Friday, November 28, 2014

அகங்காரம் கொண்டவர்கள் துயரத்தைச் சந்தித்து தான் ஆக வேண்டும்.

தேனில் மூழ்கி, இறக்கும் வண்டைப் போல், ஆணவம் கொண்ட மனம், ‘தான்’ என்கிற அகங்கார மாயைக்குள் அகப்பட்டு, தன்னுடைய அழிவைத் தேடிக் கொள்கிறது. மேலும், ஆசை வயப்பட்ட மனமானது, பற்றுதலில் சிக்குண்டு, ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் போது, வன்மத்தையும், வெறுப்பையும் பிரதிபலிக்கிறது."
கிருபானந்த வாரியார் ஒரு சொற்பொழிவில் சொன்னது:
ஒரு நண்பருடன் அவர் தோட்டத்துப் பாதையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, வழியில் தென்பட்ட நிலத்தில் பயிர்கள் நன்றாக விளைந்திருந்தது. அது, அவருடைய நிலம் என்பதால், ‘பயிர்கள் நன்றாக செழித்து வளர்ந்திருக்கிறதே…’ என்றேன். உடனே அவர், ‘நாசமாப் போக; மூணுமாசத்துக்கு முன்னால தான் இந்த நிலத்த வித்தேன்; இப்ப இது விளைஞ்சா என்ன, விளையாட்டி என்ன…’ என்றார் கடுப்புடன்.
அந்த நிலத்தை அவர் நல்ல விலைக்குத் தான் விற்றிருக்கிறார்; இருந்தாலும், நிலத்து மேல் இருந்த பற்று, கோபமாக வெளிப்பட்டு விட்டது, என்று கூறினார் கிருபானந்த வாரியார்.
அதே போன்று தான் அகங்காரம்! அறியாமையின் இருப்பிடமான இந்த அகங்காரமே மனிதனின் அழிவிற்கும் அவனுடைய கர்ம வினைக்கும் காரணமாக இருக்கிறது.
அகங்காரத்தால் அழிந்து போன தேவலோக பசுக்களின் கதை இது:
ஒரு சமயம்… சிவபெருமான் ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.
அப்போது, தேவலோக காராம் பசுக்கள், வெறிபிடித்து, ஆகாய மார்க்கமாக, ஹூங்காரம் இட்டப்படி போய் கொண்டிருந்தன. அவ்வாறு சென்று கொண்டிருந்த போது, கீழே தவத்தில் இருந்த சிவபெருமானைப் பார்த்து, ‘அடடே… சிவபெருமான் சடைமுடியோடு தவம் செய்து கொண்டிருக்கிறாரே… இவருக்கு யார் காராம் பசு பாலால் அபிஷேகம் செய்யப் போகின்றனர். நாம் செய்தால் தான் உண்டு…’ என்று, அகங்காரத்துடன் ஆகாய வீதியில் இருந்தபடியே சிவபெருமானின் திருமுடியில் பாலைப் பொழிந்தன.
சிவபெருமான் நிமிர்ந்து பார்த்தார்; காராம் பசுக்கள் அப்படியே இறந்து விழுந்தன.
காராம் பசுவின் பாலைக் கொண்டு, இறைவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷம்.
அப்படி இருக்கையில், காராம் பசுக்களுக்கு ஏன் அந்த நிலை ஏற்பட்டது?
அகங்காரம் தான்! எவ்வளவு தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், அகங்காரம் கொண்டவர்கள் துயரத்தைச் சந்தித்து தான் ஆக வேண்டும்.
பி.என்.பரசுராமன்
விதுர நீதி!:
துன்பமும், எதிர்ப்பும் கண்டு வருந்தாதவன், கவனமாகவும், கடுமையாகவும் உழைப்பவன், சூழ்நிலை கருதி, துன்பங்களை பொறுத்துக் கொள்பவன் எவனோ, அவனே, மனிதர்களில் முதன்மையானவன்; அவன், எல்லா எதிரிகளையும் வென்று விடுவான்

No comments:

Post a Comment