Saturday, August 16, 2014

உண்மை துறவறம்

உண்மை துறவறம்




கணவன்– மனைவி இருவர், உலக வாழ்க்கையை வெறுத்து துறவறம் பூண்டனர். இருவரும் துறவறக் கோலத்தில் பல புண்ணியத் தலங்களுக்குச் சேர்ந்தே சென்றனர். இறைவனை மட்டுமே நினைத்து அவன் புகழ்பாடி, முக்தியடைய வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. அதற்காகவே நாளும் பொழுதும் இறைவனைத் தேடி பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தனர்.

சிறப்பு வாய்ந்த ஒரு புண்ணிய தலத்திற்கு காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தனர். கணவன் முன்பாகவும், மனைவி பின்னாலும் சென்றனர். முன்னால் சென்று கொண்டிருந்த கணவனின் கண்களில் ஒரு வைரக்கல் தென்பட்டது.

அந்த வைரக்கல்லை எடுத்துக் கொண்டால் எங்கே, அதன் மீது பற்று ஏற்பட்டு தன் ஆன்மிகத் துறவு எண்ணத்துக்குப் பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று அவன் அஞ்சினான். மேலும் அவனுக்கு மற்றொரு எண்ணமும் உதித்தது. அதாவது பின்னால் வரும் தன் மனைவி அந்த வைரக்கல்லை பார்த்து ஆசைப்படுவதற்கு முன்பாக, அதனை மறைத்துவிட நினைத்தான்.

உடனடியாக அந்த வைரக்கல்லை, தன் காலால் காட்டில் ஒரு புதருக்குள் தள்ளிவிட்டான். அந்த சமயம் அவன் மனைவியான பெண் துறவி, கணவனை நோக்கி, ‘சுவாமி! காலால் எதையோ தள்ளி விட்டீர்களே அது என்ன?’ என்று கேட்டாள். அதற்கு உண்மையான காரணத்தைக் கூறாமல், அவளது கணவன் மழுப்பலான பதிலைக் கூறினான்.

என்றாலும் அவள் கண்களில் அந்த வைரக்கல் பட்டுவிட்டது. எந்த நோக்கத்தோடு அதனை தன் கணவன் மறைத்தான் என்பதையும் அவள் நொடிப்பொழுதில் உணர்ந்து கொண்டாள். ‘சுவாமி! வைரத்துக்கும், மண்ணாங்கட்டிக்கும் உள்ள வேறுபாடு இன்னும் தங்களுக்குத் தெரிவதாக இருந்தால், பிறகு ஏன் உலக ஆசையை வெறுத்துத் துறவியாக வந்தீர்கள்?’ என்று அவன் மனதில் பதியும்படியாக கேட்டாள்.

மனைவியின் வார்த்தையில் வெட்கிக் தலை குனிந்தான் அவன். உலக பற்று நீங்காதவர்களே, எப்போதும் பயனற்ற பொருட்களை நாடுவார்கள். உலக பற்றற்ற தூய ஆத்மாக்கள், இறைவனையே நம்பி அவனையே சதா சர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருப்பர். அவர்களுக்கு வைரக்கல்லும், மண்ணாங்கட்டியும் ஒன்றுதான்

No comments:

Post a Comment