Thursday, November 27, 2014

செய்யும் தொழிலே தெய்வம்


செய்யும் தொழிலே தெய்வம். இவன் தெய்வ குற்றம் செய்ய மாட்டான்
திருச்செங்கோடு ஆசிரமத்தில் ஒரு நிகழ்ச்சி.
இராஜாஜி ஆசிரமத்தைச் சுற்றியுள்ள மக்களைக் கூப்பிடுகிறார். எல்லோரிடம் ஒரு சத்தியத்தைப் பெறுகிறார். நாளை முதல் குடிக்கமாட்டேன். இதுதான் அந்தச் சத்தியம்.
மது அரக்கனுக்கு எதிரானவர் ராஜாஜி. 40 குடும்பங்கள் சத்தியம் பண்ணிக் கொள்கின்றனர். மக்கள் கலைந்து அவரவர் வேலையை பார்க்கச் சென்று விடுகின்றனர்.
மறுநாள் காலை ஒரு பெண் ஆசிரமத்தை நோக்கி ஓடி வருகிறார். "எஜமான்.. என் கணவர்கிட்ட குடிக்கக் கூடாதுன்னு சத்தியம் வாங்கினீங்க. ஆனா ராத்திரியே குடிச்சுட்டு வந்து என்னை அடிச்சுப்புட்டாரு எஜமான்' முறையிட்டாள்.
"உன் கணவர் என்ன வேலை செய்கிறார்?' இது ராஜாஜி கேள்வி.
"செருப்பு தைக்கும் வேலை' இது அந்தப் பெண்மணி.
"சரி நாளைக்காலை குளிச்சுட்டு திருநீறு எல்லாம் பூசியபடி அவரை இங்கு அழைத்துவா நான் பேசிக் கொள்கிறேன்' இது ராஜாஜி.
காலைக் கதிரவன் பூமியை வெளிச்சமாக்கிக் கொண்டிருந்த நேரம். அந்தப் பெண்ணும், அவள் கணவரும் ஆசிரமம் வந்தார்கள்.
என்னப்பா குடிச்சு உன் மனைவியை அடிச்சையா? இந்தக் கேள்வியைக் கேட்டதும் தலையை ஆட்டி குற்றத்தை ஒப்புக் கொண்டு தலை கவிந்தான் அந்தத் தொழிலாளி.
"சரி வெளியில போய் உன் செருப்பை ஆசிரமத்திற்குள் எடுத்து வா' ராஜாஜி கட்டளையிட்டார்.
தூய்மையான ஆசிரமத்திற்குள் நம் காலில் போட்ட செருப்பா பதைபதைத்துப் போனான் தொழிலாளி. தயங்கினான்
. "நான் சொல்வதைச் செய்' - ராஜாஜியின் குரல் உயர்ந்தது.
சொன்னபடியே செருப்பைக் கைகளில் பிடித்தபடி நின்று இருந்தவனைப் பார்த்துத் தன் அருகில் உள்ள நாற்காலியில் வைக்கச் சொன்னார். பெரியவரின் வேண்டுகோளை ஏற்று அப்படியே செய்தான்.
"இந்தா பாருப்பா. இந்த செருப்பு மீது சத்யம் செய். இனி குடிக்கமாட்டேன் என்று' கண் கலங்கினான் அந்தத் தொழிலாளி. செருப்பின் மீது அவன் கை பட்டது சத்திய வார்த்தைகள் காற்றில் மிதந்து அங்குள்ளவர்களுக்கும் கேட்டது.
"செய்யும் தொழிலே தெய்வம். இவன் தெய்வ குற்றம் செய்ய மாட்டான். எனக்குத் தெரியும். இந்தப் பழக்கம் இன்றுடன் இவனை விட்டுப் போய்விடும். அழைத்துப் போ பெண்மணியே' என்றார் மூதறிஞர்.
அந்தத் தொழிலாளி தான் சாகும் வரை குடிக்கவில்லை

No comments:

Post a Comment