பரத கண்டத்தில் செல்வச் செழிப்புடன் ஒரு தேசம் சிறந்து விளங்கியது. மத்ர நாடே அந்த தேசமாகும். அந்த நாட்டை அஸ்வபதி என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டுவந்தார்.
அஸ்வபதி உத்தமன். அவனுக்கு ஒரு வருத்தம் இருந்தது. நல்ல முறையில் நாட்டை ஆண்டு வந்தாலும் தனக்கென்று வாரிசு இல்லையே என்பதே அவனுடைய வருத்தம். பல புண்ணியத் தீர்த்தங்களுக்குச் சென்று நீராடி, கடுமையான விரதங்களையும் மேற்கொண்டான். கடைசியில் குழந்தைப் பேற்றிற்காகப் பதினெட்டு ஆண்டுகள் சாவித்திரி தேவியை வேண்டி வணங்கி வந்தான். சாவித்திரி மந்திரத்தைச் சொல்லி இலட்சம் ஆகுதிகளைச் செய்தான். பதினெட்டாம் ஆண்டில் அஸ்வபதியின் விரதத்தில் சாவித்திரி தேவி மகிழ்ந்து அவன் முன் தோன்றினாள். ‘அஸ்வபதியே! உனக்கு வேண்டியது என்ன? கேள். தருகிறேன்’ என்றாள்.
உடனே அஸ்வபதி, “தேவி! என் வம்சம் தழைக்கும் பொருட்டு, குழந்தைகள் பல பிறக்க வேண்டும்” என்றான். அஸ்வபதியின் எதிர்காலத்தை அறிந்திருந்த சாவித்திரி தேவி, ‘அரசே! உனக்கு ஒரு அழகானபெண் குழந்தை பிறக்கும்: இதற்கு மேல் எதையும் கேட்காதே...! பிரம்ம தேவர் உனக்கு எழுதி வைத்திருப்பது போல் நடக்கும்” என்று கூறி மறைந்தாள்.
சாவித்திரி தேவி கூறியதைப் போன்று, அஸ்வபதியின் மனைவிக்கு அழகும் அறிவுமுடைய பெண் குழந்தை பிறந்தது. சாவித்திரி தேவியின் அருளால் குழந்தை பிறந்தமையால் அந்தணர்கள் குழந்தைக்குச் ‘சாவித்திரி’ என்று பெயரிட்டனர். சாவித்திரி யௌவனமாக வளர்ந்தாள் தேவகன்னிகை போன்று இருந்தாள். திருமணத்திற்குரிய வயதானது. யாரும் பெண் கேட்டு வரவில்லை.
அஸ்வபதி சாவித்திரியை அழைத்தான். மகளை நோக்கி, “சாவித்திரி! உனக்குரிய கணவனை நீயே தேர்ந்தெடுத்தாயானால் கூட; அவனுக்கு உன்னைத் திருமணம் செய்து தருகிறேன்” என்று கூறினான். சாவித்திரி தந்தையின் சொற்களைக் கேட்டு வெட்கமடைந்தாள்; இருப்பினும், அஸ்வபதியின் கட்டளையை மீறவில்லை கணவனுக்காகக் காத்திருந்தாள்.
சாவித்திரி தவசிகளை வணங்கி அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றாள். அந்தணர்களுக்குப் பொன்னையும் பொருளையும் தானமாக வழங்கினாள். ஒரு சமயம் ஒரு தபோவனத்தில் சத்தியவான் என்று ஒருவன் இருப்பதை அறிந்தாள். அவன் அழகுடன் குணவானுமாய் இருப்பதைக் கேட்டறிந்தாள். அவனைத் தன் கணவனாக வரித்தாள் தந்தையிடம் திரும்பி வந்து சத்தியவானைப் பற்றிக் கூறினாள்.
அப்போது நாரதர் அஸ்வபதியின் சபைக்கு வந்தார். நாரதரை அஸ்வபதி முறைப்படி வரவேற்று வணங்கினான். சாவித்திரியும் நாரதரை முறையாகக் கீழே விழுந்து வணங்கினாள். நாரதர் சாவித்திரியை வாழ்த்தி, “நீ எங்கே சென்று வருகிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு சாவித்திரி, “மகரிஷியே...! நான் தபோவனத்தில் சத்தியவான் என்ற வாலிபனனைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அவனுடைய தந்தை தியுமத்சேனன். அவர் சால்வநாட்டை ஆண்டு வந்தார். சத்தியவான் பிறந்த பின் திடீரென்று தியுமத்சேனனின் கண்ப் பார்வை இழந்தன. இதை அறிந்து பகைவர்கள் தியுமத்சேனனின் மீது படையெடுத்து நாட்டைக் கைப்பற்றினர். மன்னனோ தன் மனைவி, மகனுடன் காட்டிற்கு வந்து தவநெறிப்படி வாழ்ந்து வருகிறார். ஆகவே அவருடைய மகனையே நான் மணந்து கொள்ள விரும்புகிறேன்” என்றாள்.
அதைக்கேட்ட நாரதர் வருத்தமடைந்தார். “அரசே! உன் மகள் அறியாமல் தவறு செய்துவிட்டாள். தியுமத்சேனனும் சத்தியவானும் சத்தியத்தையே பேசி வருபவர்கள். சத்தியவான் குதிரை ஏற்றத்தில் சிறந்தவன்; சித்திரம் தீட்டுவதில் வல்லவன். அதனால் அவனுக்குச் ‘சித்திரசேனன்’ என்ற பெயருமுண்டு; சூரியன் போல அழகு உடையவன்; பிரகஸ்பதி போன்று அறிவும், இந்திரனைப் போன்று வீரமும், பூமியைப் போன்று பொறுமையும் உடையவன்” ஆனால்....
“மகரிஷியே...! எதுவாக இருந்தாலும் தயங்காமல் கூறுங்கள்” என்றான் அஸ்வபதி. நாரதர் எதையும் மறைக்க விரும்பவில்லை. “அஸ்வபதியே...! கேள். சத்தியவான் இன்றிலிருந்து ஓராண்டு முடிந்தவுடன் இறந்து விடுவான். அற்ப ஆயுள் உடையவன்” என்று கூறினார்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சாவித்திரி தெளிவாகப் பேச ஆரம்பித்தாள். “பெண்ணிற்குத் திருமணம் என்பது ஒரு முறைதான். நான் சத்தியவானை மனத்தால் கணவனாக வரித்து விட்டேன். ஆயுள் உள்ளவனோ இல்லாதவனோ நான் அதை ஒரு பொருட்டாக நினைக்க வில்லை” என்றாள்.
சாவித்திரியின் பேச்சைக் கேட்ட நாரதர், “அஸ்வபதி! உன் மகளைச் சத்தியவானுக்கே மணம் முடிப்பாயாக!” என்று கூறி ஆசி வழங்கினார். உடனே, அங்கிருந்து மறைந்தும் விட்டார். அஸ்வபதி குரு நாரதரின் வாக்கைத் தட்ட விரும்பவில்லை.
அஸ்வபதி அந்தணர்களையும் வேதவிற்பன்னர்களையும், தன் மகள் சாவித்திரியையும் அழைத்துக் கொண்டு தியுமத்சேனன் இருக்கும் இடத்தை அடைந்தான். மன்னனைக் கண்டு வணங்கி, தன்னை அறிமுகம் செய்து கொண்டான். தான் தன் மகள் சாவித்திரிக்கு சத்தியவானை மணம் முடிக்க விரும்புவதாகத் தெரிவித்தான்.
சத்தியவானின் தந்தை தியுமத்சேனன் திருமணம் பேச வந்துள்ள அஸ்வபதியிடம், “நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள்; தர்மமும் நியமமும் தவறாமல் காட்டில் வசிப்பவர்கள்; அரண்மனையில் வாழ்ந்த தங்கள் மகள் இக்காட்டில் எப்படி வாழ முடியும்?” என்றான்.
அதற்கு அஸ்வபதி; “இராஜரிஷியே! என் மகள் சாவித்திரி இன்ப துன்பத்தைச் சமமாகக் கருதுபவள். ஆகையால் கவலை வேண்டாம்) என்றான். சாவித்திரியைத் தன் மகன் சத்தியவானுக்கு மணம் முடிக்க தியுமத்சேனன் ஒப்புக் கொண்டான்.
சத்தியவான் - சாவித்திரியின் திருமணம் முறையாக அந்தணர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. அஸ்வபதி தன் நாட்டிற்குத் திரும்பினான். சாவித்திரி ஆஸ்ரம தர்மத்தை மேற்கொண்டாள். மரவுரி ஆடை அணிந்து கொண்டாள். அடக்கமும் பணிவும் கொண்டவளாக நடந்துகொண்டு தன் இனிமையான பேச்சாலும் செயலாலும் அனைவரையும் மகிழச் செய்தாள்.
தன் மாமியாரும் மாமனாரும் மகிழும்படியாகப் பணிவிடைகளைச் செய்தாள். சத்தியவான் மகிழக் கூடிய வகையில் வேலைகளைச் செய்தாள். நாள்கள் உருண்டோடின. நாரதர் கூறியிருந்த செய்திகள் மனத்தில் நிழலாடின சத்தியவான் இறக்க வேண்டிய ‘நாள்’ வந்து விட்டதைச் சாவித்திரி அறிந்து கொண்டாள்.
ஆகையால், சாவித்திரி மூன்று நாள்கள் கடுமையான விரதம் மேற்கொண்டாள். இரவு பகல் தூங்காமல் இருந்தாள். நாரதர் குறிப்பிட்ட நாளும் வந்தது. காட்டில் இருந்த தவசிகளையும் அந்தணர்களையும், வயதான தன் மாமனார் மாமியாரையும் வணங்கி நல்லாசிகளைப் பெற்றாள் அப்போது தியுமத்சேனன், “சாவித்திரி! உன் விரதம் தான் முடிந்து விட்டதே... சாப்பிடு” என்றான். “தந்தையே! நான் இப்போது சாப்பிட முடியாது. சூரியன் மறைவிற்குப் பின்தான் சாப்பிடமுடியும்” என்றாள்.
இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சத்தியவான் கோடாலியை எடுத்துக் கொண்டு காட்டுக்குப் புறப்பட்டான். சத்தியவான் புறப்படுவதைக் கண்ட சாவித்திரி, “ஐயனே! தங்களோடு இன்று நானும் வர விரும்புகிறேன்” என்றாள். உடனே, சத்தியவான் அவளை நோக்கி, “உன்னால் காட்டிற்குள் நடந்து வர முடியாது” அதுவும் நீ விரதம் வேறு மேற்கொண்டிருந்தாய்; உன் உபவாசத்தை இன்னும் முடிக்கவில்லை; நடந்து வருவது கடினமாக இருக்கும்; அதனால் வரவேண்டாம்” என்றான்.
“என் உபவாசமும் விரதமுமே எனக்குப் பெரும் பலமாக உள்ளது. என்னைத் தடுக்காமல் அழைத்துச் செல்லுங்கள்” என்று தெளிவாக உறுதியுடன் கேட்டுக் கொண்டாள் சாவித்திரி. சத்தியவான் அவளுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டான். “சாவித்திரி! நீ என் தாய் தந்தையின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு வா” என்றான்.
சாவித்திரி தன் மாமியார், மாமனாரிடம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவித்தாள். திருமணம் முடிந்தபின் இதுவரை தனக்கு என்று எதுவும் சாவித்திரி கேட்டதில்லை. அதனால் தியுமத்சேனனும் அவனது மனைவியும் தம் மகன் சத்தியவானுடன் மருமகள் சாவித்திரி காட்டிற்குச் செல்ல அனுமதியளித்தனர்.
மகிழ்வோடு செல்வது போல முகத்தை வைத்துக் கொண்டு சத்தியவானுடன் புறப்பட்டாள் சாவித்திரி. நாரதர் கூறியதை மனத்தில் கொண்டவளாகக் கவனத்தோடும் எச்சரிக்கையாகவும் இயற்கை அழகைக் கண்டு ரசித்தவளாக, நடந்தாள். சத்தியவான் பழங்களைப் பறித்துக் கூடையில் நிரப்பினான். நீண்ட நேரம் விறகுகளைப் பிளந்தான். அதனால் களைப்படைந்தான். அவனுக்குத் தலைவலியும் ஏற்பட்டது. ஓய்வெடுக்க விரும்புவதாகக் கூறினான். மேலும், “என்னை யாரோ கட்டி இழுப்பதாக உணர்கிறேன்” என்றான். நாரதர் கூறியநேரம் வந்து விட்டது என்பதை அறிந்து கொண்ட சாவித்திரி, தன் மடியில் தலைவைத்துப் படுக்குமாறு கூறி, தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள். சில நிமிடங்களில் யமனும் அவ்விடத்திற்குப் பாசக்கயிற்றுடன் வந்தான். சூரியனைப் போன்று ஒளி பொருந்தியவனாய் சிவந்த ஆடை அணிந்திருந்தான்.
சாவித்திரி அவனைக் கண்டாள். கைகளைக் குவித்து வணங்கி அவனிடம் பேச ஆரம்பித்தாள். “தேவரீர்! தாங்கள் யார்?” என்றாள். தர்மபத்தினியாய், பதிவிரதையாய் விளங்கும் சாவித்திரியே! யமதர்மராஜன் நான். உன் கணவன் சத்தியவானின் ஆயுள் முடிந்து விட்டது. ஆகையால் அவன் உயிரைக் கவர்ந்து செல்ல வந்துள்ளேன். என்று கூறிக் கொண்டே சத்தியவானின் உயிரைப் பாசக்கயிற்றால் கட்டி எடுத்துக் கொண்டு தெற்கு திசை நோக்கிச் சென்றான். சத்தியவானின் உடல் அசைவற்று மடியில் கிடந்தது. அவன் தலையைத் தரையில் வைத்துவிட்டு யமதர்மராஜனோடு நடந்தாள்.
“பெண்ணே! நீ வரவேண்டிய தூரம் வரை வந்து விட்டாய். திரும்பிப் போய் உன் கணவனுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கடன்களைச் செய்” என்று யமதர்மன் கூறினான். சாவித்திரி சற்றும் தாமதியாமல் பேச ஆரம்பித்தாள். “தர்மராஜனே! என் கணவன் கொண்டு செல்லப்படுகின்ற இடத்துக்கு நான் செல்ல வேண்டும்.” தர்மம், சத்தியம், தவம், பக்தி, அன்பு, தங்களின் கிருபை ஆகியவற்றால் இத்தனை தூரம் வந்தேன். உலகில் ஏழு வகையான நட்பு உள்ளது. அதில் சாதுக்களோடு தவசிகளோடு இருந்தாலும் கூட தர்மமே ஆத்ம ஞானத்திற்குத் தலைமையானது. பிரம்மச்சரியம், சந்நியாசம் யாரும் விரும்புவதில்லை” என்றாள். சாவித்திரியின் பேச்சைக் கேட்ட யமதர்மன் மகிழ்ந்து, “சாவித்திரி! சத்தியவானின் உயிரைத் தவிர ஒரு வரத்தை கேள்” என்றான்.
“தேவரீர்! என் மாமனார் கண் பார்வை பெறவேண்டும் பலமுள்ளவராக விளங்கவேண்டும் இதுவே நான் கேட்கும் வரம்’ என்றாள் சாவித்திரி. யமதர்மன் “வரத்தைத் தந்தேன்” என்று கூறி, “நீ திரும்பிச் சென்று விடு!” என்றான். சாவித்திரியோ சற்றும் சளைக்காமல் “என் கணவன் செல்லும் இடத்திற்குச் செல்வதால் களைப்பு இல்லை; நான் கூறும் தர்மத்தைக் கேளும்; சாதுக்களுடன் நட்புக் கொள்வது வீணாகாது” என்றாள். சாவித்திரியின் தர்ம சிந்தனை அவனைக் கவர்ந்தது மேலும் நான்கு வரங்ளைக் கொடுத்தான் யமதர்மன்.
முதலில் சாவித்திரி கேட்டது தன் மாமனார் கண் பார்வையடைந்து பலத்தோடு வாழவேண்டும் என்பதாம். இரண்டாவதாக மாமனார் இழந்த நாட்டைப் பெற்று ஆட்சி செய்ய வேண்டும். மூன்றாவதாகத் தன் தந்தை அஸ்வபதி நூறு பிள்ளைகளைப் பெற்று நீண்ட ஆண்டுகள் வாழவேண்டும். நான்காவதாக தனக்கும் சத்தியவானுக்கும் குலம்தழைக்க நூறுப் பிள்ளைகள் பிறந்து நலமாக வாழ வேண்டும். ஐந்தாவதாக, சாதுக்கள் வரத்தைக் கொடுத்துவிட்டு ஏன் கொடுத்தோம் என்று வருத்தப்படமாட்டார்கள். முக்காலத்திற்குமுரிய செயல்களை நடத்துபவர்கள் சாதுக்களே. ஆகையால் சத்தியவானுக்கும் தனக்கும் குலம் தழைக்க நூறு பிள்ளைகள் பிறக்க வேண்டுமானால் தன் கணவர் பிழைக்க வேண்டும், இதுவே நான் வேண்டும் வ”ரம் என்றாள். முதல் நான்கு வரங்களையும் கொடுத்த யமதர்மன் ஐந்தாவதாக அவள் கேட்ட வரத்தைத் தந்தேன் என்று கூறிவிட்டு உடனே திடுக்கிட்டான். இருந்தாலும் சாவித்திரியின் கூர்மையான புத்தியையும், பதிவிரதா தர்மத்தையும் பாராட்டி சத்தியவானின் கழுத்தில் இருந்த பாசத்தை அவிழ்த்து விட்டான்.
சாவித்திரி யமதர்மன் சென்றபின் தன் கணவனின் உடல் இருக்கும் இடத்தைச் சென்றடைந்தாள். கணவனின் தலையை மடிமீது வைத்துக் கொண்டாள். அப்போது அவன் கண் விழித்துப் பார்த்து எழுந்து உட்கார்ந்தான். “நீண்ட நேரம் ஆகிவிட்டதே! என்னை ஏன் எழுப்ப வில்லை? என்னை இழுத்துச் சென்ற ஆடவன் எங்கே?” என்று வரிசையாகக் கேள்விகளைக் கேட்டான் சத்தியவான்.
சாவித்திரி தன் கணவனைப் பார்த்து “அன்பானவரே! யமதர்மன் சென்று விட்டான். எங்கும் இருள் சூழ ஆரம்பித்து விட்டது. ஆசிரமத்தில் பெற்றோர் காத்திருப்பர். நாம் புறப்படலாம். நாளை உங்களுக்குச் சொல்கிறேன்” என்றாள். இருவரும் பழங்களையும் விறகுகளையும் எடுத்துக் கொண்டு நடந்தனர்.
தியுமத்சேனனும் அவனது மனைவியும் மகனையும் மருமகளையும் காணாமல் பல இடங்களில் தேடினர். என்ன நடந்ததோ என்று அஞ்சினர். திடீரென்று தியுமத்சேனன் கண் பார்வையைப் பெற்றான். ஆசிரமத்தையும் சுற்றியுள்ள இடங்களையும் பார்த்தான்; கண் பார்வை கிடைத்தாலும் மகன் மருமகளைக் காணாததால் சோகம் குடி கொண்டது. ஆசிரமவாசிகள் விஷயமறிந்து அவர்களும் தேடினர். அப்போது சத்தியவானும் சாவித்திரியும் ஆசிரமத்தை வந்தடைந்தனர். அவர்களை ஆரத்தழுவி அணைத்து பெற்றோர் மகிழ்ந்தனர். நீண்ட நேரம் வராமல் சத்தியவானும் சாவித்திரியும் இருந்ததற்கான காரணத்தைக் கேட்டனர்.
சத்தியவான் பேச ஆரம்பித்தான். “தந்தையே! பழங்களைச் சேகரித்தபின் விறகுகளைப் பிளந்தேன். அதனால் களைப்படைந்தேன். தலைவலியும் சாவித்திரியின் மடியில் படுத்தேன் கருநிறமுடைய ஒருவன் என்னைக் கட்டி இழுத்துக் கொண்டு போவதை உணர்ந்தேன். அப்படியே உறங்கிப் போய்விட்டேன்” என்றான். ஆசிரமத்தில் இருந்தோர் சாவித்திரியைப் பார்த்தனர்.
தன் ஞானத்தால் எல்லாவற்றையும் உணர்ந்து கொண்ட கௌதமரிஷி சாவித்திரியைப் பார்த்து, “மகளே! நடந்த நிகழ்ச்சியை விரிவாகச் சொல்” என்றார். சாவித்திரி அனைவரையும் வணங்கி நடந்த நிகழ்ச்சியை விவரித்தாள். அவளது உத்தம குணத்தை எண்ணி மகிழ்ந்தனர்; பாராட்டினர்; துதித்தனர். தியுமத்சேனனைப் புகழ்ந்தனர்; “சத்தியவான் செய்த பெரும்பாக்கியம்” என்றனர். பிறகு அவரவர் இடத்திற்குச் சென்றனர். இரவு சுகமாய்க் கழிந்தது. பொழுது புலர்ந்தது. சால்வ நாட்டைச் சார்ந்த மக்கள் ஒன்று கூடி காட்டிற்கு வந்து தங்கள் மன்னன் தியுமத்சேனனை வணங்கி, அவன் பார்வை பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். நாட்டிற்கு வந்து ஆட்சி செய்யுமாறு வேண்டினர். அதனை ஏற்ற தியுமத்சேனன், தன் மனைவி, மகன் சத்தியவான், சாவித்திரியோடு காட்டில் உள்ளோரை வணங்கி விடைபெற்றான். நாட்டிற்குச் சென்று நல்ல முறையில் ஆட்சி செய்தான். சத்தியவானும் சாவித்திரியும் நூறு பிள்ளைகளைப் பெற்று நானூறு ஆண்டுகள் சுகமாய் வாழ்ந்தனர்.
இப்படிச் சிறந்து வாழ்ந்த பதிவிரதை சாவித்திரி, யமதர்மனோடு அவன் பின்னே நடந்து சென்று, ஏழு அடிகள் கடந்த பின் அவனோடு பேச ஆரம்பித்தாள். தத்துவங்களை அறிந்த மகாமுனிவர்கள் “ஏழு அடிகள் ஒன்றாகக் கடந்தவர்கள் மாறாத அன்பான நட்பு அடைகிறார்கள்” என்று கூறிய அந்த உரிமையில் தர்மபத்தினியாய் விளங்கி வரங்களைப் பெற்றாள் சாவித்திரி என்பதை அறிகிறோம்.
ஏழு அடிகள் சேர்ந்து நடப்பது என்பது இன்றும் திருமணங்களில் நடக்கின்ற முக்கியமான சடங்காகும். கல்யாண பந்தம் தாலி கட்டுவது என்பது மட்டும் முற்றுப் பெறுவதில்லை ‘ஸப்தபதி’ என்ற ஏழு அடி நடப்பதால்தான் முடிகிறது என்பது இந்து மதத்தின் ஐதீகமாகும்.
No comments:
Post a Comment