உலகில் அறத்தை நிலை நிறுத்தும் பொருட்டு, மகாவிஷ்ணு வைகுண்ட பர நிலையிலிருந்து கீழிறங்கி, தேவைப்படும் போது தேவைப்படும் இடத்தில் அவதரிப்பார் என கீதை கூறுகிறது.
அவதாரம் என்பது கீழிறங்குதல் எனப் பொருள்படும். அவதாரங்கள் இரண்டு விதமாக நிகழ்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இறைவனே பூவுலகில் அவதரிப்பது, முந்தைய கற்பங்களில் ஈஸ்வரத் தன்மை பூரணமாகப் பெற்று ஈஸ்வரனுடன் சாயுஜ்யம் பெறாமல் தனிப்பட நிற்கும் மஹாத்மாக்கள் பூர்வ ஜன்மத்தில் பூமியில் தாங்கள் விட்டுப் பிரிந்த ஜனங்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு அவதரிப்பது ஆகியவையே இரண்டு வகை அவதாரங்களாகக் கூறப்பட்டுள்ளன.
பூமியில் அவ்வப்போது மனித உருவிலோ, வேறு உருவத்திலோ பிறந்து தன் அவதார நோக்கம் முடியும் வரை இருந்து பின்னர் மறைந்து விடுவார்கள். சில சமயங்களில் ஏற்கெனவே பிறந்து நல்லவனாக வாழ்ந்து கொண்டிருப்பவனின் உடலில் தங்கி தன் அவதாரநோக்கத்தை நிறைவேற்றிய பின் வெளியேறி விடுவார்கள் எனவும் புராணங்கள் கூறுகின்றன.
க்ஷத்திரிய குலத்தைப் பூண்டோடு அழிப்பதற்காக அவதரித்த ஸ்ரீபரசுராமர் ஸ்ரீராமரைச் சந்தித்த போது இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டது: பரசுராமன் தோல்வியுற்றான். போர் முடிந்த பின் பரசுராமர் உடலிலிருந்து ஒரு ஜோதி வெளியேறி ஸ்ரீராமரின் உடலில் புகுந்தது. அதன் பிறகு பரசுராமர் ஒரு ரிஷியாகத் தன் வாழ்நாளைக் கழித்தார். அப்போது அவரை நாடி வந்தவர்களுக்கு யுத்தவித்தையைக் கற்றுத்தந்து வந்தார் என பரசுராம அவதாரத்தைப் பற்றிப் புராணங்கள் மூலம் அறிகிறோம்.
விஷ்ணு பகவானின் அவதாரங்களாக மத்ஸ்யம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனர், பரசுராமர், காகுத்தன், கிருஷ்ணர், புத்தர், இனி வரப்போகும் கல்கி என பத்து அவதாரங்களை ஸ்ரீமத் சங்கர பகவத் பாதாள் கூறியுள்ளார். இதில் பலராமரைப் பற்றி விலக்கப்பட்டுள்ளது.
வைஷ்ணவ சம்பிரதாயத்தில்
மீனோடாமை கேழலரி குறளாய் முன்னும் இராமனாய்த்
தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய் கல்கியும்" என
மீனோடாமை கேழலரி குறளாய் முன்னும் இராமனாய்த்
தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய் கல்கியும்" என
என திருமங்கையாழ்வார் குறிப்பிட்டுள்ளார். இதில் புத்தரை விலக்கி பலராமன் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவதாரங்களில் முதலில் ஏற்பட்டது மச்சாவதாரம். உயிர் வாழினங்களில் மிகப் பழைமையான காலத்தில் தோன்றிய மீன், பகவான் மீனாக அவதரித்தார். அதற்கடுத்த அவதாரம் ஜீவராசிகளின் அபிவிருத்தி அடைந்த நிலையைக் குறிப்பதான ஆமை கூர்மாவதாரம். அதற் கடுத்த வராக அவதாரத்தை தாயிடம் பாலுண்ணும் நிலையை உயிரினங்கள் எட்டி மனித இனத்தைச் சமீபித்ததாகக் கொள்ளலாம்.
மிருக சுபாவம் அதிகமாகவும், மனித சுபாவம் குறைவாகவும் உடைய அடுத்த நிலையைக் குறிக்கும் மிருக முகமும், மனித உடலும் கொண்ட நரசிம்மாவதாரம் நிகழ்ந்தது. அதன்பின்னர் மிருகத் தன்மைகள் குறைந்த நாகரிகம் அடைந்த நிலை - ஞானம் முளைவிடும் சமயம் வாமனாவதாரம் நிகழ்ந்தது.
வாமனாவதாரத்தில் மகாபலிச் சக்ரவர்த்தியை பாதாளத்தில் அழுத்தி, அதனை ஆளும்படி கூறி மகாபலியின் வாசற் காப்போனாக பகவான் இருந்ததாகவும். கூறப்படுகிறது. மகாபலி அகங்காரமே உருவானவன். அவன் ஈகைக் குணமுள்ளவனாகக் கூறப்பட்டிருந்தாலும் அவனுடைய ஈகைக்குணம் அகங்காரம், கர்வம் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே இருந்தது. அகங்காரத்தை ஒடுக்க ஞானம் ஒன்றினால் தான் முடியும். ஆகவேதான், அகங்காரமாகிய மகாபலியை எழவிடாமல் செய்ய ஞானமாகிய வாமனர் வாயிற் காப்போனாக இருந்தார்.
குரோதம் ஓய்வடைந்து மனம் சற்று தெளிவடைந்த நிலையில் மனித வர்க்கம் சிறிது மாற்றம் பெற்றது. மனித வர்க்கத்தில் க்ஷத்திரியர் ரஜோகுணம் நிரம்பியவர்களாக இருந்தார்கள். எல்லா விதமான விஷய நுகர்ச்சியிலும் எல்லை மீறியவர்களாகக் காணப்பட்டார்கள். ரஜோ குணத்தின் பிரவாகத்தை அடக்க க்ஷத்திரியர்களை அழிக்க நிகழ்ந்ததே பரசுராம அவதாரம். ஸ்ரீஇராமாவதாரம். ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ஆகியவற்றில் தங்களுடைய மற்ற கடமைகளுடன் இதை ஒன்றாகக் கருதி ஈடுபட்டனர் எனப்படுகிறது.
21 தலைமுறை க்ஷத்திரியர்களைப் பரசுராமன் கொன்றதாக வரலாறு. ஆனால் பரசுராமன் காலத்திற்குப் பின்னும் க்ஷத்திரியர்கள் இருந்திருக்கின்றனர் என்பதையும், அவர்களுக்குப் பரசுராமனே யுத்த வித்தைகளைக் கற்றுத்தந்தார் எனவும் புராணங்கள் மூலம் அறிகிறோம். க்ஷத்திரிய தர்மம் ரக்ஷணம் என்பதை மறந்து பலமும், ஆளுகையும் உடையவர்களாகத் தங்களைக் கருதி வரம்பு மீறிய செயலில் ஈடுபட்டனர்.
பரசுராம அவதாரத்தில் க்ஷத்திரியர்களின் இந்த மனநிலையை மாற்றி நல்வழிப்படுத்தும் முயற்சியில் பகவான் ஈடுபட்டார். ஸ்மிருதிகளில் கூறப்பட்ட உபாயங்களைக் கையாண்டார். அவருடைய உபதேசங்கள் பலனளிக்காத நிலையில், அவர் தண்டத்தைக் கையில் எடுக்க வேண்டியதாயிற்று. அவர்கள் கொல்லப்பட்டனர்.
க்ஷத்திரியர்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கை முழுவதும் பரசுராமாவதாரத்தில் நிறேவேறவில்லை. அடுத்து ஸ்ரீஇராமாவதாரம் நிகழ்ந்தது. ஸ்ரீஇராமர் ஒரு க்ஷத்திரியன் எப்படி இருக்க வேண்டும் என்பதை தர்மத்தை முறையாகப் பின்பற்றி வாழ்ந்து காட்டி உபதேசித்தார் இராமவதார நிகழ்ச்சிகளில் சீதையை மணந்து கொண்டது, வனவாசம், சீதையை இழந்தது, மீண்டும் சீதையை அடைந்தது போன்ற நிகழ்வுகள் மனித இனம் சாத்விகக் குணம் பெற்றதைக் குறிக்கிறது. மேலான மன நிலையை அடைவது என்பது தியான நிலை பெறுவது என வனவாச நிகழ்வின் மூலம் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இராவணன் சீதையின் மேல் மோகம் கொண்டு அவளைக் கடத்திச் செல்வது மனிதன் தன் நிலையிலிருந்து கீழறங்குவதைக் காட்டுகிறது. உயர்நிலையிலிருந்து தவறிய காரணத்தினாலேயே இராவணனும், அவனது வம்சமும் அழிய நேர்ந்தது.
மனித வர்க்கம் பூரணமாக உயர்நிலை பெற்றுப் பிரகாசிக்காத நிலையில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தது. ஸ்ரீ இராமர் போதித்த உபதேசங்களினாலும் க்ஷத்திரியர்கள் முழுவதுமாக மாறவில்லை. தீயவர்களாகவே இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர் குருக்ஷேத்திரப் போரில் அர்ச்சுனனைக் கொண்டு தீயோரை அழித்தார். தர்மத்தை தருமரைக் கொண்டு போதித்தார். ரஜோ குணத்தை மேன்மேலும் வளராமல் தடுக்கவே பரசுராம, இராம, கிருஷ்ண அவதாரங்கள் நிகழ்ந்தன.
ரஜோகுணம் கட்டுப்படுத்தப்பட்டு மனித வர்க்கம் சற்றே உயர்ந்த நிலை அடைந்த போது ஏற்பட்டதே புத்தாவதாரம். யோகியினுடைய நிர்விகல்ப சமாதி நிலையைக் குறிப்பதாக இந்த அவதாரம் அமைந்துள்ளது. மனிதனுடைய ஆத்ம தத்துவம் விரிவடைந்து, கீழான தத்துவங்களையும் தூய்மை பெறச் செய்து உயர்த்தியது இந்த அவதாரம். இனி வரப்போகும் கல்கி அவதாரத்தில் மனித வர்க்கமே முழுமையடைந்து பூர்ணத்துவம் பெற்று விடும். விடுபட்டவர் எவரும் இல்லை என்ற நிலையில் மனித இனம் முழுமையும் ஆத்ம மலர்ச்சி பூர்த்தி அடைந்து ஞானிகளாய், தெய்வாம்சம் நிறைந்தவராய் விளங்குவர்.
தாம் உண்டாக்கிய தர்மத்தைத் தாமே வந்து காக்கவே பகவான் அவதாரங்கள் எடுத்தார். அவதாரங்களில் அவர் புரிந்த லீலைகளும், அற்புதங்களும் அநேகம். உலகிலுள்ள ஜீவராசிகளுக்கு நலம் புரியவே பரமபதத்திலிருந்து பூமிக்கு வருபவர் பகவான். அந்த பகவானின் மகிமையை உணர்ந்து அவன் நிகழ்த்திய அற்புதங்களில் லயித்து நாம் பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment