Friday, January 18, 2013

துளசி

துளசி என்பதற்கு ஒப்பில்லாதது என்று பொருள். இதிலிருந்தே துளசியின் பெருமையை நாம் புரிந்து கொள்ளலாம். அருகு, வில்வம், துளசி, வேம்பு, வன்னி ஆகிய ஐந்தும் பஞ்சபத்திரம் எனப்படும். சிறந்த மருத்துவ சக்திகளை கொண்ட இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம், திருமாலுக்கு உகந்தது துளசி, அம்மனுக்கு வேப்பிலை, விநாயகருக்கு அருகம் புல், பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது. கண்ணன் கூறிய இலை 'எவனொருவன் முழு மனதுடன், பத்ரம், புஷ்பம், பழம், நீர் முதலியவற்றை எனக்கு சமர்ப்பணம் செய்கிறானோ, அதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்'- என்று பகவத் கீதையில் கண்ணன் கூறியுள்ளார். பத்ரம் என்றால் இலை என்று பொருள்படும்.

இந்த இடத்தில் கண்ணன் குறிப்பிட்ட அந்த இலை துளசியாகும். அனைத்து வைணவ தலங்களிலும் துளசி முக்கிய இடம் பிடித்திருக்கும். கோவில்களில் செம்புப் பாத்திரத்தில் சுத்தமான நீர் விட்டு, அதில் துளசியை போட்டு வைத்திருப்பார்கள். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட துளசியின் மகத்துவத்தால் அந்த நீரும் மருத்துவ குணம் கொண்டதாக மாறும். வைணவ ஆலயங்களில் துளசி நீர் தீர்த்தம் என்பது பிரசாதமாக வழங்கப்படும். இதற்கு பெருமாள் தீர்த்தம் என்று பெயர்.

மும்மூர்த்திகளும்........ துளசியின் நுனியில் பிரம்மதேவரும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்கின்றனர். தவிர பன்னிரண்டு ஆதித்யர்கள், பதினோரு ருத்திரர்கள், எட்டு வசுக்கள், அக்னி தேவர்கள் இருவர் மற்றும் புஷ்கரம் முதலிய தீர்த்தங்கள், கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள், வாசுதேவர் போன்ற தேவர்கள் துளசி தளத்தில் வசிக்கின்றனர்.

துளசி இலை பட்ட நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். இதனால் தான் துளசி நீரால், இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சிறு இலைக்கு என்ன மகத்துவம் இருந்து விடப் போகிறது என்று பலரும் எண்ணம் கொண்டிருக்கலாம்.

ஆனால் துளசியின் மகத்துவத்தை எடுத்துரைக்க கண்ணன் நடத்திய நாடகம், கிருஷ்ணாவதாரத்தில் ஒரு கிளைக் கதையாக கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணர் நடத்தும் ஒவ்வொரு லீலையும், ஒருவித தத்துவத்தையும், அதன் மூலமாக ஒப்பற்ற உண்மையை உலகுக்கு எடுத்துரைக்கவும் நடத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதை இதிகாசங்களையும், புராணங்களையும் படித்துணர்ந்தவர்கள் அறிவர்.

அன்பை அளவிட........... ஒரு முறை கிருஷ்ணரின் மேல் சத்தியபாமாவுக்கு அளவு கடந்த அன்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அதில் சிறிதளவு கர்வமும் கலந்திருந்தது. தனது அன்பர்களுக்கு ஏற்படும் கர்வத்தையே சுட்டிக்காட்டி திருத்தும் பரந்தாமன், அன்புக்குரியவளுக்கும் அதை புரியவைக்க சித்தம் கொண்டார்.

ருக்மணியை விட தாமே, கண்ணனின் மேல் அதிக காதல் (அன்பு) கொண்டுள்ளதாக எண்ணியிருந்தாள் சத்தியபாமா. அந்த கர்வம் என்ற கனவை கலைக்கத்தான், கண்ணன் விரும்பினார். அதன்படி, 'உங்கள் இருவரில் என் மேல் யார் அதிக அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை அறிய ஒரு போட்டி வைக்கலாம் என்று எண்ணியுள்ளேன்' என்றார் கிருஷ்ண பரமாத்மா.

துலாபாரம் வைத்து அன்பை எடைபோடுவது என்று முடிவானது. துளசியின் பெருமை துலாபாரத்தின் ஒரு புறம் கிருஷ்ணர் அமர்ந்து கொண்டார். மறுபுறத்தில் பொன்,வைரம், வைடூரியம், மாணிக்கம் என விலை உயர்ந்த பொருட்களை சத்தியபாமா அடுக்கிக்கொண்டே இருந்தார். ஆனால் அவருக்கு ஆச்சரியம்தான் மிஞ்சியது. கிருஷ்ணர் இருந்த கரையின் துலாபாரம் சிறிது கூட மேல் எழும்பவில்லை.

அடுத்ததாக ருக்மணியின் முறை வந்தது. இப்போது ருக்மணி பொன், பொருள்களை துலாபாரத்தில் வைக்கவில்லை. அதற்கு மாறாக, கொஞ்சம் துளசி இலையை மட்டும் வைக்க துலாபாரம் சமநிலையை அடைந்து, பிரமிக்கவைத்தது. இதில் இருந்தே துளசியின் தூய்மையையும் பெருமையையும், சக்தியையும் அறியலாம்.

எந்த ஒரு பொருளை தானம் செய்யும்போது, தானம் கொடுக்கும் பொருளுடன், ஒன்றிரண்டு துளசி இலைகளையும் சேர்த்து வழங்கும்போது, நாம் வழங்கும் தானமானது உயர்வை அடையும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. 'எவன் ஒருவன் துளசி பத்ரம் கொண்டு வருகிறானோ, அவனுடன் நானும் வருகிறேன்'- என்று கூறுகிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

எப்போதும் புதிய நிலையில் துளசியை 3 நாட்களுக்கு சேமித்து வைக்கலாம். வாடினாலும் அது பரிசுத்தமானதாகவே கருதப்படும். தெய்வ வழிபாட்டிற்கும் பயன்படுத்தலாம். பூக்களை பூஜைக்கு பயன்படுத்தும் போது, அன்றைய தினம் பூத்த மலர்களையே கீழே உதிர்வதற்கு முன்பிருக்கும் நிலையில் பறித்து பயன்படுத்த வேண்டும் என்பது வழிபாட்டு நியதி.

இதனால் பூக்களில் பரிசுத்தமானது, பரிசுத்தமற்றது என்ற வேறுபாடு உண்டு. ஆனால் துளசியில் அந்த வேறுபாடு கிடையாது. அது எப்போதுமே பரிசுத்தமானது. பூஜைக்கு பயன்படுத்துவதில் துளசியை பொருத்தவரை புதியது, பழையது என்ற நிலை கிடையாது. அது எப்போதும் புதிய நிலையைக் கொண்டது.

தரையிலோ, நீரிலோ விழுந்தாலும், கோவிலில் இறை வழிபாட்டுக்கு பின்னர் ஒதுக்கி வைக்கப்பட்டதாக இருந்தா லும், துளசிக்கு புனித தன்மை உண்டு. அதை வீட்டிற்கு கொண்டு வந்து பூஜைக்கு பயன்படுத்தலாம். துஷ்ட சக்திகள் அண்டாது சமஸ்கிருதத்தில் துளசிக்கு, 'ப்ருந்தா' என்று பெயர். துளசி காட்டிற்கு பிருந்தாவனம் என்று பெயர். இதனால் தான் துளசி காடான பிருந்தாவனம், அந்த பரந்தாமனின் மனம் கவர்ந்த இடமானது.

எந்த இடத்தில் துளசி வளர்ந்திருக்கிறதோ அங்கு மும்மூர்த்திகளுடன், அனைத்து தேவர்களும் வசிக்கிறார்கள் என்று அர்த்தம். வீடுகளில் துளசிச் செடி வைத்து வளர்ப்பதும், அதனை பால், அபிஷேக நீர், கங்கை நீர் கொண்டு வளர்ப்பதும், தினமும் பூஜை செய்து வழிபடுவதும் சிறப்பான பல நல்ல பலன்களை தரும். துளசிச் செடி உள்ள வீட்டில் எந்த துஷ்ட சக்திகளும் நுழையாது.

விஷப்பூச்சிகள் வராது. உள்வரும் அசுத்த காற்றும், துளசியின் மருத்துவ குணத்தால் நம்மை அண்டாது. எனவே குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். மாங்கல்ய பலத்துக்கு பெண்களின் மாங்கல்ய பலத்துக்கு துளசி பூஜை என்பது முக்கியமானது.

தங்களின் வீடுகளில் துளசி மாடம் அமைத்து அதற்கு விளக்கேற்றி காலை, மாலை என இரு வேளைகளில் பூஜை செய்து மாடத்தினை வலம் வந்து வழிபட்டால் பலன் கிடைக்கும். துளசி மாடத்தை பூஜிக்க, வேறு துளசி செடியில் இருந்துதான் இலைகளை பறித்து பயன்படுத்த வேண்டும். துளசி வனம் இருக்கும் வீட்டில் துர்மரணங்கள் நிகழாது. நாராயணருக்கு, தினமும் துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுபவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்றும் பத்மபுராணம் கூறுகிறது.

No comments:

Post a Comment