மந்திரம் பாடிய திருமூலர், சங்கப்புலவர் கபிலர், நக்கீரர், சமய முனிவர்களான சம்பந்தர், அப்பர், மணிவாசகர், தெய்வக் கவிஞர்களான வள்ளுவர், கம்பர், சேக்கிழார், பரஞ்சோதி முனிவர் முதலானோர் எல்லாம் நடராஜப் பெருமானை பாடிப் பாடித் துதித்திருக்கிறார்கள். அப்படிப் பாடித் துதிப்பதற்குரியவனாயிருந்த பெருமானின் பெருவிழாக்களில் ஒன்று திருவாதிரை.
நட்சத்திரங்கள் இருபத்தேழில் "திரு' என்ற அடைமொழியுடன் இரண்டு நட்சத்திரங்களே உள்ளன. அவை திருவாதிரை, திருவோணம் என்பன.
திருவாதிரை சிவபெருமானுக்கு உகந்த நாள்; திருவோணம் திருமாலுக்கு சிறந்த நாள். "மாதங்களுள் மார்கழியாக இருக்கிறேன்' என்று கூறுகிறான் கண்ணன். இந்த மாதமே தேவர்கள் நாளில் வைகறைப் பொழுதாகக் கருதப்படுகிறது.
அத்தகைய மார்கழி மாதத்தில், பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நாள் திருவாதிரைத் திருவிழாவிற்குரிய நாள்.
திருமுறைகளில் பல இடங்களில் "ஆதிரையன்' என்று சிவபெருமானைப் பற்றி சொல்லப்படுகிறது. திருஞான சம்பந்தப் பெருமான் பூம்பாவைப் பதிகத்தில், "கார்திருசோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்' என்று பாடிப் புகழ்ந்திருக்கிறார்.
திருவாதிரை விழா பொதுவாக விநாயகப் பெருமானுக்கும், சிறப்பாக நடராஜப் பெருமானுக்கும் நடைபெறுகிறது. சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரையன்று திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அத்திருநாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தென்னாட்டுச் சிவனை- கூத்தப் பெருமானைக் கண்டு வழிபடுகின்றனர். குனித்த புருவத்தையும் குமிண் சிரிப்பையும் விரித்த சடையையும் பவளமேனியையும் எடுத்த பொற்பாதத்தையும் கண்டு களிக்கின்றனர்.
இறைவன் உமையம்மை காணத் திருக்கூத்து இயற்றும் காரணத்தால்தான் இவ்வண்ட சராசரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகில் அறிவுள்ள பொருட்கள் வினைப்போகம் துய்க்கின்றன. அவற்றிற்கு அறிவில்லாப் பொருட்கள் பயன்படுகின்றன. இதுவே எம்பெருமான் செய்யும் ஊன் நாடகம்.
நிலையற்ற உலகின்பங்களினின்றும் நிலைத்த பேரின்பத்தைக் கொடுப்பது இறைவன் திருவடிச் சார்பென்று உயிர்கள் உணர்ந்து நிற்கும் தன்மையைக் காட்டுவது ஞான நாடகம். இதை மணிவாசகப் பெருமான்,
"ஊன் நாடகம் ஆட்டு வித்தவா
உருகி நான் உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆட்டுவித்தவா'
என்று விளங்க வைத்திருக்கிறார்.
தில்லைக் கூத்தனின் திரு நடனம் ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐம்பெரும் தொழில்களைக் குறிக்கும்.
கூத்தபிரானின் திருவுருவ அமைப்பானது சைவ சித்தாந்தக் கருத்துகளைத் தன்னுள்ளே அடக்கி அவற்றின் அறிகுறியாக நிற்கின்றது என ஆன்றோர் கூறுவர்.
தில்லைக் கூத்தனின் திருவுருவப் பேரழகைக் கண்டு பேருவகை கொண்ட அப்பரடிகள், "மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று கூறுகிறார். எனவே மக்களாய்ப் பிறந்த பயன் எய்த வேண்டுபவர், ஆண்டவனின் தாண்டவத்தைக் காண்பது அவசியம். அதுவும் மார்கழி மாத திருவாதிரையன்று பார்ப்பது மிகவும் சிறந்தது.
மார்கழி மாதத்தில் திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு ஆலயங்களில் திருவிழா நடைபெறுகின்றது. முதல் ஒன்பது நாட்களிலும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை செய்வித்து திருவீதி எழுந்தருளச் செய்ய வேண்டியது முறை.கோவிலின் எட்டுத் திக்குகளிலும் திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவை முதல் எட்டுப் பாடல்களையும் பாடச் செய்து, கோவிலுக்குள் மற்ற பன்னிரண்டு பாடல்களையும் பாட வேண்டும். எட்டுத் திக்கிலுமுள்ள வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, பலவிகரணி, கலவிகரணி, பலப்பிரமதனி, சருவபூததமனி ஆகிய எட்டு சக்திகளை ஒன்பதாம் சக்தியாகிய மனோன்மணி எழுப்பி இறைவனிடம் சேர்ப்பிப்பதை இது குறிக்கிறது.
நடராஜப் பெருமானுக்கு நிகழ்த்தும் அபிஷேக ஆராதனைகளிலும் ஐந்தொழில் முறை அமைந்திருப்பதாக ஆன்றோர் கூறுவர். பெருமானைப் பீடத்தை விட்டு எழுந்தருளப் பண்ணுதல் தோற்றம்; திருமுழுக்கு முதலியன திதி; கறுப்புச் சாந்து அணிதல் சங்காரம்; வெள்ளை ஆடை சாற்றல் திரோபவம்; உற்சவம் கொண்டருளல் அநுக்கிரகம்.
அந்த திருவாதிரை நாளில் இறைவனுக்குக் "களி' நிவேதனம் செய்வது வழக்கம். இதைப் பற்றிய வரலாறு ஒன்றுண்டு. திருவிசைப்பா பாடிய சேந்தனாரின் அன்பின் திறத்தை இவ்வுலகத்திற்கு அறிவிக்கத் திருவுளம் கொண்டார் ஆண்டவன். அவ்வடியார் நிவேதித்த களியினை சிதம்பரம் கோவில் முழுவதும் சிதறவைத்து மணங்கமழச் செய்தார்.
மெய்யன்பர்கள் இதன் கருத்து தெரியாது திகைத்தனர். அப்போது இறைவன் "சேந்தனார் படைத்த களியினை உண்டு மகிழ்ந்தோம்' என்று அசரீரியாகச் சொன்னார்.
"திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி' என்ற பழமொழி நம் நாட்டில் வழங்குவது யாவரும் அறிந்ததே!
சேந்தனார் களி நிவேதித்த செய்தியை திருக்களிற்றுப் படியார் என்ற சித்தாந்த சாஸ்திர நூல்,
"அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை
அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க அவிழ்ந்த சடை
வேந்தனார்க் கின்ன முதமாயிற்றே மெய்யன்பிற்
சேந்தனார் செய்த செயல்'
என்று புகழ்ந்து கூறுகிறது.
சிவநேசச் செல்வர்களாகிய சைவர்களுடைய "கோவில்' சிதம்பரம். இத்தலத்தை பூலோக கைலாயம், விசேஷ க்ஷேத்திரம், இதயத்தானம் என்றும் கூறுவர்.
பிற தலங்களில் உள்ள மூர்த்திகள் இந்த இதயத் தானத்தில் ஒடுங்கி, மீண்டும் காலையில் தத்தம் தலங்களுக்குச் செல்வார்கள் என்பர். கலைகள் எல்லாம் அர்த்தசாமத்தில் இங்கே வந்து ஒடுங்குவதால், அர்த்தசாம தரிசனம் இங்கே விசேஷமாகக் கருதப்படுகிறது.
தல லிங்கத்தின் பெயர் மூலநாதர் என்பது. இவர் எழுந்தருளியிருக்கும் இடம் மூல ஸ்தானம்.
கூத்தப் பெருமானின் நடன தரிசனம் காணவேண்டுமென்று பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்ற முனிவர்கள் இந்த லிங்கத்தை நோக்கி நீண்ட காலம் தவம் கிடந்தனர்.
திருவாரூரில் சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடத் தொடங்கியபோது இறைவனே அசரீரியாக, "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என்று அடியெடுத்துக் கொடுத்தது, தில்லையின் தலைமையைக் காட்டும் எனலாம்.
அற்புதமான இந்த மார்கழித் திருவாதிரை நாளில், ஆருத்ரா தரிசனமாம் ஆடலரசனின் தாண்டவக் கோலத்தை தரிசிப்போம். ஆன்ம லயம் பெறுவோம்!

No comments:
Post a Comment