Friday, January 18, 2013

ராமேசுவரத்தில் பாறைகள் தண்ணீரில் மிதக்கின்றன

பாறைகள் தண்ணீரில் விழுந்தால் அல்லது போடப்பட்டால் அவைகள் மூழ்குவதுதான் இயல்பு. ஆனால் ராமேசுவரத்தில் மட்டும் ஆச்சரியப்படும் வகையில் பாறைகள் தண்ணீரில் மிதக்கின்றன. ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை மீட்கும் பொருட்டு இலங்கை செல்ல ராமபிரான் பாறைகளை கடலில் தூக்கிப்போட்டு பாலம் அமைத்தார் என்று சொல்வார்கள்.

இலங்கைக்கும் ராமேஸ்வரத் திற்கும் இடையே உள்ள ஆதம் பாலம் அதாவது தற்போது ராமர் பாலம் என்று கருதுவது ராமபிரான் அமைத்ததே என்ற கருத்து இப்போதும் உள்ளது. அவ்வாறு ராமர் அமைத்ததாகக் கூறப்படும் பாலத்திற்கும் இங்கே தண்ணீரில் மிதக்கும் பாறைக்கும் நிறைய தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தீவு நகரமான ராமேஸ்வரத்தில் உள்ள துளசி பாபா மடத்தில் இந்த மிதக்கும் பாறைகள் உள்ளன. அந்த மடத்தில் ஒரு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு பாறைகளை மிதக்க விட்டிருக்கிறார்கள். இன்னும் சில பாறைகளை அங்கே வருவோர் கைகளால் தொட்டுப்பார்ப்பதற்காக அருகே வைத்திருக்கிறார்கள்.

இலங்கைக்குச் செல்ல பாலம் கட்டிய போது ராமர் பயன்படுத்திய பாறைகள்தான் இவைகள் என அங்குள்ளவர்கள் விளக்கம் தருகிறார்கள். எனவே பக்தர்கள் இந்த பாறைகளை புனிதமாக கருதி தொட்டு வணங்குகிறார்கள். சிறிதளவு கல்லை தண்ணீருக்குள் போட்டலே அது மூழ்கிவிடும்.

இவ்வளவு பெரிய பாறைகள் மட்டும் எப்படி மிதக்கின்றன என்று ஆச்சரியத்தில் வியக்கும் பக்தர்கள் இந்த பாறைகளை மீண்டும், மீண்டும் தொட்டுப்பார்த்து பிரமிக்கிறார்கள். மிதக்கும் பாறைகளை தூக்கிப்பார்க்க விரும்புபவர்களை மகிழ்ச்சிப்படுத்த தனியாக இன்னொரு சிறிய தொட்டியில் தண்ணீர் நிரப்பி அதிலும் இரு பாறைகளை மிதக்க விட்டிருக்கிறார்கள்.

விரும்புவோர் அவற்றை தூக்கிப்பார்க்கலாம். வெளியில் தூக்கும் போது அந்த பாறைகள் பயங்கரமாக கனக்கின்றன. தண்ணீருக்குள் போட்டதும் அவை மிதப்பது அதிசயத்திலும் அதிசயம் தான். அந்தப் பாறை இந்த மடத்திற்கு எப்படி வந்தது என்று விசாரித்தபோது ராமபிரான் இலங்கைக்கு சீதையை மீட்கச் சென்றபோது குறுக்கிட்ட கடலை எப்படி கடப்பது என்று யோசித்தார். அப்போது ஒரு கல்லைத் தூக்கி கடலில் போட்டார்.

அவரைத் தொடர்ந்து லட்சுமணரும் ஆஞ்சனேயரும் வானரப்படைகளும் கற்களை தூக்கி கடலில் போடவே அவைகள் யாவும் மூழ்காமல் மிதந்தன. மிதந்த பாறைகள் வழியாக இலங்கை சென்று சீதையை மீட்டு வந்ததாக புராணம். ராமர் இலங்கை செல்ல கடலுக்குள் தூக்கிப்போட்ட பாறைகள் தான் இவைகள் என்றும் தற்போது இந்த மடத்தில் உள்ள பாறைகள் தனுஷ்கோடியில் இருந்து எடுக்கப்பட்டவையே என்றும் தெரிவித்தனர்.

1964-ல் ஏற்பட்ட புயலில் தனுஷ் கோடி சின்னா பின்னமானதற்குப்பிறகு அந்தப் பகுதிக்கு வந்த வடநாட்டு சாதுக்கள் தனுஷ்கோடி கடலில் கரைப்பகுதியில் ஏராளமான பாறைகள் மிதந்து கொண்டிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர். அந்த பாறைகளில் சுமார் இரண்டாயிரம் பாறைகளை அவர்கள் சேகரித்தனர்.

அவர்கள் எடுத்துச்சென்ற பாறையில் 60 பாறைகள் இந்த மடத்தில் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பாறைகளை வடநாட்டிற்கு கொண்டு சென்றனர். இன்று பூரி ஜெகநாதர் கோவில், குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரக கிருஷ்ணர் கோவில், மற்றும் ரிஷிகேஷ், பத்ரிநாத், அலகாபாத், திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டவையே.

புதுச்சேரி அனுமார் கோவிலிலும் இந்த மிதக்கும் பாறைகளைக் காணலாம். ராமேஸ்வரம் பஸ் நிலையத்தில் இருந்து ராமநாத சுவாமி கோவிலுக்குச் செல்லும் வழியில் மெயின் ரோட்டிலேயே இந்த துளசி பாபா மடம் அமைந்துள்ளது. இங்கே மிதக்கும் பாறைகளைக் காணலாம்.*

கல் மிதப்பது எப்படி?

``விசுவகர்மாவின் பிள்ளையாகிய நளன் என்பவன் ராமனின் சேனையில் இருந்தான். அவன் அமைக்கும் பாலத்தை (சேது) நான் தாங்குவேன்' என்று வருணன் வழி கூறினான்.எல்லாம் வல்லவனாகிய ராமனே இருந்தும் குடிவழியாக உரியவர்களுக்குக் கைராசி உண்டு என்பதால் விசுவகர்மாவின் மகன் பாலம் கட்டுவதற்காக அழைக்கப்பட்டான்.

தவம் செய்வான் ஒருவன் வைத்திருந்த சாளக் கிராமத்தை நளனாகிய வானரன் கங்கையில் போட்டு விட்டான். வழிபடும் சாளக்கிராமத்தை இழக்க விரும்பாத தவசி, இவன் போட்டவை மிதக்கட்டும் என்று சாபம் கொடுத்து விட்டான்.

கைராசியோடு இந்தச் சாபராசியும் நளனுக்கு இருந்ததால் வருணனுக்கு மிதப்பவை எல்லாம் அத்துபடியானதாலும் நளனைச் சேது கட்டுமாறு கூறினான். அதனால் கல்லும் மலையும் மிதந்தன; சேது கட்டலும் எளிமையாயிற்று. ராவணனை வீழ்த்திவிட்டு புஷ்பக விமானத்தில் திரும்பும் போது சீதைக்கு இச்சேதுவைக் ராமன் காட்டினான் என்பது வரலாறு.

No comments:

Post a Comment