யோகம்
-------------
யோகம் என்ற சொல் வெவ்வேறு விதமான பொருளில் உபயோகப்படுத்தப் படுகிறது. பொதுவாக கர்ம யோகம், ஞான யோகம், பக்தியோகம் என்பவை கீதை முதலாக பல்வேறு சாத்திரங்களில் மிக விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன. இது தவிர ஹட யோகம், ராஜ யோகம் என்று இன்னும் எத்தனை எத்தனையோ பதங்களில் யோகம் என்ற சொல் வருகிறதே அன்றி அது என்ன பொருளை அல்லது என்ன முறையை குறிக்கிறது என்று பெயரைக் கேட்டவுடனேயே மிகத்தெளிவாக தெரிந்து கொள்வது கடினம். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களைக் கூட நம்மால் ஆகாது என்று இந்த யோகம் என்னும் சொல்லே சில நேரங்களில் விரட்டி விடுகிறது. இதற்கு காரணம் இந்த தெளிவின்மை தான்.
யோகம் என்ற சொல்லுக்கு நேரடி பொருள் என்னவெனில் “ஒன்றிணைதல்” என்பதாகும். மனிதன் இறைவனை உணர்ந்து, இறைவனுடன் ஒன்றிணைதல் என்று கொள்ளலாம். தர்மத்தை கடைப்பிடித்து, பற்றின்றி தனக்குரிய கடமைகளை சரிவர செய்து வந்து, செயல்களின் பலனை ஈசுவரனுக்கு அர்பணித்து விடுதலே கர்ம யோகம் ஆகும். “மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரைகழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி ” என்று திருவாசகம் சொல்வது போல், உடலும் உள்ளமும் உருகி இறைவனை மனமார நேசித்து வணங்குவது பக்தி யோகமாகிறது. பக்தி யோகத்தில் திளைக்கும் பக்தர்கள் மற்ற கடமைகளைப் பற்றி கவலைப்படுவது இல்லை. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரை இதற்கு உதாரணமாக சொல்லலாம் – அவருக்கு தனக்கென்று எதுவும் ஈட்டுவது இல்லை – எல்லாமே ராம பக்தி தான் என்று இருந்தவர். ஞான யோகம் என்பது உபநிடதங்களில் ஆராய்ச்சி செய்து, புத்தியின் உதவியால் இறைவனைக் கண்டடைவது. ஆதி சங்கரர் இப்படிப்பட்ட ஒரு ஞான யோகி. இந்த யோகங்கள் எதுவுமே கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் வாழ்வில் கடைபிடிப்பதற்கு மிகுந்த பக்குவமும் திறமையும் தேவை.
ஆன்மீகத்தில் யோகம் என்ற சொல்லை, மனிதன் தன் முயற்சிகளின் உச்சமாக அடையும் இன்ப துன்பங்கள் அற்ற விடுதலையே யோகம் என்றும், இன்னொரு விதத்தில் அந்த விடுதலை அடைவதற்கு உரிய வழியே யோகம் என்றும் இருவிதமான பொருளிலும் பயன்படுத்துவர். ஞானியர் வகுத்த பல்வேறு ஆன்மீக மார்க்கங்களில் யோகம் என்பது உடலை வருத்தி செய்யக்கூடிய பயிற்சி முறையாகவும், மனதை அடக்கி செய்யக் கூடிய பயிற்சி முறையாகவும் முக்கியமாக இரு பகுதிகளை கொண்டு விளங்குகிறது. தற்காலத்தில் பரவலாக யோகா என்பது உடல் வளக் கலையாகவும், மனவளக் கலையாகவும் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் இவை யோகத்தினால் அடையும் முதல் படி மட்டுமே – யோகம் இதைவிட பெரியதொரு நன்மைக்காக ஏற்பட்டதாகும்.
சிலருக்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடித்திருக்கும் – நல்ல மனைவி, மக்கள், நிறைய சொத்து, சாதனைகள் என்று இந்த வாழ்க்கை இன்பமாகத்தான் இருக்கிறது – இதில் மரணமில்லாமல் நானும் எனது சொத்து சொந்தபந்தங்களும் இருக்க வேண்டும் – அப்படியே மரணமடைந்தாலும் இதைப்போல இன்னும் நான்கைந்து பிறவிகள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று தோன்றும். ஆனால் மனித வாழ்க்கை, இன்பங்களுக்கு சரி விகிதமாக துன்பத்தையும் தருவதாக இருக்கிறது. மூப்பு, பிணி, சாவு ஆகியவை ஒவ்வொருவரையும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இன்ப துன்பங்கள் நிலையில்லை – நிலையான பேரின்பம் என்று ஒன்று இருக்குமானால் அது இந்த இன்ப துன்பங்களில் இருந்து விடுபடுவது தான். உலக இன்ப நுகர்ச்சியால் மயங்கி மாறாத இன்ப துன்ப சுழற்சியில் சிக்கும் மனிதன், தன் நுகர்ச்சிக்கு காரணமான உடலின் கண், காது முதலான அங்கங்களையும், புலன்களையும் அடக்கி, மனதையும் அடக்கி இறைவனை காண்பதே, இறைவனுடன் இணைவதே யோகத்தின் நோக்கம். அதே சமயத்தில் யோகத்தினால் மனித உடலின்/மனதின் செயல் வன்மையை – சாத்தியங்களை பல மடங்கு அதிகப்படுத்தி அதை இந்த உலக இன்பத்தை பன்மடங்கு அதிகமாக அனுபவிப்பதற்கும் உபயோகிக்க முடியும் – ஆனால் அது ஒரு பக்க விளைவு தானே தவிர அதுவே இறுதி நோக்கம் அல்ல.
சனாதன தருமம் என்னும் இந்து மதத்தினுள் இந்த உலகில் இன்பமாக வாழ்ந்து அனுபவிப்பதற்கும் வழிகள் உண்டு. இந்த இன்ப-துன்பங்கள் நிறைந்த வாழ்வை கடந்து இன்ப துன்பங்கள் அண்டாத பேரானந்த நிலைக்கு செல்வதற்கும் வழிகள் உண்டு. வாழ்வின் இறுதி தத்துவமாக இந்து மதத்தின் சைவம், சாக்தம், வைணவம், கௌமாரம் போன்ற பல்வேறு விதமான மார்க்கங்களில் வேதத்தின் வழியாக சொல்லப்படும் பொதுவான கருத்து, மனிதன் என்பவன் வெறும் உடல் மட்டுமல்ல – உடல் இயங்க காரணமாக உள்ளே ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது. அது உடலை விட்டு நீங்கினால் உடல் இயக்கமின்றி பிணமாகி விடுகிறது. ஆன்மாவே ஒவ்வொரு உடலினுள்ளும் புகுந்து அந்தந்த உயிரினமாக வாழ்ந்து இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது. உடல் கொண்டு வாழும் ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஆன்மா, தன் செயல்கள் மூலம் கர்ம வினையை சேகரித்து கொள்கிறது. அந்த கர்ம வினை, நல்லதாக இருந்தாலும், தீயதாக இருந்தாலும் அதற்குரிய பலனை அந்த பிறவியிலேயோ அல்லது அடுத்தடுத்த பிறவிகளிலோ அனுபவிக்கிறது என்பதாகும்.
உண்மையில் ஒவ்வொரு ஆன்மாவும் இறைத்தன்மையின் வெளிப்பாடு தான். ஆன்மா இறைவனை சார்ந்தே, இறைவனுடன் இணைந்தே இருக்கிறது (விசிஷ்டாத்வைதம், துவைதம்) அல்லது அது இறைவடிவமாகவே இருக்கிறது (அத்வைதம்) என்று வேதாந்த தத்துவங்கள் கூறுகின்றன. எப்படி குளத்தில் நீந்தும் மீன், தான் இருக்கும் நீருக்கு வெளியே ஒரு உலகம் இருப்பதை உணராமல், தன் உலகமே நீரால் ஆனது என்று நினைத்துக் கொள்ளுமோ அப்படித்தான் ஆன்மாவும் அறியாமையால் தன்னை இறைவனிடமிருந்து வேறு பட்டதாக எண்ணி மாயையில் சிக்கி வெவ்வேறு உயிரினங்களில் ஒன்றாக பிறவி எடுக்கிறது. இவ்வாறு ஆன்மா தன்னை உணராமல் இருப்பதே அறியாமை என்றும், தன்னை உணர்தலே ஞானம் என்றும் இந்து மத தத்துவங்கள் கூறுகின்றன. .
ஆன்மா இந்த அறியாமையை விட்டு தன் பிறவிகளுக்கு வெளியே இறைவனின் இருப்பை எப்போது கண்டுகொள்ளுகிறதோ அப்போதே பிறவிகளிலிருந்து விடுபட்டு விடுகிறது. தன்னை உணர்ந்த நிலையையே, அத்வைதம், யோகம், சமாதி, துரீயம், மரணமற்ற தன்மை, பரமபதம், மோக்ஷம், முக்தி என்று பல்வேறு பதங்களால் குறிக்கிறார்கள். இவை எல்லாமே மனமும் உடலும் செயலற்றுப் போய் அதன் பின் ஏற்பட்ட ஞானத்தினால் கிடைக்கும், இன்ப துன்பங்கள் அற்ற நிலையையே குறிக்கிறது. அந்த நிலையை அடைய சனாதன தருமம் பல்வேறு விதமான ஆன்மீக மார்க்கங்களையும், அந்த மார்க்கங்களில் செல்லக் கூடிய வாகனமாக பல்வேறு யோக முறைகளையும் பரிந்துரைக்கிறது. இவ்வாறு யோகம் என்பது இந்து மதத்தின் பல்வேறு ஆன்மசாதனை மார்க்கங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரங்கள், ஹட யோக ப்ரதீபிகை போன்ற யோக சாத்திர நூல்களில் யோக முறைகள் நான்கு வகைகளாக பிரிக்கப் பட்டு உள்ளன. அவையாவன, மந்திர யோகம், ஹட யோகம், லய யோகம், ராஜ யோகம். இவற்றில் ஒவ்வொரு வகையிலும் ஒரே மாதிரியான எட்டு பகுதிகள் உண்டு. அவையாவன, யமம், நியமம், ஆசனம், ப்ரதியாஹாரம், பிராணாயாமம், தாரணை, தியானம், சமாதி ஆகியவை ஆகும். இந்த எட்டு பகுதிகள் தான் அஷ்டாங்க யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த எட்டு பகுதிகளை வகுத்து கொடுத்தவர் பதஞ்சலி முனிவர் ஆவார். இந்த எட்டு பகுதிகளில் ஒவ்வொன்றிலும் ஒருவர் பயிற்சி செய்ய வேண்டிய அளவு, செய்து அடையும் நிலை, ஒவ்வொரு ஆன்மீக மார்க்கத்திலும் வேறுபடும். ஒவ்வொரு சீடருக்கும் அவரது தகுதிக்கு ஏற்ப மாறுபடும்.
யோகம் என்றால் பலருக்கும் உடனே ஞாபகம் வருவது யோகாசனங்கள் தான். யோகாசன பயிற்சிகளை பார்த்தே பலர் தயங்கி விலகிவிடுவர். உண்மையில் யோகம் என்பது யோகாசனம் மட்டும் அல்ல. அது எட்டு பகுதிகளில் அதுவும் ஒன்று அவ்வளவுதான். உதாரணமாக காலோ, கையோ இல்லாத ஒருவர் யோக முறைகளை செய்ய முயற்சிப்பது கடினம். கடுமையான நோய் கொண்டவர் சில பகுதிகளை செய்ய இயலாது. வயது முதிர்ந்தவரால் சில யோக முறைகளை செய்ய இயலாது. பிற ஊனங்கள் கொண்டவர்கள் அந்த ஊனத்தினால் யோக முறைகளை மேற்கொள்ள இயலாது. அப்படியானால் அவர்களெல்லாம் ஆன்ம விடுதலை அடையவே முடியாதா? அஷ்டாங்க யோகத்தில் சில பகுதிகளை பயில இயலாமல் போனால் இந்த பிறப்பு வீணா? என்றால் இல்லை! அஷ்டாங்க யோகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நிலையை அடைந்தால் போதும். அதற்குத்தான் அவரவர்க்கு அஷ்டாங்க யோகத்தில் தகுந்த ஒரு நிலையை தெரிந்தெடுத்து கொடுத்து பயிற்றுவித்து ஆன்மீக வளர்ச்சி அடையச் செய்ய ஒரு குரு அவசியம் என்று வலியுறுத்தப் படுகிறது. ஒரு சிலருக்கு மிகக் கடுமையான உடல் பயிற்சி செய்தால்தான் புலன்களை அடக்க இயலும் – சிலருக்கு சுபாவமாகவே மிக எளிதாக அதிக உடற்பயிற்சிகள் இன்றி புலன்களை அடக்க வரும் – ஆகவே அந்தந்த மனிதருக்கு ஏற்ப அவரவருக்கான குரு ஒருவர் இருந்து வழிகாட்டுவது அவசியமாகிறது.
இதில் இன்னொரு ஆச்சரியமான கருத்தும் இருக்கிறது. அது சனாதன தருமம் நமக்கு காட்டும் பிறவிகளை கடந்த பார்வைதான். யோக வாசிஷ்டம் என்னும் நூல் இவ்வாறு சொல்கிறது, நல்ல கருமங்கள் – செயல்கள் செய்து வந்தால் அது ஒரு குணமாக ஆன்மாவில் படிந்து விடுகிறது. பாவ காரியங்கள் செய்து வந்தால் அதுவும் ஆன்மாவில் படிந்து விடுகிறது. அடுத்த அடுத்த பிறவிகளில் கர்மாவின் பலனால் இன்பமும் துன்பமும் ஏற்படுகிறது என்பது கருத்து. பிறவிகளைத் தாண்டி நம்முடன் கூட வருவது நமது குணங்களும் , புண்ணிய பாவங்களும் தான். கர்ம வாசனை என்று இதனை சொல்வர். ஒருவர் தொடர்ந்து காமத்தில் ஈடுபட்டே வந்திருந்தால் அடுத்த அடுத்த பிறவிகளில் அவரை காமத்தை நோக்கியே இட்டு செல்கிறது. யோகத்தில் ஈடுபட்டு வருபவருக்கு இயல்பாகவே அதை நோக்கி இட்டு செல்லும். உதாரணமாக, சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே சில திறமைகள் மிக அதிகமாக இருக்கும் – இதை ‘விட்ட குறை’ என்று பெரியோர் சொல்வர். அது இந்த பிறவிகள் கடந்த செயல்களின் வாசனை தான்.
இவ்வாறு ஒருவர் யோக பயிற்சிகள் செய்து சில காரணங்களால் இந்த பிறவியில் வெற்றி பெற முடியாமல் போனாலும் அடுத்தடுத்த பிறவிகளில் வெற்றி பெற முடியும். இது மரபணுவிலேயே பதியப்பட்டு விடுவது போல, ஆன்மாவின் மீது பதியப்பட்டு விடுகிறது என்பது சனாதன தருமத்தை சேர்ந்த சான்றோர்களின் வாக்கு. யோகத்தில் விடா முயற்சியுடன் ஈடுபடுவதற்கு இது ஒரு ஊக்கமாக ஆகிறது.

No comments:
Post a Comment