Monday, October 1, 2012
ஆசை வைக்காதே! அவதிப் படாதே
ராஜா கிருஷ்ண தேவராயர் மிகுந்த மனக் கவலையுடன் அரியணையில் அமர்ந்திருந்தார். அவரது வாட்டத்தைக் கண்ட சபையினர் கவலையுற்றனர். தெனாலி ராமன் மட்டும் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவரருகில் சென்று, ' அரசே! ஏன் வாட்டமாயிருக்கிறீர்கள்? உங்களது மனக் கவலைக்கு என்னால் தீர்வு காண இயலுமா?' எனப் பணிவாகக் கேட்டான்.
'என் தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதவனாக ஆகிவிட்டேன் நான். சாகுந்தறுவாயில், அவருக்கு மிகவும் இஷ்டமான மாம்பழம் சாப்பிட வேண்டும் எனச் சொன்னார். என்ன விலை கொடுத்தாவது வாங்கலாம் என்றால்,அது மாம்பழம் விளையும் காலம் அல்ல என்பதால், என்னால் அவற்றை அவருக்குத் தர இயலவில்லை. இன்று அவரது திதி. இன்றாவது என்னால் அதை நிறைவேற்ற முடியுமா எனக் கவலையாக இருக்கிறது' என ராஜா சோகமாகக் கூறினார்.
இதற்கு என்ன வழி எனத் தெனாலி ராமன் யோசிக்கத் தொடங்கினான். அப்போது அருகிலிருந்த அரண்மனைப் புரோஹிதர், 'பணம் சம்பாதிக்க இது ஒரு நல்ல வழி' என எண்ணி, அரசரின் முன்னே வந்து, 'மஹாராஜா! உங்களது கவலையை நான் இப்போதே தீர்த்து வைக்கிறேன். தங்கத்தாலான மாங்கனிகளை ஒரு சில அந்தணர்களுக்குத் தானமாகத் தந்தால், அந்த ஆத்மா சாந்தி அடையும்' என விண்ணப்பித்தார்.
இதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியுடன் உடனே தங்க மாங்கனிகளைச் செய்யச்சொல்லி உத்தரவிட்டார். அவை தயாரானதும், விமரிசையாக திதி கொடுத்து, தலைமைப் புரோஹிதர் உட்பட சில அந்தணர்களுக்கு ஆளுக்கொன்றாக தானமாகக் கொடுத்தார். நிலைமை இப்படியாக ஆனதில் தெனாலி ராமனுக்குத் துளிக்கூட இஷ்டமில்லை. பேராசை பிடித்த புரோஹிதருக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமென முடிவு செய்தான்.
அந்த நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், தானும் தனது அன்னையின் இறுதி விருப்பமாக தானம் அளிக்க விரும்புவதாகவும், இந்த புரோஹிதர்களே அதற்கும் வந்து கௌரவிக்க வேண்டும் எனவும் அரசரிடம் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டியது போலவே செய்து தரும்படி தலைமைப் புரோஹிதருக்கும், மற்றவர்களுக்கும் ராஜா ஆணையிட்டார்.
அவர்களை அழைத்துக்கொண்டு தன் இல்லம் சென்ற தெனாலி ராமன், அவர்களை நடுக்கூடத்தில் பலகைகளில் அமரச் செய்தான். சற்று நேரம் ஆயிற்று. உணவு வரும் அறிகுறியே தெரியவில்லை. வந்திருந்த புரோஹிதர்கள் பொறுமையிழக்கத் தொடங்கும் சமயம், தெனாலி ராமன் ஒரு பெரிய ஹோம குண்டத்தை எடுத்து வந்து அவர்கள் முன் வைத்தான். அந்த நெருப்பில் ஒரு இரும்புக் கோலை நன்றாகப் பழுக்கக் காய்ச்சத் தொடங்கினான். அதைக் கண்டு வியப்படைந்த தலைமைப் புரோஹிதர், 'தெனாலி ராமா! என்ன செய்கிறாய்?' என வினவினார்.
'முடக்கு வாதத்தால் அவதிப்பட்ட என் தாய், தான் சாகும்போது, பழுக்கக் காய்ச்சின இரும்புக் கோலால் தனக்கு வலி கண்ட இடத்தில் சூடு வைக்கச் சொன்னாள். ஆனால், அப்படிச் செய்வதற்குள், அவரது உயிர் பறந்து விட்டது. என்ன செய்வது எனத் தெரியாமல் இதுவரை திகைத்திருந்தேன். இன்று நீங்கள் மன்னருக்குச் சொன்ன யோசனையைக் கேட்டதும், என் தாயின் ஆத்மாவுக்கும் ஒரு விடிவு பிறந்து விட்டது எனச் சந்தோஷம் அடைந்தேன். இன்னும் கொஞ்சம் பழுக்கட்டும். இதனால், உங்களனைவருக்கும் ஒரு சூடு வைத்தால், என் அன்னையின் ஆத்மா சாந்தி அடையும் அல்லவா?' எனப் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு தெனாலி ராமன் சொன்னான்.
அதைக் கேட்டதும், அனைத்து அந்தணர்களும் பதறிப்போய், கருணை காட்டுமறு தெனாலி ராமனை வேண்டினர். தலைமைப் புரோஹிதர், தெனாலி ராமனைப் பார்த்து, 'இதென்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது? எங்கள் மேல் சூடு வைத்தால், அதனால் எப்படி உன் அம்மாவின் ஆன்மா சந்தி அடையும்?' எனக் கோபமாகச் சொன்னார். 'அதெப்படி தொடர்பில்லாமல் போகும்? ராஜாவின் அன்னையின் ஆன்மா, உங்களுக்குக் கிடைத்த தங்க மாங்கனிகளால் சாந்தி அடையும்போது, இது மட்டும் ஏன் ஆகாது?' என மடக்கினான் தெனாலி ராமன். தெனாலி ராமன் புகட்டிய பாடத்தின் பொருள் புரோஹிதருக்கு நன்கு விளங்கியது. தங்கள் மீது இரக்கம் காட்டுமாறு வேண்டினார். தானமாகப் பெற்ற எல்லாத் தங்க மாங்கனிகளையும் திரும்பக் கொடுத்தால், அவர்களை விடுவிப்பதாக தெனாலி ராமன் கண்டிப்பாகச் சொல்லிவிட்டான். வேறு வழியின்றி, அவர்களும் அப்படியே செய்துவிட்டு, தப்பித்தோம், பிழைத்தோமென ஓடினர்.
சில தினங்கள் கழித்து மன்னரிடம் நடந்ததனைத்தையும் தெனாலி ராமன் விவரிக்க, தனது கவலைகள் அனைத்தையும் மறந்து, ராஜா பெரிதாகச் சிரிக்கத் தொடங்கினார். தெனாலி ராமனைப் பார்த்து, ' ஆனாலும் நீ அந்த எளிய அந்தணர்களை இப்படி மிரட்டி இருக்கக்கூடாது, தெனாலி ராமா. மற்றவர் கொடுக்கும் தானத்தில்தானே இவர்கள் வாழ்க்கை ஓடுகிறது' எனச் செல்லமாகக் கடிந்து கொள்ளவும் செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment