மாசிமகம் என்றதும் நினைவுக்கு வரும் கும்பகோணத்தில் புனிதமான மகாமகக்குளம் உள்ளது. குளத்தைச் சுற்றி 16 மண்டபங்கள் உள்ளன. அதில் பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தாளேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திஹேஸ்வரர், பைரவேஸ்வரர், அகத்தீஸ்வரர், வியாசேஸ்வரர், உமைபாகேஸ்வரர், நைருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதரேஸ்வரர், முக்த தீர்த்தேஸ்வரர், ÷க்ஷத்ரபாலேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிவன் கோயில்களுக்கு தலைமையாக கும்பேஸ்வரர் கோயில் உள்ளது. 15 ஏக்கர் பரப்புள்ள இக்குளத்தை வெட்டியவர் அச்சுதப்ப நாயக்க மன்னரின் அமைச்சர் கோவிந்த தீட்சிதர். இந்நகரில் ஏழு குளங்கள், மூன்று கிணறுகள், நான்கு காவிரித் தீர்த்தங்கள் உட்பட 14 தீர்த்தங்கள் உள்ளன.
மகாமக குளத்தில் நீராடும் மாதங்கள்
ஒரு சமயம், உலகம் அழியும் நேரம் வந்தது. சிவனின் அறிவுரைப்படி, பிரம்மா, அமுதத்தை மண்ணில் பிசைந்து குடம் செய்தார். அதில் உலக உற்பத்திக்கான பீஜ(மூலம்) தொகுப்பை பத்திரப்படுத்தி மேருமலையில் வைத்தார். பிரளய வெள்ளத்தில் மிதந்தகுடம் தென்திசை நோக்கி வந்து கரை சேர்ந்தது. சிவன் வேடனைப் போல் வந்து, அக்குடத்தை அம்பால் உடைத்தார். அதில் இருந்த அமுதம் பூமியில் சிந்தியது. அந்த இடமே மகாமகக்குளமாக விளங்குகிறது. இந்நிகழ்ச்சி ஒரு மாசிமக நாளில் நிகழ்ந்தது. எல்லா புனித நதிகளும் குளத்தை வந்தடைந்தன. சிவபெருமான் பார்வதியுடன் நந்திவாகனத்தில் காட்சியளித்தார். பிரம்மா, அஷ்டதிக் பாலகர்கள், சப்தமாதர், இந்திராதி தேவர்கள் அனைவரும் குளத்தில் நீராடி மகிழ்ந்தனர். இக்குளத்தில் மாசி, சித்திரை, கார்த்திகை மாதங்களில் நீராடினால் புண்ணியம் பெருகும் என்று கும்பகோணம் தலவரலாறு கூறுகிறது.
வசதியிருந்தால் தங்கம் தானம் செய்யலாம்
கும்பகோணம் மகாமகக்குளத்தின் கிழக்கு, மேற்கு கரைகள் நீள்சதுரமாகவும், வடக்கு,தெற்கு கரைகள் சற்று உள் வளைந்தும் இருக்கும். உயரத்தில் இருந்து பார்த்தால் குடம் போல காட்சியளிக்கும். அமுதகுடத்தை நினைவூடடும் விதத்தில் இந்த அமைப்பு காணப்படுகிறது. மாசிமகத்தன்று, இங்கு புனித நீராடுவதுடன், தானமும் அளிக்க வேண்டும். அச்சுதப்ப நாயக்கரின் மந்திரியான கோவிந்த தீட்சிதர், தன் எடைக்கு எடை தங்கத்தை அந்தணர்களுக்கு வழங்கிய சரித்திரம் உண்டு. குளக்கரையில் உள்ள பிரம்ம தீர்த்தேஸ்வரர் துலாபார மண்டபத்தில் தீட்சிதர் தானம் அளித்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பொன்னிறமுடைய குரு, பொன்நிறக் கதிர்களை வீசும் சூரியன் ஆகிய இருகிரகங்களிடம் இருந்தும் காந்த ஆற்றலைப் பெற, பொன் தானம் செய்யும் வழக்கம் இருக்கிறது. வசதி இருப்பவர்கள் செய்யலாமே
No comments:
Post a Comment