நான்காவது கிரகமான புதன் கிரகம் சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாகப் பிறந்தவர்.
சகல கலைகளிலும் வல்லவர். மகா ஞானியாக விளங்குபவர். கிரகங்களிலே சுபக்கிரகர், தன்னை
வழிபடுகிறவர்க்கு மிகுதியாக அறிவை கொடுப்பவர். ஞானகாரகர் இவர் வாக்குச் சாதுர்யம்
அளிப்பவர். தீயகிரகங்களால் உண்டாகும் பீடைகளை நீக்கும் ஆற்றல் உடையவர், சாந்த
குணமுள்ளவர்.
இவரது மனைவி இளை என்றம் புத்திரர் புரூரவர் என்றும் சொல்லப்படுகிறார்கள்.
மகாவிஷ்ணுவை வழிபடுவதாலும் பச்சை நிறப்பட்டு உடுத்துவதாலும் பச்சைக்கல்
தரிப்பதாலும் பச்சைப் பயறு தானம் கொடுப்பதாலும் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்
பண்ணுவதாலும் புதக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். புதன் ஆணும் அல்லாத பெண்ணும்
அல்லாத அலி கிரகம் ஆகும்.
புத பகவானின் ஆதிக்கம் பெற்றவர்களில் பலர் திக்கித் திக்கிப் பேசுவார்கள்.
வைராக்கியம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். நல்ல கல்வியறிவும், வாக்கு வன்மையும்
பெற்றவர்களாக இருப்பார்கள். நல்ல சிந்தனை சக்தியும், கலைத்திறனும், வாக்கு
நாணயமும், இளமையான தோற்றமும், ஓவியக்கலை, சிற்பக்கலை போன்றவற்றில் தேர்ச்சியும்
பெற்றிருப்பார்கள்.
புதன், கலை, கணிதம், வியாபாரம், அச்சுத்தொழில், துணி சம்மந்தப்பட்ட தொழில்,
தங்க வேலை, பத்திரிகைத் தொழில், எழுத்துத் தொழில் போன்றவற்றிக்கு அதிபதியாக
விளங்குகிறார். ஜாதகத்தில் புதன் ஆட்சி பெற்று அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு சிறப்பான
கல்வியறிவு கிட்டும். பொதுவாக, புத பகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள் அவசர
புத்திரக்காரர்களாகவும் எதையும் சீக்கிரமாக செய்து முடிக்க வேண்டும் என்று
நினைப்பவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார்கள். என்ன தோன்றுகிறதோ அதை
அப்படியே வெளியே சொல்லிவிடுவார்கள். பழமையை ஒதுக்குவார்கள். புதுமையை
விரும்புவார்கள். தேவைப்படும் போது அழகாகப் பொய் பேசுவார்கள். எல்லாக்
கிரகங்களையும் விட இது மிகச்சிறியது. புதனுக்கு கிரக பிடாஹரன் என்ற பெயர் ஒன்றும்
உண்டு.
திருவெண்காடு, மதுரை ஆகிய இரு தலங்களிலும் உள்ள ஈஸ்வரர்களை புதன் வணங்கித்
துதித்து நவகோள்களில் தானும் இடம் பெற்றார். புதன் ஜாதகத்தில் வலுவில்லாமல்
இருந்து, புதன் திசை அல்லது மற்ற திசைகளில் புதன் புத்தி வருபவர், திருவெண்காடு,
மதுரை சென்று வணங்கிப் பலன் பெறலாம். திருவெண்காடு தலம் காவிரிப் பூம்பட்டினம்
அருகில் இருக்கிறது.
சுவாமியின் பெயர் சுவேதாரண்யேஸ்வரர், அம்பிகையின் பெயர் பிரம்ம வித்யா நாயகி.
இத்தலத்தில் மூன்று மூர்த்திகள், மூன்று தீர்த்தங்கள், மூன்று சக்திகள், மூன்று தல
விருட்சங்களிருக்கின்றன. அம்பாள் கோவிலுக்கு எதிர்ப்புறம் புதன் சந்நிதி தனியாக
உள்ளது. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகிய நான்கு சைவ சமயக்
குரவர்களும், எல்லப்ப நாவலர் என்பவரும் இந்த தல புராணத்தை வெகுவாக
பாடியிருக்கிறார்கள்.
இத்தலத்தில் ஆண்டவருடன் புதனும் இரண்டறக் கலந்துள்ளார். அடுத்த தலம் மதுரை
யாகும். அங்கு சொக்கநாதப் பெருமாளின் திருவுருவில் புதனுடைய அம்சமும்
நிறைந்திருக்கிறது. மதுரை மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்று வகையிலும் சிறப்பு
பெற்றது. சோமசுந்தரேஸ்வரக் கடவுள் நிகழ்த்திய அறுபத்தி நான்கு திருவிளையாடல்களும்
சிறப்பு பெற்றவை. நவக்கிரக மண்டலத்தில் சூரியனுக்கு வடகிழக்கே புதன்
அமர்ந்திருக்கிறார்.
புதனுக்கு ஏற்ற நிறம் பச்சை. புதனுக்கு பிடித்த உலோகம் பித்தளை. புதனுக்கு
பிடித்த தானியம் பச்சைப் பயிறு. புதனுக்கு பிடித்த சுவை உவர்ப்பு. வாகனம் சிங்கம்.
புதனுக்கு இருக்கும் பெயர்கள் புத்திதாதா, புத்தி விபத்தனன், தனப்பிரதன்,
பசுப்பிரதன், மனோகரன், சௌமிய மூர்த்தி, விஷ்ணுரூபி.
ஒருவர் ஜாதகத்தில் புதன் பகவான் சிறப்பாக இடம் பெற்றிருந்தால் அறிவு, கல்வி,
புத்திசாலித்தனம் அனைத்தும் நன்றாக இருக்கும். ஜாதகத்தில் புதன் சரியாக
அமையாவிட்டால் நாம் முன்பு குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு சென்று புதனை வழிபட்டு
நன்மையடையலாம். ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரமொன்றில் பிறந்தவருக்கு
புதன் தசை ஆரம்பமாக இருக்கும்.
துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு ஆதிபத்ய
அடிப்படையில் யோகக்காரகன் ஆவான். அதனால் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு
சுபஸ்தானங்களில் வலுப்பெற்று இருக்க நேர்ந்தால் இவனால் கிடைக்கும் முழு யோகப்
பலன்களையும் அனுபவிக்கலாம்.
இல்லையெனில் மாறான பலன்களே நடக்கும். மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம்,
மீனம் ஆகிய லக்னத்தாருக்கு ஆதிபத்ய அடிப்படையில் குரு பாவியும் தீய பலன்களை
அளிப்பவனும் ஆவான். அதனால் இந்த லக்னத்தாருக்கு புதன் வலுப்பெற்றிருக்க நேர்ந்தால்
இவனால் நேரம் தீய பலன்கள் பெருமளவு இருக்கும்.
இவனே மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ வலுக்குன்றி இருக்க நேர்ந்தாலோ கெடு
பலன்கள் குறைய வாய்ப்புண்டு. அது மட்டுமின்றி நற்பலன்கள் நடக்கவும் கூடும்.
கிரகங்களில் புதன் சந்திரனை போன்று பிரச்சினைக்குரியவன். அதாவது சுபகிரகம் என்று
பொதுவாக கூறப்பட்டாலும் அவன் சுப கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ, சுப கிரகங்களால்
பார்க்கப்பட்டாலோ தான் சுப கிரகம் ஆவான்.
அவ்வாறின்றி அசுப கிரகங்களுடன் கூடி இருந்தாலோ, பார்க்கப்பட்டிருந்தாலோ சுபன்
என்ற அந்தஸ்தை இழந்து அசுபன் ஆவான். ராசி வீடுகளில் மிதுனம், கன்னி இரண்டும்
ஒன்றுக்கு மற்றொன்று கேந்திர ஸ்தானமாகும். இந்த வீடுகளுக்கு அதிபதியாக இருக்கும்
புதன் மிதுனம், கன்னி ஆகிய லக்னத்தாருக்கு லக்னாதிபதியாகவோ, சுகாதிபதியாகவோ,
ஜீவனாதிபதியாகவோ இருக்கக்கூடும்.
அந்நிலையில் கேந்திர ஸ்தானத்தில் இல்லாது வேறு யோக மளிக்கவல்ல ஸ்தானங்களில்
இருந்து தசை நடத்தினால் சிறப்பான பலன்கள் நடக்கும். புதன் தன் தசையில் யோகப்
பலன்களை அளிக்கும் தன்மை பெற்றிருந்தால் கல்வியில் உயர்வும், அதனால் உயர்பதவி
வகிப்பதும் நேரும். கணிதம், மருத்துவம், தர்க்க சாஸ்திரம், ஜோதிடம் போன்ற
துறைகளிலும் கலைத்துறைகளிலும் மேன்மையை அளிப்பான். வருமானம் பெருகும்.
பிறரின் பாராட்டுதலுக்கு ஆளாக நேரும். வீடு, நிலம், கால்நடை அபிவிருத்தி
இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம், சுப அலுவல்கள் நடத்தல், உற்றார், உறவினர்,
நண்பர்களுடன் சுமூக உறவு போன்றவை நடக்கும். புதன் கோட்சார ரீதியாக ஜென்ம ராசிக்கு
2, 6, 8, 10, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலன்களை அளிப்பான்.
இவை தவிர மற்ற ஸ்தானங்களில் சஞ்சரிப்பின் தீய பலன்களை அளிப்பான். புதன் தசை
நடைமுறையில் இருக்கும் காலங்களில் கெடு பலன்கள் நடக்காமல் இருக்க, அதிதேவதையான மகா
விஷ்ணுவை புதனன்று வழிபாடு செய்வது நல்லது.
No comments:
Post a Comment