Friday, December 21, 2012

தீப ஆராதனைகளின் விளக்கங்கள்

வீடுகளில் முன்பகுதியில் அமைந்த முற்றங்களில் மகளிர் மாலை நேரத்தில் விளக்குகளை வைத்து நெல், மலர் இட்டு வழிபட்ட செய்திகள் நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி முதலிய இலக்கியங்களில் உள்ளன. திருஞானசம்பந்தர் காலத்திலேயே கார்த்திகை மாத விளக்கு வழிபாடு தொன்மையானது எனக் கூறப்பட்டுள்ளது. தொல் கார்த்திகை நாள்... தையலார் கொண்டாடும் விளக்கீடு என்பது அவர் வாக்கு.

1. வீடுகளில் விளக்கு வழிபாடு

2. பொது இடங்களான மண்டபங்கள், கோவில் மண்டபங்கள் முதலிய இடங்களில் பலர் கூடி விளக்கேற்றி வழிபடுதல்,

3. கோவில்களில் விளக்கு ஏற்றுதல்,

4. பூசை நேரங்களில் பலவகையான அலங்கார தீபங்கள் காட்டுதல் என்று விளக்கு வழிபாட்டை வகைப்படுத்திக் கொள்ளலாம்.

1. வீடுகளில் மாலை நேரம், சிறப்பு நாட்கள் முதலிய காலங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தல் நல்லது. வீட்டுக்கு மங்கலம், எட்டுத்திருமகளிரும் (அஷ்ட லட்சுமிகள் அருள் செய்வர்.

2. கூட்டு வழிபாட்டைப்பலரும் ஒரே தன்மையான விளக்குகளை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றிப் பற்றவைத்து குங்குமம் அல்லது மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

விளக்கு போற்றி என்று நூல்கள் வந்துள்ளது. ஒருவர் போற்றி சொல்ல மற்றவர் பின்தொடர்ந்து சொல்லி நிறைவின் போது படையலிட்டுக் கற்பூரங்காட்டி வழிபடலாம். பலரும் ஒன்று சேர்வது சமுதாய ஒற்றுமைக்குக் காரணமாக அமையும். ஐந்து திரியிட்டுச் சுடரேற்றி வழிபடும் விளக்கில் மலைமகள், கலைமகள், அலைமகள் மூவரும் அமர்ந்து அருள் செய்வர்.

3. திருக்கோவில்களில் விளக்கு வைப்பது புண்ணியமாக முன்பு கருதப்பட்டது. திருமறைக்காட்டில் எலி ஒன்று கோவிலில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் நெய் உண்ணப் புகுந்தது. சுடர் மூக்கைச்சுடர் திரியை எலி தூண்டியது. அணையும் விளக்கு நன்றாக எரியத் தொடங்கியது.

இந்த புண்ணியத்தால் எலி அடுத்த பிறப்பில் மூன்று உலகங்களையும் ஆளுகின்ற மாவலிச்சக்கரவர்த்தியாக ஆயிற்று. நாயன்மார்களில் கலியநாயனார் நமிநந்தியடிகள், கணம்புல்ல நாயனார் ஆகியோர் கோவிலில் விளக்கு ஏற்றியதால் அவர்கள் இறைவன் திருவருள் பெற்றவர்கள் ஆவர். கோவில்களில் வைக்கப்பெறும் விளக்கினை நந்தியா தீபம், சந்தியா தீபம் எனக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.

அணையாமல் எரியும் தீபம் நந்தியா தீபம், நந்தா தீபம், நூந்தா தீபம் எனப் பலவாறாக வழங்கப்பெறும். பூஜை நேரமான காலை, நண்பகல், மாலை, இரவு முதலிய சந்திகளில் வைக்கப் பெறும் தீபம் சந்தியா தீபம் ஆகும். பூசைக் காலங்களில் முதலில் திரை போடப்பெறும் பின் அலங்கார தீபம் காட்டும் போது திரை நீக்கப்பெறும், தீபம் காட்டும் அர்ச்சகர் பலவித அலங்கார தீபங்களை முறையாகக் காட்டுவார்.

ஆன்மாவின் பிரதிநிதியாகிய வாகனம், மூலமூர்த்தியைக் காணமுடியாமல் ஒரு மறைப்பு, திரோதானம் உண்டாக்குகின்றது. அது ஆணவ மலம் எனும் தடையாகும். ஆணவ மலம் எனும் தடை நீங்கினால் திரை நீங்கினால் மூலமூர்த்தியைக் காணலாம்.

அர்ச்சகர் தீபம் காட்டினால் நன்றாகக் காணமுடியும். அர்ச்சகர் ஞானாச்சாரியரைக் குறிக்கும். விளக்கு ஞானத்தைக் குறிக்கும். ஆணவம் நீங்க ஞானாச்சாரியர் ஞானத்தைக் கொடுக்க இறைவனைக் காணலாம். உலகத்தில் வெளிச்சம் வருதலும் இருள் நீங்குதலும் ஒரே சமயத்தில் நடைபெறும். அதுபோல ஞானாச்சாரியரால் ஞானம் வருதலும் ஆணவம் நீங்கலும் ஒரே சமயத்தில் நடைபெறும்.

கோவிலில் திரை நீங்குதெலும் அர்ச்சகர் அலங்கார தீபம் காட்டுதலும் ஒரே சமயத்தில் நடைபெறும். எனவே விளக்கு ஞானத்தின் அறிகுறியாகும். "விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்'' என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். எனவே கோவிலில் காட்டப்பெறும் அலங்கார தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.

பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை, பூஜைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனை தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப்பெறுகின்றன.

நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன. நட்சத்திர தீபம் காட்டப்பெறுகின்றது ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும். ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபங்கள்-நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும்.

மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் குறிக்கும். ஐந்து தட்டுக்களில் தீபம் ஏற்றுதல் இறைவனுடைய ஐந்து முகங்களைக் குறிக்கும். மந்திரங்களுள் பஞ்சப்பிரம மந்திரங்கள் சிறப்புடையன.

1. ஈசானம்
2. தத்புருடம்
3. அகோரம்
4. வாமதேவம்
5. சத்யோசாதம்

என்ற ஐந்தும் பஞ்சப்பிரம மந்திரங்கள் எனப்படும். ஏனைய மந்திரங்களுக்கு முன்னே தோன்றியதாலும், ஏனைய மந்திரங்களுக்கு காரணமாக இருப்பதாலும் பஞ்சப் பிரம மந்திரங்களே சிறந்தன என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுகின்றது.

அந்தந்த மந்திரங்களால் அந்தந்த முகத்தைத் தரிசிப்பது என்ற முறையில் ஐந்து தட்டுத் தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன. இறுதியாக கும்ப தீபம் காண்பிக்கப் பெறும். கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிக்கும். அனைத்தும் சதாசிவத்துள் ஒடுங்கும் என்ற முறையில் அமைந்தது.

இறுதியாகக் புருட தீபம், மிருக தீபம், பட்ச தீபம், வார தீபம், ருத்ர தீபம் முதலிய தீபங்கள் காட்டும் போது அந்தந்த தீபத்திற்குரியவர்கள் அந்தந்த உருவில் வந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பது கருத்து. தீபாராதனை செய்யும் போது மூன்று முறை காட்ட வேண்டும். முதன் முறை காட்டுவது உலக நலத்கருதியது.

இரண்டாம் முறை கோவில் உள்ள ஊர்மக்கள் நலத்கருதியது. மூன்றாம் முறை ஐம்பெரும் பூதங்களால் இடையூறின்றி நலம் பயக்க வேண்டும் என்பதாகும் தீபாராதனை காட்டும் போது இடப்பக்கத் திருவடிவில் தொடங்கி இடை, மார்பு, கழுத்து, நெற்றி, உச்சி என்ற முறையில் உயர்த்தி வட்டமாக வலப்பக்கம் தோள், மார்பு, இடை, பாதம் என்ற அளவில் `ஓம்' என்னும் பிரணவ வடிவில் காட்ட வேண்டும். தீபாராதனைக்குப்பின் கற்பூரம் காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment