Sunday, October 20, 2013

பதவி - பூர்வ புண்ணியம் பற்றி கவிஞர் கண்ணதாசன்

 
பதவி - பூர்வ புண்ணியம் பற்றி கவிஞர் கண்ணதாசன்


கொல்லன் ஒருவன் ஓர் இரும்பைக் காய்ச்சினான். சிறு கலயத்தில் இருந்த தண்ணீரில் அதை நனைத்தான். ' சுர்' என்ற சத்தம் கேட்டது. தண்ணீர் வற்றிப் போய்விட்டது. உடனே கொல்லனுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. 'ஊர் ஜனங்கள் நம்மை விரோதித்திருக்கிரார்கள். ஒரு பெரிய இரும்பைக் காய்ச்சிக் குடி தண்ணீர் கிணற்றில் போட்டு விட்டால் கிணறு வற்றி... ஊர் மக்கள் சாகட்டும்' என்றுக் கருதினான். காய்ச்சியும் போட்டான்; இரும்பு தொலைந்ததுதான் மிச்சம்.

முயல் வேட்டையில் ஜெயித்தவன் புலி வேட்டையில் இறங்க கூடாது. பாட்மிட்டனில் வெற்றி பெற்றவன், கால் பந்தாட்டத்திலும் வெற்றி பெற முடியும் என்றுக் கருதக் கூடாது.

கொலைச் சித்து எழுதி பணம் சேர்த்தவன், ராமாயணம் எழுத முயற்சி செய்யக் கூடாது.

அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை. ' பதவி பூர்வ புண்ணியனாம்'. பூனைக்கு மணிமகுடம் கிடைத்தாலும் அது பூர்வ புண்ணியமே. 'ஐயோ! இவனா பதவிக்கு வந்து விட்டான்?' என்று அங்கலாய்த்துப் பயனில்லை. அவனது பூர்வ புண்ணியம் அவனை உச்சத்தில் வைக்கிறது.

அப்பாவிகளான பெற்றோர்களுக்கு அற்புதமான குழந்தைகள் கிடைக்கின்றன. அற்புதமான பெற்றோர்களுக்கு அயோக்கியமான குழந்தை பிறக்கிறான். சில வீடுகளுக்கு மகாலட்சுமியே மருமகளாக வருகிறாள்; சில வீடுகளுக்கு பிரம்மராட்சசியே வருகிறாள். சில குழந்தைகள் தகப்பனை தோளில் வைத்துக் கொண்டாடுகின்றன. சில சோற்றுக்கு அலைய விடுகின்றன.

பூர்வ புண்ணியக் கணக்கு அந்தந்த அளவிலேயே நிறைவேற்றப்படுகின்றன.

உச்சத்து நட்சத்திரங்கள் உருண்டு விழுகின்றன. விழுந்த பின்னாலே தான் விளைவை உணருகின்றன. ஆராய்ச்சியும் பகுத்தறிவும் எங்கே போயின?

நடந்து போ. செருப்பு போட்டுக் கொள். செருப்பையும் தாண்டி ஆணி குத்தக் கூடும். செருப்பு இல்லாத காலில் எதுவும் குத்தாமலும் இருக்க கூடும்.

மனித முயற்சியின் பலவீனத்துகுள்ளே பலமாக அடங்கி இருப்பதே பூர்வ புண்ணியம்.

அதிதிக்கு சோறு போட்டுச் சாப்பிடும் பழக்கம் இப்போது அடியோடு மறைந்து விட்டது. அந்த அடிப்படை தர்மமே மறைந்ததால் எத்தனையோ அலங்கோலம்!

' மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்' என்பார்கள். ' ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைத்தான்' என்பார்கள். 'குதிரைக்கு ஏன் கொம்பு வைக்கவில்லை' என்பார்கள்.

அரிசியைக் கவ்வுகிற எறும்பின் வாய் வெல்லக் கட்டியை கவ்வி இழுக்க முடியவில்லை, மரக்கிளையை யானை முறிப்பது போல் மனிதன் கைகள் முறிக்க முடிவதில்லை. எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திப் பார்த்தால் பூர்வ புண்ணியம் என்பதன் அர்த்தம் புரியும்.

தேர்தல் நடக்கிறது, யார் ஜெயிப்பார்களோ தெரியாது. யாரோ நீங்கள் விரும்பாத ஒருவர் ஜெயித்து விட்டால் ஓட்டு போட்டவர்களை முட்டாளாக்காதீர்கள், ஓட்டு வாங்கியவனின் பூர்வ புண்ணியத்தை கணக்கில் எடுங்கள்.

உங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு, உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமென்றால் புண்ணியம் செய்யுங்கள். இருப்பதை இல்லாதவனுக்கு கொடுங்கள். இல்லாதவனைக் கேலி செய்யாதீர்கள்.

சொத்து சேர்த்து உயில் எழுதுவது போல் புண்ணியத்தை உயில் எழுதி வையுங்கள்.

உங்களிடம் வாங்கிக் கொள்கிறவன் மனிதனல்ல; இறைவனது இடது கை வாங்குகிறது; அது வலது கையால் திருப்பி தரப்படுகிறது.

பசித்தவனுக்குப் பழைய சோறு போட்டால் உங்கள் ஆயுள் முழுவதும் பழைய சோறு கிடைக்கும். பஞ்சாமிர்தம் கொடுத்தால் பஞ்சாமிர்தம் கிடைக்கும்.

பத்து பேர்களின் தாகத்தை தீர்த்து விட்டு பாறையை தோண்டிப் பாருங்கள்; தண்ணீர் கிடைக்கும். வாழுகின்ற காலத்தில் உங்களுக்கு பதவி கிடைக்கிறதோ இல்லையோ, வைகுந்த பதவியோ, சிவலோகப் பதவியோ நிச்சயம் கிடைக்கும்.

No comments:

Post a Comment