கர்மயோகம்
பகவான் கிருஷ்ணர், ஞானியின் இயல்பு குறித்து அர்ஜுனன் கேட்ட கேள்விக்குப் பல்வேறு கோணங்களில் அழகாக பதில் கூறினார். ஆசைகளைத் துறுந்தவர், தன்னில்தான் இன்புற்றிருப்பவர், புலனடக்கம் மிக்கவர் ஞானி எனக் கூறினார். அர்ஜுனன் பகவானிடம் இவ்வாறு கேள்வி கேட்பதற்கு ஒரு பின்புலம் இருக்கிறது. மனிதனுக்கு எழும் உணர்ச்சிப் போராட்டங்களை வெளிப்படுத்தும் பிரதிநிதியாக அர்ஜுனன் நிற்கிறான். கடமையைச் செய்ய விழையும் போது ஏற்படும் குழப்பத்தில் தட்டுத் தடுமாறிப் போகிறான். தான் ஒரு இல்லறத்தானாக, க்ஷத்திரியனாக, போர்வீரனாக இருப்பதால்தானே கொடூரமான போர்க்களத்தில் நிற்க நேரிடுகிறது! கடமையிலிருந்து விலகிவிட்டால் இந்தப் பிரச்சனைகளிலிருந்து மீண்டு விடலாம் என்று எண்ணுகிறான் அர்ஜுனன். இது மிக இயல்பாக எல்லோருக்கும் ஏற்படும் மனநிலை. ஒரு பிரச்னை ஏற்படும்போது, அதற்குத் தீர்வு காண முயற்சிப்பதைக் காட்டிலும், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே பலரும் விரும்புகின்றனர்.
உண்மையில், பல பிரச்னைக்குத் தீர்வு என்பது புறத்தில் இருப்பதில்லை. ஆனால் தீர்க்க முடியாத பிரச்னைகளையும், அகத்தில் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை மெய்யறிவு நூல்கள் தெளிவு படுத்துகின்றன. தீர்வு காண முயல்வதற்குப் பதிலாக, பிரச்னையின் வீரியம் தாங்க முடியாமல் பலர் விலகி ஓடுகின்றனர். அதன் வெளிப்பாடாகவே செயலின்மையை விரும்புகின்றனர். பகவான் மிக முக்கியமானதொரு உபதேசத்தைக் கூறுகிறார். உலகில் ஒரு கணம்கூட எவரும் செயல் புரியாமல் இருக்க முடியாது. செயல்புரிய விரும்பாதவனால் தன் உடலைக்கூட நன்கு பராமரிக்க முடியாது என்கிறார் பகவாவன். உடல் செயலற்றிருந்தாலும், மனம் ஓயாது அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையைப் பற்றிய சலிப்பு, தன்னை மறந்து கிடக்க விருப்பம்-இவையே மனிதனை மேலும் சோர்வில் ஆழ்த்துகின்றன.
செயலை நேசித்து உற்சாகத்தோடு செயல்புரிய பலராலும் முடிவதில்லை. திங்கட்கிழமை காலை தொங்கிய முகங்களுடன் அலுவலகங்களுக்குச் செல்லும்போதே, அந்த வார இறுதி ஓய்வுக்கான ஏக்கம் தொடங்கிவிடுகிறது. ஓர் இயந்திரம் கூட பலவருடங்கள் நன்கு செயலாற்றி பின் செயலிழந்த நிலையை அடையும். ஆனால் பயன்படுத்தாமல் வெறுமே வைத்திருந்தால், வீணாகி செயலாற்ற மறுக்கும் இயந்திரங்களும் உண்டு! உடல் என்பது ஓர் அற்புதமான இயந்திரம். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உணவு, உழைப்பு, உறக்கம், ஓய்வு ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் தேவை. உயிர் வாழ்வதே உண்பதற்காகத்தான் என்பதுபோல, பலர் உடல் ஆரோக்கியத்தைக் காட்டிலும், நாவின் சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, உடலைக் கெடுத்துக் கொள்கின்றனர். வேறு சிலர், உடலை வருத்தி பணம் சம்பாதித்து, பிறகு அந்தப் பணத்தைக் கொண்டு உடல் ஆரோக்கியத்தை மீட்க முயற்சிக்கின்றனர்.
உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் <உழைப்பு இன்றியமையாதது. சலிப்பு, வெறுப்பு முதலிய எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, செயலை நேசித்து செயலில் ஆழ்ந்து ஈடுபட வேண்டுமென்றால், கர்மயோகத்தைக் கைக்கொள்ள வேண்டும். நம்முடைய கடமைகளை கடவுளின் கட்டளையாகக் கருதி செயல்புரியவேண்டும். கடவுளுக்குச் செய்கின்ற வழிபாடு என்ற உணர்வோடு செயல்புரிதல் வேண்டும். மனம் தூய்மையடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயலாற்ற வேண்டும். சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும். இந்த மனநிலைக்குப் பெயர்தான் கர்மயோகம். நம் உடலுக்குள் <உறுப்புகள் அனைத்தும் அதனதன் வேலையை ஒத்திசைவோடு செய்து வருகின்றன. இதற்குள் ஒரு சீரான ஒழுங்குப்பாடு இருக்கிறது. அதுபோன்று, இந்தப் பிரபஞ்சமே இறைவனுடைய சரீரம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வேதத்தில் <உள்ள புருஷ ஸூக்தம், இந்த உலகத்தையே கடவுளின் சரீரமாகச் சொல்கிறது. இறைவனுடைய சரீரத்தில் நாம் அனைவரும் ஒவ்வொரு உறுப்பாக இருக்கிறோம். நாம் அனைவரும் முறையாகச் செயலாற்றினால், இறைவனுடைய சரீரமாகிய பிரபஞ்சம் சரியாக இயங்கும்.
ஹிந்து மதம் பரந்து விரிந்தது. தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளவற்றைக் கடைபிடிக்க வாழ்நாள் போதாது என்பது <உண்மைதான். ஆனால், ஓர் ஆரம்பமாக, ஐந்து கடமைகளை நாள்தோறும் செய்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். நாள்தோறும் இறைவனைப் போற்றி வணங்குதல் தேவ யக்ஞம் எனப்படும். தாய் தந்தையரைப் பேரன்புடன் பேணுதல், இறந்த மூதாதையர்களுக்கு நீத்தார் கடன் செய்தல் பித்ரு யக்ஞம் எனப்படும். நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு சக மனிதருக்காவது, ஏதாவது ஒருவிதத்தில் உதவி செய்வது மனுஷ்ய யக்ஞமாகும். விலங்குகள், செடிகொடிகளைக் காப்பது பூத யக்ஞம். கீதை, திருக்குறள் முதலான மெய்யறிவு நூல்களை நாள்தோறும் ஓதுவது பிரம்மயக்ஞம் எனப்படும். தனியொருவனாக, தான் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என மனிதன் எண்ணிவிட முடியாது. ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் சிறு அங்கமாக இருக்கிறான்.
இயற்கை, ஒழுங்குப்பாட்டுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அத்துடன் இசைந்து வாழ மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். பகவான் அழகானதொரு தொடர்பை, சுழற்சியைக் கூறுகிறார். உடல்கள், உணவுப் பொருட்களிலிருந்து உருவாகின்றன. உணவுப்பொருட்கள், மழையிலிருந்து <உற்பத்தியாகின்றன. மழை, அறத்திலிருந்து வெளிப்படுகிறது. அறம் முறையான வாழ்க்கையிலிருந்து தோன்றுகிறது. முறையான வாழ்க்கையைப் பற்றிய அறிவு, வேதங்களிலிருந்து விளங்குகிறது. வேதங்கள் இறைவனிடமிருந்து வெளிப்பட்டவை. எனவே அனைத்தையும் விளக்கும் வேதங்களும், அவற்றை அருளிய இறைவனும் யாண்டும் அறத்தை அருளும் முறையான வாழ்க்கை நெறியில் நிலை கொண்டுள்ளனர் என்கிறார் பகவான். எங்கு முறையான வாழ்க்கை நிகழ்கிறதோ, அங்கு இறைவனின் அருள் முழுமையாக வெளிப்படுகிறது. முறையான வாழ்க்கை முறை சமூகத்தைக் காக்கிறது. சமூகம், முறையான வாழ்க்கை வாழ்பவனைக் காக்கிறது. இதுவே கர்மயோகம் எனப்படுகிறது.
No comments:
Post a Comment