மூன்று சபதங்கள்
ஓர் உயர்ந்த லக்ஷியத்தையோ உலகக்ஷேமத்தையோ அடிப்படையாகக் கொண்ட சபதங்கள் சிரஞ்ஜீவித்துவம் அடைந்துவிடுகின்றன.
பீஷ்மர் சபதம்: சந்தனு என்னும் மன்னன் கங்கைக் கரையில் பரிமளகந்தி என்ற பரதவர் தலைவன் மகளின் அழகுக்கும் பருவத்துக்கும் நயத்துக்கும் உள்ளம் பறிகொடுக்கிறான். ஆனால், தன் மகள் வயிற்றுச் சந்ததியினரே அரசாள வேண்டுமென்று செம்படவர்கோன் ஒரு நிபந்தனை போடுகிறான். இதைக் கேள்வியுற்ற இளவரசன் தேவவிரதன் அவனிடம் சென்று, பரிமளகந்தியின் சந்ததியே ஆளட்டும்; என் தந்தையின் பொருட்டு நான் <உலகாட்சியை வெறுக்கிறேன். மூவர் அறிய, தேவர் அறிய, யாவரும் அறிய நான் பிரம்மசாரியாக இருப்பேன் என்று சபதம் ஏற்கிறான். பீஷ்மர் சபதம் என்றால் ஒருகாலும் தவறாதது என்று பொருள்!
பாஞ்சாலி சபதம்: பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகிய பெரியோர்கள் கூடிய ராஜ சபையிலே துச்சாதனன் பாஞ்சாலியை துகிலுரித்தான். தலை குனிந்து துடிதுடிக்கும் உள்ளங்களுடன் வீற்றிருந்த பாண்டவர்களின் துணை அவளுக்கு இல்லை கண்ணனை அழைத்தாள். வற்றாத துகில் கொடுத்து துச்சாதனன் கைகளுக்கு ஓயாத வேலை தந்தான் பக்த வத்ஸலன். அந்தச் சூழலிலே சபதம் செய்தாள் பாஞ்சாலி: இந்தத் துரியோதனன் கும்பல் படுகளத்தில் வீழந்தாலன்றி, என் கூந்தலை நான் முடிப்பதில்லை..! அவள் சபதம் நிறைவேறிற்று.
பரதனின் சபதம்: பித்ருவாக்ய பரிபாலனம் செய்து பதினான்கு வருஷம் வனவாசம் செய்தான் ஸ்ரீராமன். அந்தப் பதினான்கு வருஷமும் ராமனுடைய பாதுகைகளை பூஜித்துக்கொண்டு, நந்திக் கிராமத்திலேயே அவன் வரவுக்காகக் காத்திருந்து, அவனுடனே அயோத்தியில் பிரவேசிப்பேன் என்று சபதம் செய்தான் பரதன். ராஜகுமாரன் எனினும் ராஜ யோகங்கள் அனைத்தையும் அறவே துறந்து, துறவியின் கோலத்தில் கடும் விரதத்தை அனுஷ்டித்தான். அதன்படி, அவனே ராமனை பட்டாபிஷேகத்துக்கு அழைத்துச் செல்ல, பிரதிக்ஞை நிறைவேறியது.
No comments:
Post a Comment