Friday, January 18, 2013

பொங்கல் வழிபாடு பொங்கல் அன்று கொடுக்கும் தான வகைகள்

தை மகளே வருக! தரணி சிறக்க அருள்க என அனைத்து தமிழ் மக்களும் வேண்டி விரும்பிக் கொண்டாடும் பண்டிகை " பொங்கல்''. சூரியனை "பூமி'' சுற்றி வருவதால் ஏற்படும் பருவ கால மாற்றத்திற்கு மிகவும் முக்கியமானதாக போற்றப்படுவது இரு அயணங்கள் ஆகும். அதில் தட்சணாயனம் பூமியை குளிரச் செய்து மண்ணைப் பண்படுத்தும் காலம். உத்ராயணம் மண்ணின் மகத்துவத்தால் உற்சாகம் காணும் காலமாக உள்ளது.

தட்சணாயணத்தில் சூரியன் தெற்கு சார்ந்து தெரிவதும் உத்ராயண காலத்தில் சூரியன் வடக்கு, சார்ந்து தெரிவதை நாம் காண்போம் என்றாலும் தட்சணாயன முதல் நாளும் உத்ராயண முதல் நாளும் தான் சூரியன் நேர் கிழக்கில் காட்சி தருவார்.


அதாவது ஆடி முதல் தேதியும் தை முதல் தேதியிலும் மட்டுமே இந்த அதிசயத்தை நாம் ரசிக்க முடியும். தட்சணாயனம் உடல் வாட்டம், மனச் சோர்வை தந்து வரும். ஆனால் உத்ராயண காலமான தை முதல் ஆனி வரை உள்ள காலங்கள் ஆரோக்யம், உற்சாகம், குதூகலம், பொருளாதார மேன்மை, மங்கள காரியங்களை அரங்கேற்றுதல், உடல் பொழிவு, சோர்வற்ற தன்மையை உண்டாக்கும் காலமாக அமைகிறது.


அதனால் தான் தை பிறந்தால் நல்ல வழி பிறக்கும் என்றார்கள் நம் முன்னோர்கள். மேலும் தை மாதத்தில் நமக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அதிகமாக கிடைத்து அதன் மூலம் மானுட சமூகம் பசிப்பினி இன்றி வாழ ஆசீர்வதிக்கப்பட்ட மாதமே தை என்கிறார் வாஸ்து பேராசிரியர் யோக ஸ்ரீ மணிபாரதி.


சூரியனை வணங்குங்கள்.........


சிவனின் அம்சமாக சூரியன் கருதப்படுகிறது சிவன்தான் பரம் பொருள் என்பது திருமூலர் திருமந்திர வாக்கு!

எனவே பரம் பொருளே சூரியனாகி பிரகாசித்துக் கொண் டிருக்கிறது! மனிதக் கண்களால் நேரடியாக காணக்கூடிய கண்கண்ட தெய்வம் தான் சூரியன்!! ஆற்றல் களஞ்சியமாகத் திகழும் ஆதிசிவன் சூரியனை தை முதல் நாளில் வழிபடுவதன் மூலம் வணங்கி ஆற்றல் பெற்று அற்புதமாக அகில வாழ்வை வாழலாம்.


சூரியனை உதயகாலத்தில் வெறுங்க ண்ணால் பார்த்து தரிசித்து சூரியனின் காயத்ரி,தியான மந்த்ரம் அஷ்டோத்ரம் ஆகியவற்றைச் சொல்லி வணங்க வேண்டும்! உதயகால சூரியன் அதிக வெப்பமின்றி, ஒளிக்கதிர்கள் இன்று முழுவட்ட வடிவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பர்! இத்தரிசனம் அளப்பறிய சூரிய ஆற்றலை பெற்றுத்தரும்! கண்களின் மூலம் சூரியனின் ஆற்றல் உடலுக்குள் சென்றடைகிறது! இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமாப


*ஆத்மபலம்

*மனபலம்

*தேகபலம்

*எதிர்ப்பு சக்தி

*நோய் நிவர்த்தி

*எதையும் சந்திக்கும் மனதைரியம்

*ஆண்மை, வீரியம் அதிகரித்தல்

*சிந்தனாசக்தி அதிகரித்தல்

*நிர்வாகத்திறன் கூடுதல்

*மனத்தூய்மை

*முகத்தில் தேஜஸ்(ஒளி)

*வசீகரம்

*பேச்சாற்றல்

*எதிலும் வெற்றி பெறும் மனநிலை

*நம்மால் முடியும் என்ற நம்பிக்கை

*தாழ்வு மனப்பான்மை விலகுதல்

*ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்

*எண்ணங்களுக்கு வலிமை உண் டாகும்!

*சத்ருக்களை ஜெயித்தல்

*எத்தகைய பிரசச்சினைகளிலிருந்து வெற்றி பெறுதல்!

*கண்பார்வை சக்தி அதிகரித்தல்

*கண்நோய் நீங்குதல்

*படைப்பாற்றல் உண்டாகுதல் காலை சூரிய உதயமுதல் 8 மணி வரையிலும் சூரியனை வெறுங் கண்ணால் தரிசிக்கலாம். மார்பளவு தண்ணீரில் ஏரி,குளம்,ஆறுகளில் நின்று கொண்டு இருகை கூப்பி சூரியனைப் பார்த்து வெறுங்கண்ணால் தரிசிக்க வேண்டும்! குறைந்தது 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்


தரிசிக்கும் போது காயத்ரி, அஷ்டோத்ரம் சொல்லிக் கொண்டே தரிசித்து வணங்க வேண்டும். இதனால் உடலிலும்,மனதிலும் எண்ணற்ற ஏற்றமான மாற்றங் கள் நிகழ்வதைக்கண் கூடாக உணரலாம்! ஆரோக்யம்,பலம் ஐஸ்வர்யம்,புகழ், ஐயம் என பலவும் கொடுக்கக்கூடியவனான சூரியனை தினமும் வணங்க வேண்டும். முடியாவிட்டால் பொங்கல் அன்று ஒரு நாளாவது கட்டாயமாக வழிபட வேண்டும்.


8,12,16 என்ற எண்ணிக்கையில் குறைந்த பட்சமாக 12 முறையாவது குனிந்து நமஸ்கரிக்க வேண்டும் 12 மாதங்களில் 12 ராசிகளில் சஞ்சரிப்பவனாகவும், நவநாயர்களில் ஒருவனவாகவும் அக்னி, வாயு, ஆகாசம், பூமி, நீர் என்று அழைக்கப்படும் பஞ்ச பூதங் களில் அக்னி ரூபமாகவும் இருக்கும் சூரியனை நாம் தினமுமே வழிபடவேண்டும்.


ஒரே சமயத்தில் பிறப்பு, இறப்பு வாழ்வது என்ற மூன்று செயல்களும் சூரியனுடைய கால கணக்கில் தான் நடக்கின்றன. அதாவது 10 மணிக்கு சில இடங்களில் ஜனனம் அதே மணிக்கு சில இடங்களில் மரணம் அதே 10 மணிக்கு மற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி ஏக காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பாடான செயல்கள் செய்யக்கூடிய அபரிமிதமான சக்தி உடைய சூரியனை நாம் அவசியமாக வணங்கவேண்டும்.
 
 
சூரியன் நம்முன்னே தெரியும் கடவுள். சூரியனின் வெப்பம் வெளிச்சம் இன்றி எந்த உயிரினமும் வாழ வளர முடியாது என்பதை இன்று விஞ்ஞான விளக்கங்களாக நாம் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் நம் முன்னோர்க்ள கடவுளாக நேசித்தது மட்டுமின்றி நமக்கு உணவளிக்க நம்மை உழைப்பாளியாக மாற்றிய வள்ளல் பெருமான் சூரியன் அவன் கருணையால் விளைந்த பொருட்களை அவனுக்காக படைத்து அவன் பிரசாதமாக உண்டு ஆடிப்பாடி நன்றியினை காணிக்கையாக்கி மகிழ்ந்தார்கள். இந்த நன்னாளை அறுவடைத் திருவிழா என போற்றி இன்றும் என்றும் பொங்கல் இட்டு மகிழ்வோம்.
அதிசய தை.........
கடந்த பத்து ஆண்டு கால பொங்கல் வரலாற்றை பார்க்கும் போது இவ்வாண்டு பொங்கல் திரு நாள் அதிசய தைத்திருநாள் ஆகும். நம் கண் முன்னே தெரியும் கடவுள்களின் பிரதிநிதிகள் சூரியனும், சந்திரனுமே ஆவார்கள்.
ஏனென்றால் பூமி சூரியனைச் சுற்றுவதும், ஏனைய கோள்களும் சூரியனைச் சுற்றி வருவதும் இவைகள் ஒரு கட்டுப்பாட்டின் பாதையில் தனக்கே உரிய வேகத்தில் சுற்றி வருவதை சாஸ்திர ரீதியாக 360 டிகிரியாக பிரித்து ஒவ்வொரு 30 டிகிரி பாதையை ஒரு மாதமாக கணக்கெடுத்து 12 மாதங்களாக நாம் போற்றி வருகின்றோம்.
.
பொங்கலின் மகத்துவம்.......
முப்பது நாட்களுக்கு ஒரு முறை வீடு மாறும் சூரியன் தன் ஆட்சி வீட்டில் இருந்து ஆறாவது வீடான தன் மகன் சனியின் வீடான மகர வீட்டிற்கு வரும் நாளைத் தான் நாம் பொங்கலிட்டு போற்றுகின்றோம். தான் நின்ற வீட்டிற்கு ஆறாமிடம் பகை என்ற கோணத்தில் சனியும், சூரியனும் ஆகாதவர்கள் என்று ஜோதிட பலன் கூறினாலும், தன் வீட்டிற்கு வரும் தந்தையை சனிபகவான் உலக மக்கள் அனைவரது மகிழ்ச்சி நாளாக கொண்டாடும் திரு நாள் என ஆன்மீகம் அழகாக வர்னிக்கின்றது.
இதனால் தான் சூரியன் பித்ருகாரகன் என்றும் சனியோ ஆயுள் காரகன் என்றும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்தனர். தொன்று தொட்டு தந்தையை மகன் வரவேற்பதும், தந்தையை ஆராதிப்பதும், தந்தையின் புகழை போற்றி வணங்குவதுமாக மகள் இருந்தால் உலக மக்கள் அதை கொண்டாடி வரவேற்பார்கள் என்ற அற்புதமான தத்துவத்தை பொங்கல் திருநாள் உணர்த்துக்கின்றது.
அது மட்டுமின்றி இத்திரு நாளில் நம் பித்ருக்களாகிய நமது மூதாதயர்களை வணங்கி இறைவனுக்கும், நம்முன்னோர்களுக்குமாக நாம் உண்ண நமக்கு சொல்லித்தரப்படட உணவு வகைகளை கொண்டு படையல் இட்டு வணங்கும் போது ஆயுள் ஆரோக்கியம் பெருக்கெடுக்கும். வம்ச வளர்ச்சி தொடரும். நாம் இன்று மகிழ்ச்சியாக இருக்க உதவிய நம்முன்னோர்கள் இனிவரும் காலங்களில் நம் சந்ததியர் அனைவரையும் வாழ்வாங்கு வாழ்த்துவார்கள். உலகம் உள்ளவரை நம் சந்ததியர்கள் வளமாக வாழ்வார்கள்.
பொங்கல் வைக்கும் முறை..........
மகசூல் அதிகரித்து அறுவடை செய்து வந்த புது நெல் அரிசியான பச்சரிசியை புதுப்பானையில் சூரியனுக்காக வீட்டின் வாசலில் பொங்கல் வைப்பது யோகங்கள் அனைத்தையும் தரவல்லது.
தலைவாழை இலை பரப்பி அத்தனை வகை காய்கறிகளையும் அதில் வைத்து குத்து விளக்கேற்றி வழிபட்டு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து மாவிலை தோரணம் கட்டி, புதுப்பானையில் மஞ்சள் கொத்து கட்டி கரும்பு நிறுத்தி வைத்து வாசலில் பொங்கலிட இறைவணின் கருணை பரிபூரணமாக நம்மை வந்தடையும். காய்கறிகளை தனித்தனியாக அவரவருக்கு தெரிந்த சுவைப்பக்குவத்தில் செய்யலாம்.
குல தெய்வக் கோவில்கள் இஷ்ட தெய்வக் கோவில்களில் பொங்கல் வைத்து பின் வீட்டின் வாசலில் பொங்கலிடலாம். சாதப் பொங்கல், வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அவல் பொங்கல், ரவா பொங்கல், ஓட்ஸ் பொங்கல் என பல வகைகளில் பொங்கல் வைக்கப்பட்டாலும் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் அனைவரத இல்லத்திலும் வைக்கலாம். இதில் நீர்பொங்கல், பால் பொங்கல் என்ற இரு வகையிலும் "கல்கண்டு பொங்கல்'' செய்வது மிகவும் சிறப்பானது.
வழக்கமாக பொங்கல் செய்யும் முறையே கல்கண்டு பொங்கலுக்கும் என்றாலும் 1 பங்கு அரிசிக்கு மூன்று பங்கு கல்கண்டு என்ற முறையில் நெய் கூடுதல் விட்டு செய்ய சுவையும் மணமும் தெய்வீகமும் கூடி சிறப்பு தரும்.
மஞ்சளின் மகிமை........
மஞ்சள் ஓர் ஒப்பற்ற மங்களப் பொருள். மஞ்சள் ஒரு கிருமி நாசினி. இன்றைய அழகு சாதனப் பொருட்களில் மஞ்சளின் பங்கு பெறும் இடத்தை பிடித்துள்ளது. அதனால் தான் அதன் காப்புரிமையை அயல் நாடுகள் தனது தனது எனக்கூறும் படியாக வளர்ந்தது. இந்தியாவே இதன் தாயகம் எனவே நாம் அதன் பயணை அனுபவிப்போம் உரிமை கோரவில்லை என்ற நிலைக்கு வந்துள்ளார்கள்.
ஜல்லிக்கட்டு.........
மாடுகளின் கொம்புகளில் மாட்டக்கூடிய வண்ணப்பனை ஓலைகளால் செய்யப்பட்ட ஜல்லி என்ற அலங்காரப் பொருளைக் கட்டி அலங்கரிப்பது `ஐல்லிக்கட்டு'. காளைகளை அடக்குபவர்கள், அவற்றின் வண்ணம் தீட்டிய கொம்புகளில் கட்டப்பட்ட நகைகளை, பொற்காசுகள் முதலிய பரிசுப் பொருள்களை எடுத்து மகிழ்வார்கள்.
ஆடவர்கள் தமது மனவலிமையையும், உடல் திறத்தையும் ஏறு தழுவி மஞ்சு விரட்டி நிலைநாட்டுகின்றனர். அலங்கா நல்லூர், உறங்காம்பட்டி, சிராவயல், விராலிமலை, பாலமேடு, அரளிப்பாறை முதலிய பல ஊர்களில் மஞ்சுவிரட்டு ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
பொங்கல் அன்று கொடுக்கும் தான வகைகள்
 
பொங்கல் அன்று சுமங்கலிகளுக்கு பசும் மஞ்சள் கிழங்கு, தேங்காய், கரும்புத் துண்டு, வாழைப்பழம், இலந்தைப்பழம், தட்சணை வைத்து வெற்றிலை, பாக்கு கொடுக்க வேண்டும். சிலர் கல்யாணமான வருடம் கொடுத்தால் போதும் என்கிறார்கள். அது தவறு. எல்லா வருடமும் கொடுக்க வேண்டும். கல்யாணமான வருடம் நிறையப் பேருக்கு கொடுப்பார்கள்.
கல்யாணமான வருடம் வரும் முதல் சங்கராந்தி அன்று ஐந்து வாழைப்பழம் உடன் தேங்காய், கரும்புத்துண்டு, பசும் மஞ்சள் கிழங்கு, இலந்தைப் பழம் தட்சணை வைத்து ஐந்து சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டும். இரண்டாவது வருடம், 10 பழங்கள் 10 சுமங்கலிகளுக்கும், 3-வது வருடம் 15 பழங்கள் வைத்து 15 சுமங்கலிகளுக்கும், 4-வது வருடம் 20 பழங்கள் வைத்து 20 சுமங்கலிகளுக்கும், 5-வது வருடம் 25 பழங்கள் வைத்து 25 சுமங்கலிகளுக்கும் உடன் தேங்காய் மற்றவைகளையும் வைத்து கொடுக்க வேண்டும்.
பழங்கள் மட்டும் தான் எண்ணிக்கையில் அதிகரித்து கொடுக்க வேண்டும். வேலைக்கு போகும் பெண்களுக்கு நேரமின்மை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, சங்கராந்தி அன்று முடிந்த வகையில் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, 5 பழம் வைத்து கொடுப்பது நல்லது ஆகும்.
மஞ்சள் பொடி தானம்....... ஒரு பித்தளை குண்டான் அல்லது சற்று பெரிய பாத்திரத்தில், மஞ்சள் பொடியை கோபுரமாக நிரப்பி உடன் இரண்டு பொட்டணம் குங்குமம் வைத்து, மஞ்சள் பொடியின் உள்ளே யதா சக்தி தட்சணை வைத்து, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கரும்புத்துண்டு, இலந்தைப் பழம், தட்சணை, துளசி தளம் வைத்து தானம் கொடுக்க வேண்டும். மஞ்சள் பொடியில் வைப்பது அல்லாமல் வெற்றிலை, பாக்கில் தனியாக தட்சனை வைக்க வேண்டும். இதனால் நீடித்த சவுமங்கல்யம் உண்டாகும் என்பது ஐதீகம்.
பூசணிக்காய் தானம்......... இந்த தானமும் சங்கராந்தி அன்று கொடுக்க வேண்டும். ஸ்வாமி முன் ஒரு இடத்தை சுத்தப்படுத்தி, செம்மண் கோலம் போட்டு, அதன் மேல் பலகை அல்லது ஒரு தாம்பாளம் வைத்து, அதன் மேல் நுனி வாழை இலை போட்டு, அதில் ஒருவர் சாப்பிடும் அளவுக்கு குறையாமல் அரிசியை பரப்பி, அதன் மேல் பூசணிக்காயை வைக்க வேண்டும்.
பூசணிக்காயின் மேல் வேஷ்டி, துண்டு வைக்க வேண்டும். வேஷ்டி முடியாவிட்டாலும் துண்டு அல்லது மேல் வேஷ்டியாவது கண்டிப்பாக வைக்க வேண்டும். பூசணிக்காயின் முன்பு இரண்டு விளக்கு ஏற்றி, பூசணிக்காய்க்கு கஜ வஸ்தரம், சந்தனம், குங்குமம் இத்யாதிகள் அர்ப்பித்து பூஜை செய்து தேங்காய், பழம் நைவைத்யம் செய்த புஷ்பாக்ஷ்க்ஷதை போட்டு, கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும்.
வெற்றிலை, பாக்கு, தேங்காய் தட்சணையுடன் துளசிதளம் வைத்து, இலை, அரிசியுடன் பூசணிக்காயை அப்படியே தானமாக கொடுக்க வேண்டும். இந்த தானம் கொடுப்பதினால் திருஷ்டி தோஷம் அகலும் என்றும் தெரியாமலும், சந்தர்ப்ப வசத்தாலும் செய்த பாவங்களுக்கு பரிகாரம் என்பதும் ஐதீகம்.
இது பீடாபரிகார தானம் ஆகும். தவிர தெரியாமலும், சந்தர்ப்ப வசத்தாலும் செய்த பாவத்தின் நிமித்தமாக ஏற்படும், சரும நோய்கள் அடுத்த பிறவியில் பாதிக்காது என்றும் இப்பிறவியில் சரும நோய்கள் இருந்தால் குணமாகும் என்றும் கூறுவார்கள்.
கரும்பு தானம்........ இதுவும் சங்கராந்தி அன்று கொடுக்கும் தானம் ஆகும். ஸ்வாமி முன் ஒரு இடத்தை சுத்தப்படுத்தி, செம்மண் கோலம் போட்டு, அதன் மேல் பலகை அல்லது ஒரு தாம்பாளம் வைத்து அதன் மேல் நுனி வாழை இலை போட்டு, அதில் ஒருவர் சாப்பிடும் அளவுக்கு குறையாமல் அரிசியை பரப்பி, அதில் ஒரு ஜோடி கரும்பு ஜல்லையை நிறுத்திய மாதிரி வைக்க வேண்டும்.
அதற்கு வேஷ்டி அல்லது துண்டு, வெறும் துண்டாவது அல்லது மேல் வேஷ்டியாவது கட்ட வேண்டும். கஜ வஸ்தரம், சந்தனம், குங்குமம் இத்யாதிகள் பூஜித்து செய்து தேங்காய், பழம் நைவைத்யம் செய்து கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். வெற்றிலை, பாக்கு, தேங்காய், தட்சணையுடன் துளசிதளம் வைத்து, இலை, அரிசியுடன் கரும்பை அப்படியே தானமாக கொடுக்க வேண்டும். உடன் ரவிக்கையும் வைத்துக்கொடுக்கலாம்.
இலந்தைப் பழ தானம்........ இந்த தானமும் சங்கராந்தி அன்று கொடுப்பது. சங்கராந்தி அன்று ஒரு தட்டில் கொஞ்சம் இலந்தைப் பழம் வைத்து, ஸ்வாமிக்கு விளக்கேற்றி நைவைத்யம் செய்துவிட்டு வெற்றிலை, பாக்கு, தேங்காய், தட்சணை, துளசி தளம் வைத்து தட்டுடன் அப்படியே தானமாக கொடுக்க வேண்டும்.
மார்கழியில் இலந்தைப் பழம் வந்தாலும், சங்கராந்தி அன்று சுவாமிக்கு இலந்தைப் பழம் நைவைத்யம் செய்து விட்டு, பிறகு தான் நாம் சாப்பிட வேண்டும் என்பது நியதி. இந்த கால கட்டத்தில் நியமங்கள் பூரவாக கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், முடிந்த வரையில் கடைபிடிக்க வேண்டும். அதாவது அன்று இலந்தைப்பழம் தானமாவது கொடுக்க வேண்டும் என்பது பொருள்.
பூசணிக்காய், கரும்பு இரண்டும் வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. முடிந்த வருடங்கள் கொடுக்கலாம். அல்லது ஒரே ஒரு வருடம் மட்டும் கொடுக்கலாம். இலந்தைப் பழ தானம் மட்டும் வருடா வருடம் கொடுப்பது நல்லது.
 

No comments:

Post a Comment