Thursday, December 6, 2012

கருடனுக்கும் ஒரு வாகனம்

பெருமாள் கோயிலில் மூலவருக்கு நேராக கைகளைக் கூப்பிய நிலையில் எழுந்தருளி இருப்பவர் கருடன். இவரை கருடாழ்வார் என்று குறிப்பிடுவர். பெருமாளுக்கு வாகனமாக இருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமை மற்றும் விசேஷநாட்களில் கருட வாகனத்தின் மீது பெருமாள் பவனி வருவார். வைகுண்டத்தில் இருந்து திருமலையான சப்தகிரியை (திருப்பதி) பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தவர். சப்தகிரி என்றால் ஏழு மலை. அந்த ஏழுமலைகளில் ஒன்றுக்கு கருடனின் பெயரில் கருடாத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது. கருடன் பெருமாளின் வாகனம். அந்த கருடனுக்கும் ஒரு வாகனம் இருப்பதாக விஷ்ணு சகஸ்ரநாமத்தில், சுபர்ணோ வாயு வாஹனா: என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காற்றே அதன் வாகனம். கருடமந்திரமான கருடபஞ்சாட்சரிக்கு உடனே பலன் தரும் சக்தி உண்டு. திருவிழா காலத்தில் கருடசேவையில் பெருமாளைத் தரிசிப்பது சிறப்பு. கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நன்மையின் அறிகுறி. சுவாதியன்று மாலைநேரத்தில் கருடதரிசனம் மிகவும் விசேஷம். கஜேந்திரன் என்னும் யானை, முதலையிடம் சிக்கித்தவித்த போது, பெருமாள் வைகுண்டத்தில் இருந்து லட்சுமியுடன் கருடன் மீதே பறந்து வந்தார். கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி கோயில்களில் நடக்கும் போது, பெருமாள் கருடசேவை சாதிப்பார்.

No comments:

Post a Comment