அடர்ந்த காட்டின் வழியாக குருவும், அவரது சில சீடர்களும் சென்று கொண்டிருந்தனர். காட்டைக் கடந்ததும், பெரிய மணல் வெளி தென்பட்டது. குருவும், சீடர்களும் அமைதியாக நடந்து சென்றனர். நெடுந்தூரம் சென்று விட்டனர். உச்சி வெயில் உடலை வாட்டி வதைத்தது.
ஆனால் மணல்வெளி ஒரு முடிவுக்கு வரவில்லை. கிராமங்களோ, மரங்களோ, நீர் நிலைகளோ எதுவும் தென்படவில்லை. கிராமங்கள் தென்பட்டால் ஓய்வெடுக்கலாம். மரங்கள் இருந்தால் இளைப்பாறலாம், நீர்நிலைகள் இருந்தால் தாகம் தணிக்கலாம்.
எதுவும் கண்ணுக்கு அகப்படவில்லை. கண்ணுக்கு எட்டிய வரை மணல்பரப்பாகவே இருந்தது. ஒரு நாள் முழுவதும் நடந்தும் இதே நிலைதான். இருள் சூழ்ந்து விட்டது. மணல் வெளியிலேயே ஓய்வெடுக்கலாம் என்று குரு சொன்னார்.
நாள் முழுவதும் சாப்பிடாத, நீர் அருந்தாத காரணத்தால் சீடர்கள் அனைவரும் பசி மயக்கத்தில் சாய்ந்தனர். அப்போது குருவானவர், ‘இறைவா! இன்று நீ தந்த அனைத்திற்கும் நன்றி!’ என்று கூறினார். இதைக் கேட்ட சீடன் ஒருவன் கடும் கோபம் கொண்டான்.
‘குருவே! இறைவன் இன்று நமக்கு எதுவுமே அளிக்கவில்லையே’ என்றான் ஆத்திரம் அடங்காமலே. ‘யார் சொன்னது?. அவர் இன்று நமக்கு அருமையான பசியைக் கொடுத்தார். அற்புதமான தாகத்தைக் கொடுத்தார். அதற்காகத்தான் நான் அவருக்கு நன்றி செலுத்தினேன்’ என்றார் குரு.
இன்பமும், துன்பமும் வாழ்வின் இரு பக்கங்கள். ஆனால் இன்பத்தை மட்டும் ஏற்கும் மனம். துன்பத்தை ஒரு போதும் ஏற்பதில்லை. அதையும் ஏற்க பழகுபவனே ஞானியாக உயர்வான்
No comments:
Post a Comment