்கார்த்திகை தீபம் தரிசிப்பவர்களுக்கு உணவுத்தட்டுப்பாடு வராது. பார்த்தவர்களுக்கு மட்டுமின்றி அதைப்பற்றி சிந்தித்தவர்களுக்கும் கூட இடையூறு நீங்கி விடும். இவர்களது 21 தலைமுறை பிறவா வரம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் போது, கார்த்திகை தீபத்தைக் காணாமல் இருக்கலாமா! கார்த்திகை வெண்பா என்ற பாடலின்படி, அண்ணாமலையார் தீப தரிசனத்தால்புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு அறிவார்ந்த புத்திரர்கள் பிறப்பர். பிறப்பற்ற நிலை கிடைக்கும்.



திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் முறை
திருக்கார்த்திகையன்று காலையில் ஏற்றப்படுவது பரணிதீபம்.இத்தீபத்தை அண்ணாமலையார் கருவறையில் ஏற்றுவர்.
பரம்பொருள் ஒன்று என்பதை காட்டுவதற்காக ஒரு பெரிய கற்பூரக் குவியலில் ஜோதி ஏற்றி தீபாராதனை செய்வர். அதிலிருந்து ஒரு மடக்கில் உள்ள நெய்த்திரியில் விளக்கு ஏற்றப்படும். அந்த தீபத்தை நந்திதேவரின் முன் காட்டி ஐந்து மடக்குகளில் நெய் விளக்கேற்றுவர். விநாயகர், முருகன், சிவன், அம்பிகை, சண்டிகேஸ்வரர் என்னும் பஞ்சமூர்த்திகளையும் இந்த ஐந்து தீபங்கள் குறிக்கும். முதலில் ஏற்றப்பட்ட நெய்தீபத்தை உண்ணாமுலை அம்மன் சந்நிதிக்கு கொண்டு செல்வர். அங்கே ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றுவர். இது தேவியின் பஞ்ச சக்திகளைக் குறிக்கும். அதன்பின் எல்லா சந்நிதிகளிலும் தீபம் ஏற்றப்படும். பரணி நட்சத்திர வேளையில் ஏற்றுவதால் இதை "பரணிதீபம்' என்பர். இந்த தீபங்கள் அனைத்தும் மாலையில் ஒன்று சேர்க்கப்படும். உலகம் எல்லாம் பரம்பொருளின் மாறுபட்டகோலங்களே. அவை அனைத்தும் மீண்டும் பரம்பொருளில் ஐக்கியமாகிவிடும் என்பதை உணர்த்தும் விதத்தில் இதைச் செய்வர். மாலையில் பின்னர் பஞ்சமூர்த்திகளும், அர்த்தநாரீஸ்வரரும் கோயிலுக்குள் எழுந்தருள்வர். இவர்களுக்கு தீபாராதனை செய்யும் போது மலையில் தீபம் ஏற்றப்படும்.




No comments:

Post a Comment