இதுவே உண்மைப் பொருள்.!
எனக்கு வெகு நாட்களாகவே ஒரு சந்தேகம் இருந்து வருகிறது. சிவனுடைய ஓம் நமச்சிவாய என்ற பஞ்சாச்சர மந்திரத்திற்கு என்ன பொருள் அது எதை குறிப்பாக சுட்டிக்காட்டுகிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தத்துவங்கள் மறைபொருள்கள் என்ற ரீதியில் இல்லாமல் எளிமையான பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். காரணம் என்னால் அவைகளை புரிந்து கொள்ள இயலாது. தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
நீங்கள் தத்துவங்கள் வேண்டாம் மறைபொருளான விளக்கங்கள் வேண்டாம் என்று சொல்வதை முற்றிலுமாக ஏற்றுகொள்கிறேன். காரணம் கடவுளும் கடவுளின் திவ்விய நாமக்களும் அவைகளுக்கு அப்பாற்பட்டவைகள். மறைபொருளான விளக்கங்கள் வித்தியா கர்வத்தை கொடுக்கும் தத்துவங்கள் என்பதோ சொல்லாடலின் மயக்கத்தை கிரக்கத்தை கொடுக்கும் கடவுள் மயக்கம் கிரக்கம் கர்வம் இவைகள் அனைத்தையும் தாண்டியவன் அல்லவா?
அம்பலத்தில் ஆடுகின்ற என் அப்பனின் சொத்துக்கள் அனைத்துமே மேதாவிகளாலும் அறிவாளிகளாலும் புரிந்து கொள்ள முடியாது. ஒரு குழந்தையை போல இப்போது தான் புதிதாக பிறந்தோம் என்ற மனநிலையில் எவன் இருக்கிறானோ அவனால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். கரையில் நின்று கடல் அலையை ரசிக்கும் கவிஞனுக்கும் கடலுக்குள் இறங்கி படகு விடும் மீனவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லாவா?
கவிஞன் கடல் அழகை கற்பனையில் மட்டுமே ரசிக்கிறான் எண்ணங்களால் மட்டுமே அனுபவிக்கிறான் மீனவன் அப்படி அல்ல. அவனுக்கு கற்பனை செய்ய தெரியாது சிந்தனை குப்பைகளும் அவனிடத்தில் கிடையாது. அறிவாளிகள் கவிஞர்களை போல பக்தர்கள் மீனவனை போல எனவே நாம் மீனவர்களாக இருப்பதே இறைவனை அறிந்து கொள்ள அறிந்து அவனோடு கலந்து ஒட்டி உறவாட சரியான வழி.
நமது இறைவழிபாடு என்பது வெறும் பிராத்தனைகளால் தொழுகை முறைகளால் உருவானது அல்ல. அண்ட சராசரங்களில் நிறைந்துள்ள ஆகர்ஷன சக்திகளோடு தொடர்பு கொண்டதாகும். எனவே இறைவனது திருப்பெயர்களும் மந்திரங்களாக அயனவெளியில் சஞ்சரிக்கின்ற அதிர்வலைகளாக இருக்கிறது.
இதன் அடிப்படையில் பஞ்சாசரத்தில் முதலாக வருகின்ற ஓம் உலகின் மூல ஒலியான பிரணவத்தை காட்டுகிறது. சி - என்பது சிவபெருமானையும், வா - என்பது அம்பாளையும், ய -என்பது மனிதர்களான ஜீவன்களையும் நம - என்பது ஜீவன்களை பற்றியுள்ள மாயை ஆணவம் கர்மம் என்ற மும்மலத்தையும் காட்டுவதாகும். அதாவது மலங்களால் சூழபட்டிருக்கின்ற நான் அவற்றிலிருந்து விடுபட அம்மையப்பனின் பாதங்களை பற்றி கொள்கிறேன் என்பதை ஓம் நமசிவாய என்ற மூல மந்திரத்தின் எளிய பொருள். இதுவே உண்மை பொருள்.
No comments:
Post a Comment