Friday, January 18, 2013

ராமேஸ்வரத்தில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

தனுஷ்கோடி.........

ராமேஸ்வரத்தில் இருந்து கிழக்கே சுமார் 18 மைல் தொலைவில் தனுஷ்கோடி உள்ளது. ராமபிரான் இலங்கை சென்று மீண்டும் திரும்பி வந்த பொழுது இங்கிருந்து இலங்கையை தொடர்புபடுத்தும் சேது அணையை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக தனது வில்லின் (தனுசு) நுனியைக்(கோடி) கொண்டு உடைத்து அழித்ததாக ஐதீகம்.


இங்கே வங்கக்குடாக் கடலும் வங்க விரிகுடாக்கடலும் ஒருங் கிணைந்து சங்கமம் ஆவதால் இது ஒரு புனித தீர்த்தக் கட்ட மாகக் கருதப்பட்டு வருகிறது. இந்தக்கடற்ரையில் காலை நேரத்தில் சூரிய உதயத்தையும் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தையும் கண்டு களிக்கலாம். ஆடி,தை,அமாவாசை நாள்களில் இங்கு உள்ள கடலில் நீராடி எழுவது பிதிர்களுக்கு ஏற்ற புண்ணியமாகக் கருதப்படுகிறது.


இங்குச் சேது மாதவப் பெருமாள் என்ற பெயரில் ஸ்ரீ ராமனுக்கு ஒரு திருக்கோயில் இருந்தது அது கடலில் ஆழ்ந்து விட்டது. இந்தத்தலம் வைணவர்களால் ஏற்றிப் போற்றப்படும் நூற்றி எட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகக்குறிப்பிடாவிட்டாலும் இந்தத் தலத்தை வைணவர்கள் வெகுவாகக் கொண்டாடி வந்தனர்.


23.4.1964-ம்தேதி இரவு ஏற்பட்ட புயலினாலும் கடல் கொந்தளிப் பினாலும் இந்த ஊர் முழுமையாகக்கடலுக்குள் மறைந்து விட்டது. மிகச் சிறப்பான தீர்த்தக்கட்டமாக விளங்கிய சேது தீர்த்தமும் கடலால் அழிக்கப்பட்டு விட்டது. இதனால் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம் இப்போது சேது தீர்த்தமாகக் கருதப்படுகிறது.


ஏகாந்த ராமர் கோயில்.........


ராமபிரான் தெற்குக்கடலைக்கடந்து இலங்கை செல்வதற்காக தமது வானரப் படைகளுடன் இங்கு ஆலோசனை செய்தார் என்பது ஐதீகம். அகநானூற்றுப்பாடல் ஒன்று இதனைச்சுட்டி காட்டுவதாக உள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சி கம்ப ராமாயணத்தில் குறிக்கப்பட வில்லை. ராமேஸ்வரத்தில் இருந்து மேற்கே பாம்பன் செல்லும் நெடுஞ்சாலை அருகே இந்த சிறு கோயில் அமைந்துள்ளது.


இந்த ஆலயத்தின் மேற்குப்புறத்தில் மங்கள தீர்த்தமும், வடபுறத்தில் ஒரு அழகிய குட்டையும் நிர்மானிக்கப்பட்டுள்ளன. பழுதடைந்த நிலையில் இருந்த இந்த ஆலயத்தை வட நாட்டு பிரமுகர் ஒருவர் திருப்பணி செய்துள்ளார். கோயிலின் உள்ளே மகா மண்டபமும் அதனை ஓட்டிய கருவறையும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.


கருவறையில் அமைந்துள்ள ராமர், லட்சுமணர், சீதாபிராட்டி, அனுமர் ஆகியோர்களது திருமேனிகள் கல்லில் சிறப்பாக வடிக்கப்பட்டு நாள் தோறும் பூஜை செய்யப்படுகின்றன. ராமரது அருகில் நிற்கும் அனுமன் மிகவும் பணிவுடன் ராமனது வார்த்தைகளைக் கைகட்டி வாய் புதைத்துக்கேட்பது போன்ற அமைப்பு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஏகாந்த ராமனைப் பற்றிச் சிறந்த ராம பக்தரும் சிறந்த இசை மேதையுமாகிய ஸ்ரீ தியாகராஜசுவாமிகள் தெலுங்கில் இரண்டு கீர்த்தனைகள் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.


கோதண்டராமர் கோவில்......


இந்த ஆலயம் ராமேஸ்வரத்திற்குக் கிழக்கே தொலைவில் உள்ளது.பெரும்பாலும் ஆண்டு முழுவதும் உப்பங்கழியினால் சூழப்பட்டு உள்ள இந்தக் கோயில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் வாங்கூர் அறக்கட்டளையினரால் திருப்பணி செய்யப்பட்டு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.


தனது சகோதரரான ராவணனுடன் கருத்து வேற்றுமை கொண்ட வீடணன் ராவணனது அணியிலிருந்து பிரிந்து வந்து இந்த இடத்தில் ராமபிரானிடம் சரண் அடைந்து அடைக்கலம் பெற்றான் என்பது ஐதீகம். இதனைக் குறிக்கும் வகையில் இங்கு ஆயுதபாணியான ராமனது (கோதண்டராமனது) பெயரில் இந்தக்கோயில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் ராமேஸ் வரத்திலிருந்து ஸ்ரீராமநாதசுவாமி எழுந்தருளிப் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்து வருகிறார்.


பாம்பன்.........


ராமேஸ்வரம் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சிறு துறைமுகம் சேதுபதி மன்னர்களது ஆட்சியில் குறிப்பாக கி.பி.17.18-ம் நூற்றாண்டுகளில் மிகச் சிறப்பாக விளங்கிய ஊர். ராமேஸ்வரம் செல்லும் வழியில் பாம்பன் ஆறு குறுக்கிட்டது போல என ஒரு பழமொழி வழக்கில் உள்ளது. மண்டபம் கடற்கரையிலிருந்து எதிர்க்கரையான பாம்பனுக்கும் இடையில் கடல் நீர் சூழ்ந்து இருப்பது தான் இதற்குக் காரணமாகும்.


பாம்பன் என்ற பெயர் பிற்காலத்தில் போர்ச்சுக்கீசியரால் ஏற்படுத்தப்பட்ட பெயராக கருதப்படுகிறது. கி.பி.17-ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இருந்து பெரும் படை ஒன்று ராமேஸ்வரத்தில் கரை இறங்கி முன்னேறிச் சென்ற போது இன்றைய பாம்பனை அடுத்த குத்துக்காலை மட்டும் தான் வரலாறு குறிப்பிடுகிறது.


ஆனால் பிற்கால வரலாற்றில் கி.பி. 1640-ல் ராமேஸ்வரம் மீது மதுரை திருமலை நாயக்கர் மன்னர் மேற்கொண்ட படையெடுப்பிற்கு ஆதரவாக அவர் போர்ச்சுக்கீசிரியடம் ஏற்படுத்திக் கொண்ட ராணுவ உடன்பாடு ஒன்றில் குறித்துள்ளபடி இந்தப் பெயர் பம்பா என வழங்கப்படுகிறது.


மதுரை மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் கி.பி.19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயரது கோடைக்கால குடியிருப்பாக மாறும் வரை பாம்பன் ஆங்கிலேயருக்கு இதமான கால நிலையை உடைய கோடைகால இருப்பிடமாக இருந்து வந்தது என்பது குறிப்பி டத்தக்கது. இங்கு ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குக் கோட்டை ஒன்றும் அதனை அடுத்து சேதுப் பயணியரது பயன்பாட்டுக்கென ஒரு சத்திரமும் அமைக்கப்பட்டிருந்தது.


அதன் இடிபாடுகள் இன்னும் காணத்தக்கதாக உள்ளன. மன்னர் பாஸ்கர சேதுபதியின் பெரு முயற்சியினால் அமெரிக்க நாட்டு சிகாகோ நகரில் 11.9.1893-இல் கலந்து கொண்ட சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பும் வழியில் 22.1.1897-ல் கரையிறங்கிய பெருமை இந்தத் துறைமுகத்திற்கு உண்டு


பாம்பன் கடல் பாலம்.......


ராமேஸ்வரம் தீவினை இந்திய நாட்டின் நிலப்பரப்புடன் இணைக்கும் பகுதி பாம்பன் ஆகும். வரலாற்று ஆவணங்களில் கி.பி.17 -ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பாம்பன் என்ற பெயர் காணப்படவில்லை. மன்னார் வளைகுடாவினை கி.பி.1525 முதல் கி.பி.1584 வரையான காலத்தில் ஆக்கிரமித்திருந்த போர்ச்சுகல் நாட்டுப் படையணி பற்றிய ஆவணங்களிலும் இந்தப் பெயர் காணப்படவில்லை.


தளவாய் சேதுபதி என்ற இரண்டாவது சடைக்கன் சேதுபதி மீது மதுரை திருமலை நாயக்கர் மிகப் பெரிய படையெடுப்பினைத் தொடர்ந்த பொழுது ராமேஸ்வரம் தீவில் உள்ள மன்னரை முறியடிப்பதற்காகத் திருமலை நாயக்கரது தளவாய் போர்ச்சுகல் நாட்டவரது தலைமை இடமான கோவாவிற்குச் சென்றார். அவர்களது படை உதவியைப் பெறுவதற்காகக் கையெழுத்திட்ட உடன் படிக்கையில் பாம்பன் துறைமுகத்தின் பெயர் முதன் முறையாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.


பாம்பன் கால்வாய் என அழைக்கப்படும் இந்தக்கடற்பரப்பில் முதன் முதலாக ஒரு பாலத்தினை அமைத்து மதுரைப்படைகள் ராமேஸ்வரம் தீவிற்கு சென்றதை ராமப்பையன் அம்மானை என்ற நாட்டுப்புற இலக்கியம் தெரிவிக்கின்றது. இப்பொழுது உள்ள ரயில்வே-கடல் பாலத்தை அமைத்தவர்கள் ஆங்கில அரசாங்கத்தினர் ஆவர்.


தென்னிந்திய ரயில்வேயின் பாதை யினை மதுரையிலிருந்து கி.பி.1914-ல் ராமேஸ்வரம் தீவிற்கு நீடித்த பொழுது சுமார் 2.7.கி.மீ தொலைவிற்கு கடல்மேல் இந்த ரயில் பாலம் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஸ்வைட்சர் என்ற பொறியாளரால் தொங்கு பாலமாக அமைக்கப்பட்டது. இந்தக் கடல்வழி மூலமாக தூத்துக்குடியிலிருந்து யாழ்ப்பாணத்திற்குத் தோணிகளில் பலவிதமான பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தது.


அந்த கடல்வழி வணிகத்தை ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியார் மேற்கொண்டிருந்த பொழுது இந்தக் கடல்வழியில் உள்ள பாறைகளை அப்புறப்படுத்தித் தோணிகளின் போக்குவரத்திற்கு ஏற்றவாறு முதலில் கி.பி.1838,1854-ல் கால்வாயை அமைத்தனர். அந்தக் கால்வாயின் மொத்த நீளம் கீழமேலாக 968 அடி, அகலம் 80 அடி, ஆழம் 15 அடி. இந்தப் பகுதியின் மேல் எவ்வித ஆதார முமின்றி தொங்கு பாலமாக ரயில் பாதை அமைக்கப்பட்டது ஒரு விந்தையாகும்.


அனுமார் கோவில்.............


ராமேஸ்வரம் கோவிலுக்கு வடக்குப்புறத்தில் அனுமார் கோவில் அமைந்துள்ளது.சிவலிங்கப் பிரதிஷ்டை சம்பந்தமாக காசி சென்று ராமபிரானது ஆத்மலிங்கத்தை அனுமார் எடுத்து வந்ததைக் குறிப்படுவதற்காக இந்த சிறிய கோயில் அனுமனுக்கு தனியாக அமைக்கப்பப்பட்டதாகக் கருதப்படுகிறது.


ஆனால் காசி சென்ற அனுமார் உரிய காலத்திற்குள் ராமேஸ்வரத்திற்கு வந்து சேராததால் சீதை செய்த மண்ணாலான லிங்கத்தை ராமேஸ்வரம் கடற்கரையில் ராமன் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்பதும் தாமதமாக அனுமரால் கொண்டு வரப்பட்ட சிவலிங்கம் ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு அண்மையிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதும் ஐதீகம்.


சீக்கியர் மடம்.......


குரு நானக் இலங்கை சென்று திரும்பும் வழியில் ராமேஸ்வரத்தில் சிலகாலம் தங்கினார். அந்த இடம் பிற்காலத்தில் அவரது தொண்டர்கள் சிலரால் கல்லினால் அமைக்கப்பட்ட மண்டபமாக இருந்து வருகிறது. குருத்வாரா அல்லது உதாசிமடம் என அழைக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரத்திற்கு வந்து செல்கின்ற சீக்கிய மக்களின் தங்குமிடமாக இந்த அமைப்பு இருந்து வருகிறது.


நம்பு நாயகி அம்மன் கோயில்........


ராமேஸ்வரம் நகரின் தெற்கே தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கே 2.கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ராமேஸ்வரம் கோயிலில் எழுந்தருளியுள்ள பர்வதவர்த்தினி அம்பாளது மற்றொரு அம்சமாக இங்குள்ள அம்மன் கருதப்படுகிறாள். மேலும் ராமேஸ்வரம் நகரின் தெற்கு எல்லையின் காவல் தெய்வமாக இந்த அம்மன் கருதப்படுகிறாள்.


ஆதலால் பக்தர்கள் இந்த அம்மனிடம் தங்களது அனைத்துக் குறைபாடுகளையும் தெரிவித்துத் தீர்வு காண்பதற்காக இங்கு நாள்தோறும் கூட்டமாக வந்து செல்கின்றனர். உடல் நலிவு நீங்க, பெண் குழந்தைகளின் திருமணம் நடைபெற, அவர்கள் மகப்பேறு எய்த போன்ற பல வேண்டுதல்களை இந்த அம்மன் நிறைவேற்றி வைப்பதாக மக்கள் நம்புகின்றனர். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மாசித் திங்களில் இரண்டு நாட்கள் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.


கந்தமாதனம்...........


ராமேஸ்வரம் நகருக்கு வடக்கே சிறிது தொலைவில் கந்தமாதனம் அமைந்துள்ளது. இயல்பாகவே சற்று உயரமாக அமைந்துள்ள இந்தப்பகுதியில் சுமார் 30 அடி உயரத்தில் பாறைக்கற்களால் அமைக்கப்பட்ட தளத்தின் மீது ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராமபிரானது திருப்பாதங்கள் எனக்கருதப்படும் புனித இடம் உள்ளது. இந்த மண்டபத்தின் மீது மற்றொரு மண்டபமும் அமைக்கப்பட்டு இருக்கிறது.


மேலேயுள்ள இந்த மண்டபத்திலிருந்து ராமேஸ்வரம் தீவினை நான்கு புறமும் தெளிவாகக் காணலாம். அந்த காட்சி மிகவும் ரம்மியமாக இருக்கும். இந்த இடத்தை வட மாநிலத்தில் இருந்து வருகின்ற பக்த கோடிகள் ஸ்ரீராம ஷருகா எனப் பக்திப்பரவசத்துடன் போற்றி வழிபடுகின்றனர். ஆண்டு தோறும் ராமேஸ்வரம் கோயிலில் நடைபெறும் வசந்த விழாவின் பொழுது சுவாமியும், அம்பாளும் இரண்டாம் நாளன்று இங்கு வந்து பூஜைகளை ஏற்றுத் திரும்புகின்றனர்.


தங்கச்சி மடம்......


ராமநாதபுரம் சேதுபதி மன்னர் முத்துவிஜய ரகுநாத சேதுபதி (கி.பி.1713-1725) மிகச் சிறந்த சிவனடியாராக விளங்கினார். இதனால் சேது யாத்திரை பயணிகள் பாம்பன் கால்வாயைக் கடந்து ராமேஸ்வரம் வரை சென்று திரும்புவதற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து இருந்தார். தமது இரு மகள்களான சீனி நாச்சியார் லட்சுமி நாச்சியார் ஆகியோரது கணவரும் மன்னரது மருமகனான தண்டத்தேவர் என்பவரை ராமேஸ்வரம் தீவில் ஆளுநராக நியமித்து இருந்தார்.


தற்போதைய தங்கச்சிமடம் கிராமத்தில் அவரது மாளிகை அமைந்திருந்தது. பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் வரை செல்வதற்கான சாலை வசதி எதுவும் அந்தக்காலத்தில் இல்லாததால் புதிய சாலை ஒன்றை அமைக்க தண்டத்தேவர் ராமேஸ்வரம் யாத்திரை செல்லும் பயணி களிடம் ஒரு சிறிய தொகையை வரிப்பணமாக வசூலித்தார்.


இதனைக் கேள்வியுற்ற சேதுபதி மன்னர் தமது ஒப்புதல் இல்லாமல் வரியை வசூலித்ததற்காக சேது யாத்திரை பயணிகளுக்குத் தொந்தரவு கொடுத்துச்சிவத்துரோகம் செய்து விட்டார் என முடிவு செய்து தண்டத் தேவருக்கு மரண தண்டனை வழங்கினார். இதை அறிந்த மன்னரது மகள்கள் இருவரும் தங்களது கணவர் தண்டத்தேவரது சிதையில் விழுந்து உடன் கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டனர்.


அவர்கள் உயிர் துறந்த இடம் தீப்பாஞ்சகாணி ஆகும். இன்றும் தங்கச்சி மடம் அரண்மனை எதிர்ப்புறம் உள்ளது. காலப்போக்கில் இந்த இரு சகோதரிகளது தியாகத்தை நினை வூட்டும் வண்ணம் தோன்றிய இரு மடங்களும் அக்காள் மடம், தங்கச்சி மடம் என்று தனித்தனி ஊர்களாக எழுந்துள்ளன. *

No comments:

Post a Comment