பிதுர்களுக்குத் திதி கொடுப்பதை ஏதோ செய்யக்கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாள் என சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்தில் தான், கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்கச் சொல்லியுள்ளனர். முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்சம் உகந்தவை. கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இந்நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பது நல்லது. திருமணத்தடை, வேலையின்மை, நோய்நொடி போன்ற கவலைகள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும்.
எங்கு நீராடலாம்: சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாள் அமாவாசை, இருவரும் உலகின் ஆன்மாக்கள், கண்ணுக்குத் தெரியும் கடவுளர்கள். தை அமாவாசையன்று பித்ருக்கள் பிரசன்னமாவார்கள் அன்று அவர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் அவர்களது பரிபூரண ஆசி கிட்டுவதோடு உயர்ந்த பலனும் பெறலாம். இதை கருடபுராணமும் தெரிவிக்கிறது. அமாவாசையன்று ஈர்ப்பு விசையால் கடல் நீர் மேலும் கீழும் புரளும். கடலடியில் உள்ள சங்கு, சிப்பி, வாயுக்கள் மேலே வரும் அப்போது நீரில் கரைந்துள்ள சக்திகள் உடலில் ஊடுருவி ஆரோக்யம் உட்பட அநேக பலன் ஏற்படும். ராமபிரான் தேவிபட்டின கடற்கரையில் மணலைப் பிடித்தபோது அது இறுகி நவகிரகங்கள் ஆயின என்பர். இங்கு தை அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி புண்ணியம் பெறுவர். அதுதவிர ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி கடலிலும்; குற்றாலம், பாபநாசம், பாணதீர்த்தம் அருவிகளிலும்; காவேரி, வைகை, தாமிரபரணி நதிகளிலும் நீராடுவது அதிக பலன் தரும்.
No comments:
Post a Comment