Sunday, November 22, 2015

அஸ்வத்தாமன்

குருக்ஷேத்திரப் போரின் இறுதிக் கட்டமான 18-ஆம் நாள். பீமனுக்கும் துரியோதனனுக்கும் நடந்த கதாயுத யுத்தத்தில், துரியோதனன் தொடை பிளக்கப்பட்டு, குற்றுயிராகக் களத்தில் வீழ்ந்து கிடந்தான். அதர்மத்தையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து, கொடுமைகளையே செய்து வந்த அவனுக்கு இப்படியரு கோர முடிவு ஏற்பட்டது. நல்ல மரணம் அவனைத் தழுவுவதில் தாமதம் நிகழ்ந்தது. குற்றுயிராக அவன் சித்ரவதைப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போதும்கூட, அவன் பூரணமாகத் தன் தவற்றை உணரவில்லை. இந்த நிலையில், யாருமின்றித் தனியனாகக் களத்தில் விடப்பட்ட துரியோதனனை, போரில் மடியாமல் இருந்த அஸ்வத்தாமன் சந்தித்தான்.
அஸ்வத்தாமன் கௌரவர்களின் குருவான துரோணாச்சார்யரின் மகன். பிறப்பால் அந்தணன். தந்தையைப்போல அஸ்திர சாஸ்திரத்தில் திறமை மிக்கவன். மந்திர- தந்திர சாஸ்திரங்களில் தந்தையையும் மிஞ்சியவன். பாண்டவர்களுக்குத் துரியோதனன் இழைத்த தீங்கையும் அநீதியையும் நன்கு உணர்ந்தவன்தான் அவன். ஆனாலும், செஞ்சோற்றுக்கடன் கழிக்க வேண்டி, துரியோதனனுக்கு ஆதரவாக அதர்மத்தின் பக்கம் நின்றான். தன் தந்தை துரோணரைக் கொன்ற காரணத்தால், அவன் பாண்டவர்களைப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருந்தான்.
தன் அருமை நண்பன், கௌரவச் சக்கரவர்த்தி கோரமாக யுத்தக்களத்தில் வீழ்ந்து கிடக்கும் காட்சியைக் கண்ட அஸ்வத்தாமனின் மனம் கொதித்தது. சிரத்தைக் கொய்யாமல், தொடையில் கதையால் அடித்து, அவனைச் சிறுகச் சிறுகச் சாகும்படி செய்த பாண்டவர்கள் மீது துரோண புத்திரன் அஸ்வத்தாமன் கடும் கோபம் கொண்டான். செஞ்சோற்றுக் கடனுக்காக, தான் என்ன செய்ய வேண்டும் என்று துரியோதனனிடம் கேட்டான் அஸ்வத்தாமன்.
‘எப்படியாவது பாண்டவர்களைப் பழி வாங்க வேண்டும்’ என்று அஸ்வத்தாமனிடம் முறையிட்டான் துரியோதனன். மரணத்தின் வாயிலில் நின்றுகொண்டு, நன்றிக்கடனாக தன்னிடம் வேண்டிக்கொள்ளும் கௌரவச் சக்கரவர்த்தியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதைத் தன் முக்கிய கடமையெனக் கருதினான் அஸ்வத்தாமன். ஏற்கெனவே, தன் தந்தையின் மரணத்துக்காகப் பாண்டவர்கள் மேல் வெறுப்புற்றிருந்தவனுக்கு, இப்போது அதற்கும் சேர்த்து பழிவாங்கும் எண்ணம் மேலோங்கியது. துரியோதனன் விரும்பிய வண்ணமே செய்வதாக வாக்களித்துவிட்டுப் புறப்பட்டான்.
இரவு நேரம்… எதிரிகளின் பாசறைக்குச் சமீபமான வனத்தின் ஓர் ஆலமரத்தடியில் வந்து அமர்ந்தான். பாண்டவர்களை எப்படி அழிப்பது என்று தீவிரமாகச் சிந்தித்தான். அந்த மரத்தின்மேல் இருந்த கூட்டில் காக்கைகள் உறங்கிக் கொண்டிருந்தன. அப்போது, ஒரு கோட்டான் அங்கே வந்து, உறங்கிக்கொண்டிருந்த காக்கைகளைக் கொத்தித் தின்றது. இரவில் கண் தெரியாமல், எதிரி யாரென்றும் அறியாமல், எதிர்க்கவும் முடியாமல், காக்கைகள் உயிர் விட்டன. அந்தக் கோட்டான், காக்கைகளைக் கொன்றதுபோல உறங்கிக்கொண்டிருக்கும் பாண்டவர்களையும், பாண்டவ புத்திரர்களையும் கொன்று, பாண்டவ வம்சத்தையே இரவோடு இரவாகப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டான் அஸ்வத்தாமன்.
பாண்டவர்களின் பாசறைக்குச் சென்று, உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களின் புத்திரர்களை ஒவ்வொருவராக வெட்டிச் சாய்த்தான். பாண்டவர்கள் மட்டும் அந்த நேரம் அங்கில்லாமல் போகவே, அவர்கள் உயிர் தப்பினார்கள். பொழுது புலரும் நேரத்தில் பாசறைக்குத் திரும்பிய பாண்டவர்கள், தங்கள் புத்திரர்கள் அனைவரும் கோரமாக மடிந்து கிடப்பதைக் கண்டனர். இது அஸ்வத்தாமன் வேலை என்றறிந்த ஐவரும் கொதித்து எழுந்தனர். வனத்தில் ஓடி, மறைந்திருந்த அஸ்வத்தாமனை தேடிச் சென்றனர். போருக்கு அறைகூவினர். நேருக்கு நேர் போர் செய்ய இயலாத அஸ்வத்தாமன், ஒரு தர்ப்பையை மந்திரித்து, அதனையே அஸ்திரமாக்கி, பாண்டவர்களின் சந்ததி அனைத்தையும் அழிக்கும்படி ஆணையிட்டு அதை ஏவினான்.
காலசர்ப்பம் போல விஷத்தைக் கக்கிக்கொண்டு புறப்பட்டது அந்த தர்ப்பை அஸ்திரம். பாண்டவர்கள் அதை எதிர்த்து அஸ்திரங்களைத் தொடுத்தனர். ஆனால், அந்த தர்பாஸ்திரம் தங்களைத் தாக்காமல் காத்துக்கொள்ள முடிந்ததே தவிர, அவர்களால் அந்தத் தர்ப்பையை அழிக்க முடியவில்லை. ஆதிபராசக்தியின் அழிக்கும் சக்தியை ஆதார மந்திரமாக்கி, தர்ப்பையை மந்திரித்து ஏவியிருந்தான் அஸ்வத்தாமன். அது சீறிச் சென்ற இடத்தில் நின்றிருந்த பாண்டவ சந்ததியினர் அனைவரும் மடிந்து வீழ்ந்தனர். முடிவாக மீதி இருந்தது ஒரே ஒரு பாண்டவ சந்ததிதான். அர்ஜுனனின் புதல்வன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்திலிருந்த சிசுதான் அது.
உத்தரை, விராட மன்னனின் புதல்வி. அபிமன்யுவின் மனைவி. அம்பிகையிடம் தீவிர பக்தி கொண்டவள். அபிமன்யுவின் திருமணத்தன்றே அவளுக்கு காத்யாயினி என்கிற துர்கையை உபாஸிக்கும் மந்திரத்தை உபதேசித்திருந்தான் கண்ணன். அவளும் தீவிரமாக தேவி உபாஸனை செய்து வந்தாள். தன் மங்கலச் சின்னங்கள் நீடித்திருக்க, அவள் அன்னை ஆதிபராசக்தியை தினமும் ஆராதித்தாள். ஆனால், பாவம்… அவள் கணவன் அபிமன்யு திருமணமான முதல் ஆண்டிலேயே யுத்தகளத்தில் பலியாகிவிட்டான். உத்தரை உடன்கட்டை ஏற முயன்றாள். ஆனால், அப்போது அவள் கர்ப்பவதியாக இருந்ததால், உடன்கட்டை ஏறுவது பாவம் என்று தடுத்து நிறுத்தி, அவளைக் காப்பாற்றிவிட்டான் கண்ணன்.
‘அன்னை ஆதிபராசக்தியை ஆராதித்து என்ன பயன்? உத்தரையின் மாங்கல்யத்துக்கே பங்கம் வந்துவிட்டதே?’ என்று மற்றவர்கள் கூறினார்கள். உத்தரை மனம் தளரவில்லை. தீவிர வைராக்கியத்துடனும் பக்தியுடனும் அன்னையைத் தொடர்ந்து ஆராதித்தாள். அதற்குப் பலன் கிடைக்கும் நேரம் வந்தது. கண்ணனின் ஆணைப்படி கர்ப்பரக்ஷ£ மந்திரத்தை ஜபித்து காத்யாயினியை பக்தியோடு பூஜித்து வந்தாள் உத்தரை.
அஸ்வத்தாமன் அனுப்பிய தர்பாஸ்திரத்தைக் கண்ணனே ஓர் ஆயுதத்தால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் ‘பாரதப் போரில் ஆயுதம் எடுக்கமாட்டேன்’ என்று கண்ணன் இரு தரப்பினருக்கும் வாக்களித்திருந்தான். அவன் வாக்குத் தவற விரும்பவில்லை. அதேநேரம்,  அவன் தர்மம் தவறவும் தயாராக இல்லை. உத்தரையின் கர்ப்பத்தில் வாழும் பாண்டவர்களின் சந்ததிக்கான சிசுவைக் காப்பாற்ற சங்கல்பித்தான் கண்ணன். உத்தரை அன்றாடம் உபாஸிக்கும் அன்னை காத்யாயினி வேறு யார்? அவள் கண்ணனின் சகோதரிதானே! தன் சகோதரி காத்யாயினிடமே அந்தப் பணியைத் தந்தான் கண்ணன்.
இதற்காகவே அவன் உத்தரைக்கு காத்யாயினியை உபாஸனை செய்யும்படி ஏற்கெனவே உபதேசித்திருந்தான்.
அஸ்வத்தாமன் அனுப்பிய அஸ்திரம் மரண தேவதையாக உத்தரையின் உடலை நெருங்கிய அதே விநாடி, அவள் கர்ப்பத்தில் இருந்த சிசுவை அங்கிருந்து அகற்றி, கண்ணன் திருக்கரத்தில் வைத்துவிட்டு, அந்த இடத்தில்தானே அமர்ந்துகொண்டாள் தேவி காத்யாயினி.
அஸ்வத்தாமனின் மந்திர தர்ப்பை, ஆதிபராசக்தியைத் தாக்கியதுமே அது சக்தியிழந்து பஸ்பமானது. அந்த விநாடியே தான் இருந்த இடத்தில் மீண்டும் உத்தரையின் சிசுவை கண்ணனிடமிருந்து வாங்கி வைத்துவிட்டு, வெளியில் வந்தாள் காத்யாயினி.
மாயவன் கண்ணன், மாயை எனும் அவன் சகோதரி துர்கை இருவரும் அனுக்ரஹித்து, பாண்டவ வம்சத்தைக் காத்து, உத்தரையின் கர்ப்பத்தில் உயிர்காத்துத் தந்த அந்த சிசுதான், பரீக்ஷித்து மஹாராஜன். அதனாலேயே இன்றும் பெண்கள் கர்ப்பத்திலுள்ள சிசுவைக் காத்து, நல்ல சந்தானம் பெறுவதற்கு அம்பிகையை உபாஸிக்கிறார்கள்.
அம்பிக்கைக்கு ‘கர்ப்ப ரக்ஷ£ம்பிகை’ அதாவது ‘கர்ப்பத்தில் உள்ள சிசுவைக் காப்பவள்’ என்ற பெயர் உண்டு.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்கருகாவூர் எனும் புண்ணிய ஸ்தலத்தில், ஸ்ரீமுல்லைவனநாதர் ஆலயம் உள்ளது. இங்கே உள்ள அம்பிகையின் திருநாமம் கர்ப்ப ரக்ஷ£ம்பிகை. இந்த ஸ்தலத்தை தரிசித்து, கர்ப்ப ரக்ஷ£ம்பிகையை வழிபட்டால் சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை.
‘காத்யாயனாய வித்மஹே –
கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்க்கா பிரச்சோதயாத்’
என்ற துர்கா காயத்ரியைப் பெண்கள் பக்தியோடு ஜபித்து வந்தால், கர்ப்பத்தில் உள்ள சிசு காப்பாற்றப்பட்டு, ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழி உண்டு என்கின்றன சாஸ்திரங்கள்.
கர்ப்ப ரக்ஷ£ம்பிகை ஸ்லோகம்:
ஹிமவத்யுத்தரே பார்ஸ்வே சுரதா நாம யக்ஷிணி
தஸ்யா ஸ்மரண மாத்ரேணா விசல்யா கர்பிணிபவேது
ஹே சங்கர ஸ்மரஹப் பிரமதாதி நாதரி மன்னாத சாம்பசசிசூட
ஹரதிரிசூலின் சம்போக சுக பிரசவ கிருதபவமே
தயாளோ ஹேமாதவி வநேஸ பாலயமாம் நமஸ்தே!

No comments:

Post a Comment