Tuesday, December 25, 2012

மனிதனுக்குள்ள அகப்பகை, புறப்பகைகளை நீக்கி, பகைவனையும் திருத்தி ஆட்கொண்டு அருள் பாலிக்கும் கருணைக்கடல் முருகன்

றத்தை ஒழித்து அறத்தை நிலைநாட்டி உலகை உய்விக்க வந்தவன் சிவகுமாரனான முருகப் பெருமான்.

மனிதனுக்குள்ள அகப்பகை, புறப்பகைகளை நீக்கி, பகைவனையும் திருத்தி ஆட்கொண்டு அருள் பாலிக்கும் கருணைக்கடல் முருகன். முருகப் பெருமானின் வாகனமாகிய மயில் ஆணவத்தைக் குறிக்கும். பிரணவ வடிவமாகத் திகழ்பவன் கந்தன். பிரணவம் என்பதன் பொருள், சிறந்த- புதிய ஆற்றலைத் தருவது என்பதே. ஆணவத்தை அழித்த பின்னரே புதிய ஆற்றல் பிறக்கும். ஆணவ மலம் கொண்ட மயிலின் ஆணவத்தை நீக்கி, அதன்மீது ஆரோகணித்திருப்பவன் முருகன்.


முருகனின் வாகனமாகிய மயில், நாகத்தை மிதித்துக்கொண்டு அதன் விஷம் வெளிப்பட முடியாமல் செய்கிறது. விஷத்தினை உமிழாமல் இருக்கும் நாகம் அவ்விஷத்தினையே பிரகாசமுள்ள மாணிக்கமாக மாற்றுவதுபோல, ஐம்பொறிகளை அடக்கி ஆள்பவன் உடலினுள் ஒளிரும் ஆத்மாவை அறிந்து பேரானந்தம் கொள்கிறான்.

மனிதனைப் பாவம் செய்யத் தூண்டும் காம, குரோத, லோப, மத, மாத்சர்யம் போன்ற அகப்பகைவர்களாகிய விஷத்தை அடக்க முருகப் பெருமானின் திருவருள் கிட்ட வேண்டும் என்பதையே அவரது வாகனம் உணர்த்துகிறது.

ஒருசமயம் தட்சன் சிவபெருமானை அழைக்காமல் யாகம் நடத்தினான். சிவபெருமான் அழைக்கப்படாத யாகத்திற்குச் செல்லக்கூடாது என்பதை உணராமல், இந்திரனும் பிற தேவர்களும் அதில் கலந்து கொண்டனர். அகப்பகைகளை அடக்காமல் அவை காட்டிய வழியில் சென்று செய்யக் கூடாததைச் செய்தனர். அதன் காரணமாக சூரபன்மன் வடிவில் புறப்பகைவன் தோன்றி அவர்களைத் துன்புறுத்தினான். அசுரனால் துன்புறுத்தப்பட்டபோது தங்கள் தவறை உணர்ந்த தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்தனர்.

சிவபெருமான் தேவர்களைக் காக்க முருகப் பெருமானைத் தோற்றுவித்தார். சூரபன்மனை அழிக்க முருகப் பெருமான் புறப் பட்டார். சூரபன்மனின் அசுரப் படையுடன் போரிட்டு அவர்களை அழித்தார்.

தனித்து விடப்பட்ட சூரபன்மன் முருகப் பெருமானை எதிர்த்துப் போரிட்டான். பல மாய வடிவங்கள் எடுத்து எதிர்த்தான். முருகப் பெருமான் அவ்வடிவங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு அசுரனுக்கு விசுவரூப தரிசனம் அருளினார். அப்போதும் அசுரனின் ஆணவம் அடங்கவில்லை.

சக்ரவாகப் பறவையாக உருவெடுத்து விண்ணில் பறக்க ஆரம்பித்தான். இந்திரன் மயிலாக மாறி முருகப் பெருமானைச் சுமந்துகொண்டு விண்ணில் பறந்தான். முருகப் பெருமான் இந்திர மயில்மீதமர்ந்து அசுரனைத் துரத்திச் சென்று அவனுடன் போரிட்டார். அவன் மார்பைப் பிளந்து வருமாறு தன் வேற்படையைச் செலுத்தினார்.

சூரபன்மன் பெரிய மாமரமாக மாறிக் கடல் நடுவில் நின்றான். வேற்படை மாமரத்தைத் தாக்கியதும் மரம் பற்றி எரிந்தது. சூரன் அழியவில்லை. முருகப் பெருமானின் சக்தி ஆயுதம் சூரன் மார்பைப் பிளந்து இரு கூறாக்கியது. ஒரு பாதி மயிலாகவும், மற்றொரு பாதி சேவலாகவும் மாறின. அப்போதும் அவன் ஆணவம் அழியவில்லை. முருகப் பெருமானை எதிர்த்துப் போரிட்டான்.

அந்த நிலையில் முருகப் பெருமான் அசுரன்மீது தன் அருட்பார்வையைச் செலுத்தினார். அவன் ஆணவம், பகை உணர்வு போன்றவை நீங்கியவனாய், ஞானம் பெற்று முருகப் பெருமானின் வாகனமாகும் தகுதியைப் பெற்றான்.

முருகப் பெருமான் இந்திர மயிலை விட்டிறங்கி அசுரமயில்மீது ஆரோகணித்தார். சேவலைத் தன் கொடிமீதமர்ந்து கூவுமாறு பணித்தார். சேவலும் மயிலும் முருகன் அருள்பெற்று அவனருகில் இருக்கும் பேறு பெற்றன.

நண்பன்- பகைவன் என்ற பாகுபாடின்றி, உலக உயிர்களிடம் வேற்றுமை பாராட்டாமல் அருள் பாலிப்பவர் முருகப் பெருமான். அகப்பகைவர்களை அடக்கி, உலக உயிர்கள் அனைத்துடனும் சமநோக்குடையவர்களாய் வாழவேண்டும் என்பதையே முருகப் பெருமானின் வாகனங்கள் உணர்த்துகின்றன.

No comments:

Post a Comment