உலகே மாயம்
நாம்தான் யுக யுகாந்திரமாக நீண்ட ஆயுளுடன் வாழ்கிறோம். உலகங்களையும் அவற்றில் உள்ள உயிர்களையும் படைக்கிறோம். நமக்கு மிஞ்சிய பெருமை உடையவர்கள் இவ்வுலகில் வேறு ஒரு வரும் இல்லை என்று மிகுந்த ஆணவம் கொண்டார் நான் முகன். அவரின் ஆணவப்போக்கை அறிந்த திருமால், அதனைப் போக்க எண்ணி நான்முகனை உரோம முனிவரிடம் அழைத்துச் சென்றார். அம்முனிவரிடம், உம்முடைய வாழ்நாள் எவ்வளவு? என்று திருமால் கேட்டார். என்னுடைய உடலில் மூன்றரைக்கோடி ரோமங்கள் இருக்கின்றன. நான்முகன் ஒருமுறை இறந்தால், என்னுடையஅவற்றில் ஒன்று உதிரும். இவ்வாறே மூன்றரைக்கோடி ரோமங்களும் உதிர்ந்து போனால் எனக்கு மரணம் நேரும் என்று கூறினார் உரோம முனிவர். பிறகு திருமால், உரோம முனிவருடன் அட்டகோண முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றார். அம்முனிவருடைய உடலில் எட்டு கோணல்கள் இருந்தமையால் அவருக்கு இப்பெயர். மிகுந்த பெருமைகள், சக்திகள் உடைய அட்டகோண முனிவர், சிறிய இலைக்குடில் ஒன்றைக் கட்டிக்கொண்டு அக்குடிலுக்குள் பாதி உடலும், பாதி வெளியேயுமாக அமர்ந்திருந்தார். திருமால் அவரைப் பார்த்து உமக்கு வாழ்நாள் எவ்வளவு? என்று வினவினார். அதற்கு அவர், இதோ இங்கே வந்திருக்கிற உரோம முனிவர் இறந்தால், என்னுடைய உடலில் உள்ள எட்டுக் கோணல்களில் ஒரு கோணல் நிமிரும். இவர் எட்டுதரம் பிறந்து இவ்வாறே நீண்டநாள் வாழ்ந்து இறப்பாரானால், என்னுடைய எட்டுக் கோணல்களும் நிமிர்ந்து விடும். அப்போது நானும் இறந்துவிடுவேன் என்று கூறினார். நீண்ட வாழ்நாளைப் பெற்றுள்ள தாங்கள், பெரிய மாட மாளிகை கட்டிக்கொண்டு அதில் தங்கியிருக்கக் கூடாதா? இத்தகைய குடிலில் வாழ்கிறீர்களே! என்று கேட்டார் திருமால். இவ்வுலகம் நிலையற்றது. மனித உடல் நிலையற்றது. நான் பெற்றிருக்கும் இந்த வாழ்நாளும் ஒரு வாழ்நாளா? அழியும் தன்மையுடைய உடலையும், உலக்தையும் ஒரு பொருளாக மதிக்கலாமா? இவற்றால் யாது பயன்? என்றார் அவர். இதனையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நான்முகன், தன்னுடைய ஆணவத்தின் மீதே வெறுப்புற்று தலை குணிந்தார். உலகே மாயம் என்ற உண்மையே உணர்ந்தார்.
No comments:
Post a Comment