ஆன்மீக கதை
மன்னர் ஒருவர் பக்திமான் என்பதால், துறவிகள் யார் வந்தாலும் விசாரணையின்றி தனது அரண்மனைக்குள் அனுமதிக்கப்படலாம் என உத்தரவிட்டிருந்தார். ஒருநாள் ஒரு துறவி வந்தார். அவர் ஏழைகளுக்கு தன்னாலான உதவி செய்பவர்.
தன்னைக் காண வரும் பணக்காரர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு தகுதியான நபர்களுக்கு உதவி செய்து வந்தார். அவரிடம் உள்ள நிதி காலியாகி விட்டதால், மன்னரிடம் நிதிபெற்று வழங்கலாம் என நினைத்தார்.
உள்ளே சென்றதும், பிரார்த்தனை அறையில் மன்னர் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். மன்னர் கண்மூடி, கைநீட்டியபடியே, இறைவா! என் நாடு இன்னும் விரிவடைய வேண்டும்.
செல்வச்செழிப்புடன் வாழ போதுமான செல்வத்தை தந்தருள வேண்டும். அதைக் கொண்டு மக்களையும் நன்றாக வாழ வைக்கும் வல்லமையைத் தர வேண்டும்,
என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
மன்னர் பிரார்த்தனையில் மூழ்கியிருந்ததால், துறவி அவரை தொந்தரவு செய்யவில்லை.பிரார்த்தனை முடிந்து அவர் துறவியை நோக்கி வரவே, துறவி ஏதும் கேட்காமல் கிளம்பிவிட்டார்.
துறவியே! தங்களைக் காக்க வைத்ததால் கோபமா! பிரார்த்தனை அத்தியாவசியமானது என்பது தங்களுக்குத் தெரியாதா! என்றார். மன்னா! அது எனக்குத் தெரியும்.
நான் உன்னிடம் பிச்சை கேட்டுத் தான் வந்தேன். நீயோ இறைவனிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய். ஒரு பிச்சைக்காரனிடம், இன்னொரு பிச்சைக்காரன் யாசகம் கேட்கலாமா? அது மட்டுமல்ல! உனக்கு படியளப்பவன் இறைவன் என நீ முழுமையாக நம்புகிறாய்.
அவன் தானே எனக்கும் படியளக்க வேண்டும். எனவே, அவன் தந்தால் ஏற்றுக் கொள்கிறேன், என்று சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டார். இறைவன் யாருக்கு என்ன படியளக்கிறானோ, அதைக் கொண்டு நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment